முழங்காலைக் காக்கும் 10 நிமிடம்
ஓர் எலும்பியல் மருத்துவராக (Orthopaedician), 35 வயதுக்குப் பிறகு உள்ள நோயாளிகளிடம் அடிக்கடி கேள்விப்படும் புகார் முழங்கால் அசௌகரியம். வயதாகும்போது முழங்கால் வலி தவிர்க்க முடியாத ஒன்று என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், முழங்கால்களின் ஆரோக்கியம், அவற்றை எவ்வாறு பராமரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே.
35 வயதுக்குப் பிறகு, முழங்கால் மூட்டுகளைப் பாதுகாக்கும் குருத்தெலும்புகள் (cartilage) மெதுவாகத் தளர்ச்சி அடையத் தொடங்குகின்றன. அதேபோல், தொடர்ந்து பயிற்சி செய்யப்படாவிட்டால் அவற்றை ஆதரிக்கும் தசைகள் பலவீனமாகலாம்.
இதனால் பின்னர் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (Osteoarthritis) போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால், முழங்கால்களைப் பாதுகாக்க ஜிம்மில் பல மணி நேரம் செலவிட வேண்டியதில்லை. தினமும் சுலபமான 10 நிமிடப் பயிற்சி செய்தாலே முழங்கால்களைச் சுற்றியுள்ள தசைகள் வலுவாகும், உடல் நெகிழ்வுத்தன்மை மேம்படும், காயம் ஏற்படும் ஆபத்து குறையும்.
