

என் அப்பாவுக்கு 5 வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு வந்து ‘ஸ்டென்ட்’ பொருத்தினார்கள். சென்ற மாதம்ஒருநாள் திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். இப்போது அவருக்கு ‘பேஸ்மேக்கர்’ பொருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை எதற்குப் பொருத்துகிறார்கள், டாக்டர்? ‘ஸ்டென்ட்’க்கும் ‘பேஸ்மேக்க’ருக்கும் என்ன வித்தியாசம்? - பொ. சிதம்பரம், கோயம்புத்தூர்.
இதயத் தசைகளுக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்தக்குழாய்களுக்கு ‘கரோனரி தமனிகள்’ (Coronary arteries) என்று பெயர். இந்தக் குழாய்களில் ரத்த உறைவு, கொலஸ்ட்ரால் அல்லது கால்சியம் அதிகமாகப் படிந்து அடைத்துக்கொள்ளும்போது, மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பை ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ (Balloon angioplasty) சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, மீண்டும் அந்த இடத்தில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க, ‘ஸ்டென்ட்’ (Stent) எனும் கம்பி வலையைப் பொருத்துகிறார்கள். இது மாரடைப்புக்கான சிகிச்சை.
‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) என்பது இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவி. உங்கள் அப்பாவுக்கு இதயத் துடிப்பில் பிரச்சினை இருக்கும்போல் தெரிகிறது. ஒன்று, மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இதயம் துடிக்கலாம் அல்லது மிகவும் அதிக எண்ணிக்கையில் துடிப்பு இருக்கலாம். அதனால்தான் அவருக்கு மயக்கம் வந்திருக்கிறது. இந்த மாதிரி பிரச்சினை உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பைச் சீராக்க மாத்திரை, மருந்துகள் பலன் தராது என்கிற நிலையில் ‘பேஸ்மேக்கர்’ கருவியை மார்புக்குள் பொருத்துவார்கள். அது நல்ல பலன் தரும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றன. பின் முதுகில் வலி உண்டாகிறது. சிறுநீரக நலச் சிறப்பு மருத்துவரைச் சந்தித்தேன். வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தார். சிறுநீரைப் பரிசோதித்தார். அவற்றைத் தங்கள் பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன். சிறுநீர்ப்பையில் தொற்று இருப்பதாகச் சொன்னார். எதற்கும் காசநோய்க்குரிய GeneXpert சிறுநீர்ப் பரிசோதனையையும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார். இந்த விஷயத்தில் உங்கள் ஆலோசனையை வேண்டுகிறேன், டாக்டர். - கே. கௌதமன், மின்னஞ்சலில்.
சிறுநீரக நலச் சிறப்பு மருத்துவர் சொன்னபடி உங்கள் சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று இருப்பதை நீங்கள் அனுப்பியிருந்த பரிசோதனை முடிவுகள் தெளிவு படுத்துகின்றன. அதற்குரிய சிகிச்சையை இப்போது பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, இரவு நேரத்தில் காய்ச்சல் வந்தாலோ, போகப்போக உடல் எடை குறைந்தாலோ காசநோய்க்குரிய GeneXpert சிறுநீர்ப் பரிசோதனையையும் செய்துகொள்ளுங்கள். தவறில்லை.
சமீப காலங்களில் திடீர் இதயச் செயலிழப்பு (Sudden Cardiac Arrest) ஏற்படுத்தும் மரணங்களை நிறையக் கேள்விப்படுகிறோம். அத்தகைய திடீர் மரணங்களைத் தடுக்க முடியுமா? - எஸ். தனசேகரன், நாச்சியார்பட்டி.
திடீர் இதயச் செயலிழப்புக்கு இதயத்தில் ஏற்படும் அசாதாரண மின் பகிர்வுதான் அடிப்படைக் காரணம். பொதுவாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இது அதிகம் என்றாலும், இப்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களால் எந்த வயதினருக்கும் வரலாம் என்பதே யதார்த்தம். இவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்சினைகள் இருக்கின்றன.
குறிப்பாக, முன்பாகவே மாரடைப்பு வந்திருக்கலாம். மாரடைப்பு வந்த பிறகு இதயச் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கலாம். இவை தவிர, மரபுக் காரணங்கள், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, இதயத்தின் உந்துவிசையில் பிரச்சினை, இதயத்தசை தடிமனாவது போன்ற காரணங்களும் இருக்கலாம்.
கடுமையான நெஞ்சுவலியும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதும் திடீர் இதயச் செயலிழப்பின் முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவ உதவி கிடைத்துவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இதயச் செயலிழப்பின்போது, இதயத்துடிப்பும் ரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன.
இதனால் சுவாசமும் நின்றுவிடுகிறது. இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க – ‘AED’ கருவி மூலம் மின்னதிர்ச்சி தரப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து ‘இதயச் சுவாச மறுஉயிர்ப்பு சிகிச்சை’ (Cardio Pulmonary Resuscitation - CPR) எனும் செயற்கைச் சுவாச முதலுதவி தரப்பட வேண்டும். இவர்கள் அந்நேரத்தில் மருத்துவமனையில் இருந்தால் CPR கொடுத்து காப்பாற்றிவிட முடியும்.
எனக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ராலும் ‘டிரைகிளிசரைடு’ அளவும் அதிகமாக உள்ளன. நான் ‘ரோஸ்வாஸ்’ - 10 மி.கி. மாத்திரையைச் சாப்பிட்டுவருகிறேன். சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது கொலஸ்ட்ரால் அளவு நார்மலுக்கு வந்துவிட்டது. டிரைகிளிசரைடு அளவு மட்டும் இன்னும் குறையவில்லை. என்ன செய்யலாம், டாக்டர்? (வாரத்தில் ஒரு நாள் கொஞ்சமாக மது குடிப்பேன்) - கோபிநாதன், காரைக்கால்.
மருத்துவர் யோசனைப்படி ‘Fenofibrate’ கலந்த கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு, உணவிலும் கவனம் செலுத்துங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். மதுவை மறக்க வேண்டும். புகைப்பழக்கம் கூடாது. மன அமைதி வேண்டும். நிம்மதியான உறக்கமும் அவசியம்.
எனக்குப் பித்தப்பையில் கற்கள் இருப்பதாக ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று ஒரு மருத்துவமனையில் சொன்னார்கள். கொழுப்பு உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பித்தப்பை கற்கள் கரைந்துவிடும் என்று என் வீட்டில் சொல்கிறார்கள். எது சரி? - சொர்ணவல்லி, மதுரை.
பித்தநீரில் இருக்கும் பித்த உப்புகள் (Bile salts) பித்தப்பையில் படிந்து கற்களாக உருவாகின்றன. பித்தப்பையில் கற்கள் உருவான பிறகு கொழுப்பு உணவு சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் கற்களைக் கரைக்க முடியாது. உணவில் கவனம் செலுத்தினால், இனிமேல் புதிய கற்கள் உருவாவதைத் தடுக்க முடியும். உடல் பருமன், நீரிழிவு நோய், பித்தப்பை அழற்சி, பித்தப்பை அடைப்பு, அடிக்கடி விரதம் இருப்பது போன்றவைதான் பித்தப்பை கற்களுக்குக் காரணங்களாகின்றன.
அதனால், உடல் பருமனைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக, வேக வேகமாகவும் உடலைக்குறைக்கக் கூடாது. அப்படிக்குறைத்தால், பித்தநீருக்கு எந்தவேலையும் இல்லாமல் கற்களாகப் படிந்துவிடும். மாவுச்சத்துள்ள உணவுவகைகளைக் குறைத்துக் கொண்டு, நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த வேண்டும். கொழுப்புள்ள உணவு வகைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பதில்லை. குறைத்துக்கொள்ளலாம்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com