

உலகளவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு பசுபிக் நாடுகளில் கரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மகாராஷ்டிரம், மேகாலயம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு விகிதம் 5%க்கும் கூடுதலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கரோனா பரவல் குறித்த தற்போதைய நிலை கவலையளிப்பதாகக் கூறியுள்ள உலகச் சுகாதார அமைப்பு, கரோனா பாதிப்புள்ள நாடுகள் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக கரோனா பாதிப்பு விகிதம் 5%க்கு அதிகமாக இருந்தால் அது எச்சரிக்கை மணியாகவே மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. காரணம், கரோனா பாதிப்பு விகிதம் அதிகரிக்கும்போது தொற்றுப் பரவலும் அதிகமாக இருக்கும்.
முன்னதாக பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 40க்கும் அதிக மானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உலகின் மற்ற நாடுகளிலும் கரோனா தற்போது ஏறுமுகத்தில் உள்ளது, பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.