செவ்வாய்க்குச் செல்வது ஏன் கடினம்? | வானம் நமக்கொரு போதிமரம் 9

செவ்வாய்க்குச் செல்வது ஏன் கடினம்? | வானம் நமக்கொரு போதிமரம் 9
Updated on
2 min read

விண்வெளிக்குப் பயணம் தொடங்கிய அரை நூற்றாண்டுக்குள், நாம் சூரியக் குடும்பத்தின் விளிம்பில் உள்ள புளூட்டோவைக் கடந்து விண்கலங்களை அனுப்பி உள்ளோம். நாசாவின் பெர்சவியரன்ஸ் ரோவர், சீனாவின் சூரோங் ரோவர் உள்ளிட்ட பல தானியங்கி விண்கலங்களைச் செவ்வாய்க் கோளில் தரை இறக்கி உள்ளோம்.

இந்தியாவின் சந்திரயான் உள்பட மொத்தம் 24 விண்கலங்கள் நிலவின் தரையில் இறங்கி உள்ளன. மேலும் 12 மனிதர்கள் இதுவரை நிலவில் கால்பதித்துள்ளனர். எனினும், செவ்வாய்க்கு மனிதர்கள் செல்வது இன்னும் எளிதான செயல் அல்ல. மனிதர்கள் செவ்வாய்க்குச் செல்வதற்கு மூன்று முக்கியமான சவால்கள் உள்ளன.

முதலாவது, மிக நீண்ட தொலைவு. சூரியனைச் சுற்றி வரும்போது, செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிக்கும், குறையும். குறைந்த தொலைவில் இருக்கும்போது, அண்மைய தூரம் சுமார் 55 மில்லியன் கிலோமீட்டர்கள். நிலவின் தொலைவோ வெறும் 38,4,000 கிலோமீட்டர்கள் மட்டுமே. அதாவது, நிலவைவிடச் சுமார் 180 மடங்கு அதிகத் தொலைவுக்குப் பயணம் செய்ய வேண்டும்.

பொறியாளர்கள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று, இத்தகைய இருவழிப் பயணத்திற்குத் தேவைப்படும் மிக அதிக அளவிலான எரிபொருள். அதிக எரிபொருள் என்பது அதிக எடை. அதிக எடை என்றால், அதை ஏந்திச் செல்ல மேலும் அதிக எரிபொருள் தேவைப்படும்.

செவ்வாய்க் கோளை விரைவாக அடைவது மட்டுமல்ல, பாதுகாப்பாகத் திரும்பி வருவதும் நோக்கமாக இருப்பதால், பயணத்திற்கு ஏற்ற உகந்த காலக்கட்டங்கள் உள்ளன. 365 நாள்களுக்கு ஒருமுறை பூமி சூரியனைச் சுற்றிவரும். அதேநேரம் செவ்வாய் 687 நாள்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.

எனவே, சுமார் 26 மாதங்களுக்கு ஒருமுறை, செவ்வாய் மற்றும் பூமி ஒப்பீட்டளவில் குறைந்த எரிபொருளில் பயணிக்க ஏற்ற நிலையில் அமைகின்றன. இதனை ‘உகந்த ஏவுதல் காலம்’ (launch window) என்பார்கள். கடந்த உகந்த ஏவுதல் காலம் 2024இல் இருந்தது; அடுத்தது 2026இல் வர உள்ளது.

ஜுலை-செப்டம்பர் 2020இல் நிகழ்ந்த உகந்த ஏவுதல் காலத்தில், மார்ஸ் ஹோப் ஆர்பிட்டர், தியான்வென்-1 ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் சூரோங் ரோவர், மார்ஸ் 2020 பெர்சவியரன்ஸ் ரோவர் மற்றும் இன்ஜெனுவிட்டி ஹெலிகாப்டர் ஆகிய மூன்று செவ்வாய் கலங்கள் ஏவப்பட்டன.

வரும் நவம்பர்-டிசம்பர் 2026இல் நிகழ இருக்கும் உகந்த ஏவுதல் காலத்தில், மார்ஷியன் மூன்ஸ் எக்ஸ்புளோரேஷன் (MMX) மற்றும் இம்பல்ஸ்/ரிலேட்டிவிட்டி மார்ஸ் லேண்டர் ஆகிய இரண்டு பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இரண்டாவது சவால், மிக நீண்ட பயணக் காலம். மிக விரைவான செவ்வாய் பயணம் குறைந்தது 7 முதல் 9 மாதங்கள் எடுக்கும்.

எனவே இருவழி மனிதப் பயணம் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள்வரை நீடிக்கும். இந்தப் பயணத்தில் 7 முதல் 9 மாதங்கள் செவ்வாய்க்குச் செல்லவும், அதே அளவு நேரம் திரும்பவும் எடுக்கும். மேலும், சுமார் 500 நாள்கள் செவ்வாய் மேற்பரப்பில் தங்கவும் திட்டமிடுவார்கள். அதாவது, மொத்த இருவழிப் பயணம் சுமார் 34 மாதங்கள் நீளும்.

பூமியின் ஈர்ப்பு விசை, வளிமண்டலத்தில் வாழப் பழகியுள்ள மனிதர்கள், பல மாதங்கள் குறைந்த ஈர்ப்பு விசை உள்ள, குறுகிய, மூடிய விண்கலங்களில் எவ்வாறு தங்கியிருப்பார்கள் என்பது ஒரு பெரும் சவால். சுமார் மூன்று ஆண்டுகள் வீடு திரும்ப இயலாத நிலையில், பயணக்குழுவில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் யாரையும் சந்திக்க முடியாது. எடுத்துச் செல்லும் உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

நீளும் தொலைவு காரணமாக, பூமியோடு தகவல் தொடர்புகொள்வதும் எளிதல்ல. இந்தச் சூழலில் பயணக்குழுவின் மனநிலை எப்படி மாறும், தாக்குப்பிடிக்குமா என்பது எல்லாம் ஆய்வுக்குரிய புதிராக உள்ளது. செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைவது பாதிப் போராட்டம் மட்டுமே.

மீதியுள்ள சவால், செவ்வாயில் பாதுகாப்பாகத் தரையிறங்குவது. அதன் தரையில் மென்மையாக இறங்குவது மூன்றாவது பெரும் சவால். பூமிக்கு அடர்த்தியான வளிமண்டலம் உள்ளது, எனவே விண்கலங்கள் மீண்டும் பூமிக்குள் நுழையும்போது, வேகத்தைக் குறைக்க பாராசூட்டைப் பயன்படுத்த முடியும்.

சந்திரனுக்கு வளிமண்டலம் இல்லை, எனவே பாராசூட் பயனில்லை. ஆனால், சந்திரனின் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால், விண்கலத்தின் திசைக்கு எதிர்த்திசையில் ராக்கெட்டுகளை இயக்கி வேகத்தைக் குறைக்கும் ‘ரெட்ரோ-ராக்கெட்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். செவ்வாய் இரு வகையிலும் சிக்கலான நிலையில் உள்ளது.

அதற்கு வளிமண்டலம் உண்டு, ஆனால் பாராசூட்டைக் கொண்டு மட்டும் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்குப் போதுமான அடர்த்தி இல்லை. அதேநேரம், சந்திரனைவிட அதிக ஈர்ப்பு விசை இருப்பதால், ரெட்ரோ-ராக்கெட்டுகளை மட்டும் பயன்படுத்துவதும் எளிதல்ல.

எனவே, பாராசூட், ரெட்ரோ-ராக்கெட்டுகள் இரண்டின் கலவையையும் பயன்படுத்த வேண்டியுள்ளது, இது மிகவும் சிக்கலான, துல்லியம் தேவைப்படும் நுட்பம். இந்த நுட்பம் இதுவரை பரிசோதனை செய்யப்படவில்லை.

(அறிவோம்)

- tvv123@gmail.com

செவ்வாய்க்குச் செல்வது ஏன் கடினம்? | வானம் நமக்கொரு போதிமரம் 9
பூமியைவிட நிலவில் ஏன் ஈர்ப்புவிசை குறைவு? | வானம் நமக்கொரு போதிமரம் 8

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in