

எலான் மஸ்க் நடத்தும் நியூராலிங்க் நிறுவனம், எண்ணங்களைச் செயல்படுத்தும் வகையில் மூளையையும் கணினியையும் இணைக்கும் வகையிலான இணைப்பை (Brain - Computer Interface) உருவாக்கும் ‘சிப்’-ஐ மூளையில் பொருத்தும் சோதனையை 2016 முதல் செய்துவருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் குரங்குகளை வைத்து இந்தச் சோதனையை நியூராலிங்க் நிறுவனம் நடத்தியிருந்தது. தற்போது மனித மூளையில் இந்த ‘சிப்’பைப் பொருத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடத்த நியூராலிங்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிப் பயன்பாடு: ‘நியூராலிங்க் சிப்’, மூளையின் இயக்கப் புறணிப் (motor cortex) பகுதியில் பொருத்தப்பட்டு நரம்பியல் சிக்னல்களை அனுப்பும். இந்த சிப்பைப் பொருத்துவதன் மூலம் திறன்பேசிகள், கணினிகளைக் கட்டுப்படுத்த முடியும்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 30 வயதான நோலாண்ட் ஆர்பாக் என்பவருக்குக் கடந்த மார்ச் மாதம் ‘நியூராலிங்க் சிப்’ பொருத்தப்பட்டது. சிப் பொருத்தப்பட்ட பிறகு நோலாண்டின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நோலாண்ட், கணினி மூலம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது. மேலும், வீடியோ கேம்ஸ் விளையாடவும் மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பவும் நியூராலிங்க் சிப்பை நோலாண்ட் பயன்படுத்தினார்.
நோலாண்ட்டைத் தொடர்ந்து மேலும் ஒருவருக்கு ‘நியூராலிங்க் சிப்’ மூளையில் பொருத்தப்பட உள்ளது. இதற்கான அறுவைசிகிச்சை ஜூன் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்? - மூளை நரம்பு நோய்கள், பார்வை, பேச்சுத்திறன், கைகால் செயலிழப்பு ஏற்பட்ட வர்களுக்கும், நடுக்குவாத (பார்கின்சன்) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிப் எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கப்போவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பயிற்சி இதழாளர்