

மேலே எறியப்பட்ட கல் கீழே விழுகிறது. ஆனால், தீயும் புகையும் மேல்நோக்கிச் செல்கின்றன. கல் ஏன் கீழே விழுகிறது, நெருப்பு ஏன் மேலே செல்கிறது?
இந்த அனுபவ அடிப்படையில்தான் அந்தக் காலத்தில் ‘இயல்பு இயக்கம்’ என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. நெருப்பின் இடம் சூரியன். எனவே இயல்பாக நெருப்பும் வெப்பமும் சூரியனை நோக்கி மேலே செல்கின்றன. நீரின் இடம் பாதாளம்.
எனவே, நீர் பள்ளமான இடம் நோக்கி ஓடுகிறது. கல், மண் போன்றவற்றின் இடம் நிலம், அதாவது பூமி. எனவேதான் கல்லை மேலே எறிந்தாலும், அது கீழே விழுகிறது. காற்றின் இடம் நிலத்துக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள பகுதி. எனவேதான் காற்று மேலே எழும்புகிறது. இதுவே அந்தக் காலத்தில் நிலவிய கருதுகோளாக இருந்தது.
இந்தியாவில் ஆரியபடர், கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் வானியல் சான்றுகளைக் கொண்டு பூமியின் வடிவம் கோளம் என்கிற முடிவுக்கு வந்தனர். பந்து போன்ற வடிவம் என்றால், அதன் ‘கீழ்ப்’ பகுதியில் உள்ளவர்கள் கீழே விழுந்துவிட மாட்டார்களா என்கிற கேள்வி எழுந்தது.
இந்தக் கட்டத்தில்தான் ‘குருத்துவாகர்ஷணம்’ (எடை மிகுந்த கனமான பொருள்களைக் கவரும் இயல்பைப் பூமி கொண்டுள்ளது.) எனும் கருத்து உருவானது. இதுவே ஈர்ப்புவிசை எனும் கருத்து உருவாகக் காரணமான முதல் விதை. பண்டைய கிரேக்கத்தில் இதே போன்ற கருத்தை ‘கிராவிட்டி’ என்று அழைத்தனர்.
வெப்பம் என்பது சூரியனுக்கும் நெருப்புக்கும் உள்ள பண்பு. நிலவின் பண்பு குளிர்ச்சி. நீரின் பண்பு பள்ளம் நோக்கி ஓடுவது. கடினத்தன்மை கல்லின் இயல்பு. அதுபோலவே, கனமான பொருள்களைத் தன்னை நோக்கிக் கவர்ந்து இழுப்பது பூமியின் இயல்பு எனச் ‘சித்தாந்த சிரோமணி’ எனும் நூலில் இரண்டாம் பாஸ்கரர் விவரித்துள்ளார். இரும்பைக் காந்தம் கவர்வதுபோல பூமி கல்லைக் கவர்ந்து இழுக்கிறது என விளக்கம் அளித்தார்.
ஆனால், இந்தக் கருத்துக்கு ஞானராஜா எனும் வானியல் அறிஞர் தனது ‘சித்தாந்த சுந்தரம்’ எனும் நூலில் மறுப்புத் தெரிவித்தார். கல் போன்ற கனமான பொருளையும், இறகு போன்ற லகுவான பொருளையும் கவர்ச்சி ஆற்றல் கொண்டு பூமி இழுக்கிறது என்றால், இறகுதானே முடுக்கம் பெற்று அதிவேகமாகக் கீழே விழ வேண்டும்.
ஆனால், கல்தானே வேகமாகக் கீழே விழுகிறது. எனவே, இரண்டாம் பாஸ்கரரின் குருத்துவாகர்ஷணத் தத்துவம் தவறு என ஞானராஜா மறுப்புத் தெரிவித்தார். கலிலியோ கலிலி சாய்தளச் சோதனைகளின் மூலம், ஒரு பொருளின் எடை எதுவாக இருந்தாலும், அது பெறும் ஈர்ப்பு முடுக்கம் ஒன்றுதான் என நிறுவினார். காற்றின் உராய்வுத் தடையே இறகின் வீழ்ச்சி வேகத்தைக் குறைத்து, ஈர்ப்பு விசையின் விளைவை மறைக்கிறது.
ஒரு காகிதத்தை எடுத்து, அதை மேலே பிடித்தவாறு நழுவ விடுங்கள்; அது கீழே விழ எடுக்கும் நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். பிறகு, அதே காகிதத்தைக் கசக்கிச் சிறிய பந்து போன்று மாற்றுங்கள். எடையில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது அந்தக் கசங்கிய காகிதப் பந்து விரைவாகக் கீழே விழுவதைக் காணலாம்.
ஈர்ப்புவிசைப் புலத்தில் எல்லாப் பொருள்களும் ஒரே முடுக்கத்துடனேயே விழும் என்கிற கலிலியோவின் கண்டறிதல், ஞானராஜா போன்றவர்களின் மறுப்புக்கு அறிவியல் விளக்கத்தை அளித்து, ஈர்ப்புவிசை குறித்த நமது அறிவை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.
இதன் அடுத்தகட்டமாக நியூட்டனின் ‘ஈர்ப்புவிசை’ கருத்து உருவானது. அதுவரை, காந்தத்திற்கு இருக்கும் காந்தத் தன்மைபோல, பூமிக்கு மட்டும் சிறப்பாக உள்ள தன்மைதான் ஈர்ப்புவிசை எனக் கருதப்பட்டது; அதனால்தான் அதை ‘புவியீர்ப்புவிசை’ என்று அழைத்தனர். நிறை கொண்ட எல்லாப் பொருள்களுக்கும், அதன் நிறையின் அளவுக்கேற்ப, ‘ஈர்ப்புவிசை’ அமையும் என்பதே நியூட்டனின் ஈர்ப்பு விதி.
இதன் பொருள் பூமிக்கு மட்டுமல்ல, நிலவுக்கும் ஈர்ப்பு விசை உண்டு என்பதே. நிலவுக்கு மட்டுமல்ல, எல்லாக் கோள்களுக்கும் கல், மண்துகள், மரம், செடி ஆப்பிள் என நிறை கொண்ட எல்லாப் பொருள்களுக்கும் ‘ஈர்ப்புவிசை’ உண்டு. ஆனால், அந்த விசையின் அளவு அதன் நிறையைப் பொறுத்து அமையும்.
பூமி ஆப்பிளைத் தன்னை நோக்கி இழுக்கும்; அதே விசையின்படியே ஆப்பிளும் பூமியைத் தன்னை நோக்கி இழுக்கும். சம விசையால் தள்ளப்படும்போது, எடை குறைவான ஆப்பிள் அதிக முடுக்கம் பெறும். ஆனால், ஆப்பிளைவிட சுமார் பத்தாயிரம் கோடி கோடி கோடி மடங்கு மடங்கு அதிக நிறை பூமிக்கு உள்ளது.
எனவே, ஆப்பிளின் ஈர்ப்புவிசையின் காரணமாக பூமி பெறும் முடுக்கம், ஆப்பிளின் முடுக்கத்தைவிடப் பத்தாயிரம் கோடி கோடி கோடி மடங்கு குறைவாக இருக்கும். அதனால்தான் ஆப்பிள் பூமியை நோக்கி விழுகிறது என்று விளக்கம் அளித்தார் நியூட்டன்.
நிலவின் ஈர்ப்புவிசை அதன் நிறைக்கேற்ப அமையும். பூமியின் நிறையில் வெறும் 1.2% பங்கு மட்டுமே நிலவின் நிறை; அதாவது பூமியின் நிறையைவிட 81 மடங்கு குறைவு. எனவே, பூமியின் மேற்பரப்பில் ஈர்ப்புவிசையின் முடுக்கம் விநாடிக்கு சதுர விநாடிக்கு சுமார் 9.8 மீட்டர் என்றால், நிலவின் மேற்பரப்பில் அது விநாடிக்கு சதுர விநாடிக்கு சுமார் 1.62 மீட்டர் மட்டுமே. இதனால்தான் பூமியைவிட நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக உள்ளது.
(அறிவோம்)
- tvv123@gmail.com