சீரற்ற மாதவிடாய் சுழற்சிக்கு என்ன தீர்வு?

சீரற்ற மாதவிடாய் சுழற்சிக்கு என்ன தீர்வு?

Published on

இன்றைய காலக் கட்டத்தில் பருவ மெய்திய பெண்கள் முதல் மாதவிடாய்ச் சுழற்சி முடிவை நெருங்கும் பெண்கள் வரை அனைவரையும் பாடாய்ப் படுத்தும் பிரச்சினை மாதவிடாய்க் கோளாறு. மாதவிடாய் என்பது அசுத்தம் என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் காலத்தில் மாதவிடாய்க் காலத்துக்கென்று உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் வாயிலாகத் தங்களைத் தயார்செய்துகொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போதைய பரபரப்பான காலக்கட்டத்தில் மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினையைச் சந்திக்கின்றனர். இதைச் சித்த மருத்துவத்தின் கோட்பாடான ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்பதற்கிணங்க வரும்முன் காப்பது குறித்தும் பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் அறிந்துகொள்வோம்.

மாதவிடாய்ச் சுழற்சி: ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடுதான் மாதவிடாய். பெண்கள் உடலில் முதல் 14 நாள்கள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். அடுத்த 14 நாள்கள் புரொஜஸ்டிரோன் ஹார்மோன் சுரக்கும். 28ஆம் நாளின் முடிவில் மாதவிடாய் ஏற்படும். ஆனால் அனைவரது உடல்வாகும் இந்தக் கணக்கோடு ஒத்துப்போகாது. 21 முதல் 35 நாள்களுக்குள் மாதவிடாய்ச் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும்.

இந்நாள்களுக்கு முன்னரோ பின்னரோ ஏற்பட்டால் அது பிரச்சினைக்குரிய விஷயம். அதேபோல் ஐந்து நாள்களுக்கு மேல் ரத்தப்போக்கு இருப்பதும், தொடர்ந்து வெகு நாள்களாகியும் வெகு மாதங்களாகியும் மாதவிடாய் வராமல் இருப்பதும், மாதவிடாய் காலத்தில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படுவதும், குறைந்த அளவு மாதவிடாய் அதாவது ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல் என இவை அனைத்துமே பிரச்சினைக் குரிய மாதவிடாய்ச் சுழற்சி என்று குறிப் பிடப்படுகின்றன.

காரணம்: அடிப்படையில் மாதவிடாய் சம்பந்த மான பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. பாலிஸிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOS), தைராய்டு சுரப்பி கோளாறு, ஹார்மோன் சரிவரச் சுரக்காமல் இருப்பது, மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் தறுவாய், மனஅழுத்தம், தவறான உணவுப் பழக்கம், உடல் பருமன், வாதம் - பித்தம் - கபம் சமநிலையின்மை போன்ற பல காரணங் களால் இக்கோளாறு ஏற்படுகிறது. இம்மாதிரி யான காரணங்கள் வராமல் தடுக்க குறிப்பாகப் பருவம் அடையப்போகும் பெண்களுக்கு மேற்சொன்ன கோளாறு வராமல் இருக்க சித்த மருத்துவத்தில் உணவை அடிப்படையாகக் கொண்டு தீர்வு கூறப்பட்டுள்ளது.

என்னென்ன உணவு வகைகள்? - ஒரு பெண் மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து ஐந்தாவது நாள் வரைக்கும் இயல்பாக மாதவிடாய் ஏற்படும். இக்காலத்தில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அதனால் பெண்களுக்கு இந்நாள்களில் ஓய்வு மிகவும் அவசியம். மேலும், இந்நாள்களில் தினமும் எள்ளுருண்டை ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொண்டால் மாதவிடாய், கோளாறின்றிச் சீராக ஏற்படும். எள் விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது.

இது மனித உடலின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போலவே செயல்படும். இந்த விதையில் வளமான துத்தநாகம் இருப்பதால், நம் உடலில் புரொஜஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும் உதவும். எள் விதைகள் ஹார்மோன் அளவை மேம்படுத்தவும், சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சினை உள்ளவர்களுக்கும்கூட மாதவிடாய்ச் சுழற்சி இயல்பாக ஏற்படுவதற்கு உதவும்.

அடுத்து ஆறாவது நாள் முதல் 14ஆவது நாள் வரை பெண்களுக்கு ஃபாலிகுலார் கட்டம் நிகழும். இக்கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு உயர்கிறது. இது பெண்களின் கருப்பையின் புறணி (Endometrium) வளரவும் தடிமனாக இருக்கவும் உதவும். இதில் நுண்ணறைத் தூண்டுதல் ஹார்மோன் (Follicle stimulating hormone) காணப்படும். இந்த ஹார்மோன் கருப்பையில் உள்ள நுண்ணறைகள் வளரக் காரணமாக இருக்கும். 10 முதல் 14 நாள்களில் வளரும் நுண்ணறைகளில் ஒன்று முழுமையாக முதிர்ந்த முட்டையை உருவாக்கும்.

இக்கட்டத்தில் இடுப்பு எலும்பு வலிமை பெறவும் இடுப்பு வலி ஏற்படாமல் இருக்கவும் ஆரோக்கியமான முதிர்ந்த முட்டையை உருவாக்கவும் தினமும் காலையில் உளுந்துக்களியைச் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பெண்கள் எலும்புகளுக்குப் போதுமான அளவு சுண்ணாம்புச் சத்து கிடைப்பதோடு, மாதவிடாயின்போது மாதந்தோறும் ஏற்படும் இடுப்பு வலி, முதுகு வலி, உடற்சோர்வு போன்றவை தவிர்க்கப்படும்.

இறுதியாக 15ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை லூடியல் கட்டம் (luteal phase). இது முதிர்ச்சி அடைந்த முட்டையை வெளிபடுத்தி கருக்குழாய்கள் (Fallopian tubes) வழியாகக் கருப்பைக்குள் பயணிக்க உதவும். இக்கட்டத்தில் புரொஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவு அதிகரித்துக் காணப்பட்டால் கரு உண்டாக வழிவகுக்கும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜஸ்டிரோன் ஹார்மோன் குறைந்தால் அடுத்த மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.

இக்காலக்கட்டத்தில் வெந்தயக் கஞ்சியைத் தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் இதில் காணப்படும் ஐஸோஃப்ளேவோன்கள் (Isoflavones) ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜஸ்டிரோன் ஹார்மோனின் அளவு இயல்பாகச் சுரக்கச் செய்யும். மேலும், மாதவிடாய்ச் சுழற்சியையும் உதிரப்போக்கையும் சீராக்கும்.

உடற்பயிற்சி உதவும்: மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு யோகாசனமும் உதவும். உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றத்திற்காக ஆரோக்கிய மான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, வாரத்தில் இரண்டு நாள்களுக்கு எண்ணெய்க் குளியல் ஆகியவை முக்கியம்.

மேற்கூறிய வழிமுறைகள் அனைத் தையும் பருவமெய்திய பெண்களும் மாதவிடாய்க் கோளாறினால் அவதிப் படும் பெண்களும் பின்பற்றலாம். மேலும், மாதவிடாய்ச் சுழற்சி இயல்பாக வரும் பெண்கள்கூட இவ்வழிமுறை களைப் பின்பற்றினால் உதிரப்போக்கு இயல்பாக இருப்பதோடு எதிர்காலத்தில் உண்டாகும் உணவாதிக்கச் செயலினால் ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகூடத் தோன்றாமல் ஆரோக்கி யமான வாழ்க்கையை வாழலாம்.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; dharshini874@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in