

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் வடிவம் தட்டையானது என்றே மக்கள் கருதினர். இன்று விண்கலங்கள் எடுக்கும் படங்களைக் கொண்டு, பூமியின் வடிவம் பந்து வடிவத்துக்கு ஒப்பானது எனக் கூறிவிடலாம்.
ஆனால், சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரியபடர் (பொ.ஆ. 476 -550), தட்டையான பூமி எனும் புராணக் கருத்தை மறுத்து, கோளம் வடிவம் என்றார். பூமியின் மேலே நின்றுகொண்டே, பூமியின் வடிவத்தை அவர் எவ்வாறு கண்டறிந்தார்?
நம் கண்முன்னே காணப்படும் நிலப்பரப்பு ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் நீரின் மட்டம் தட்டையாக உள்ளது. எனவே, பூமி அடிப்படையில் தட்டையானது, அதில் இங்கும் அங்குமுள்ள ஏற்ற இறக்கங்களின் காரணமாக மலையும் மடுவும் ஏற்படுகின்றன என்று கருதினர்.
கிரேக்கம் போன்ற நாடுகளில், தட்டையான பூமியின் கிழக்குப் பக்கத்தில் சூரியன் உதிக்கிறது, பின்னர் தலைக்கு மேலே பயணம் செய்து மேற்கே மறைந்துவிடுகிறது என்று நம்பினர். வட்ட வடிவிலான தட்டு போலுள்ள பூமியின் மேல், ஒரு சட்டியைக் கவிழ்த்தது போல வானம் உள்ளது என்றும் கருதினர்.
இந்தியப் புராணங்களின்படி, வட்ட வடிவத் தட்டையான பூமிக்கு நடுவே மிகப் பெரிய மேரு மலை உள்ளது. அந்த மலையைச் சுற்றிதான் சூரியன் வருகிறது. மலையின் ஒரு பக்கத்தில் சூரியன் இருந்தால் அந்தப் பகுதியில் பகலாகவும், மறுபக்கத்தில் நிழல் படிவதால் இரவாகவும் இருக்கும் என்றும் கருதினர்.
இரவு வானில் வடதுருவ விண்மீன் உள்ளது. இந்தியாவில் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீர் வரை சென்றாலும், இந்த விண்மீன் வடக்குத் திசையில்தான் காணப்படும். பிற விண்மீன்கள் எல்லாம் கிழக்கில் உதயமாகி, சூரியனைப் போல வானில் உயர்ந்து, பின்னர் மேற்கில் மறையும். ஆனால், இந்த விண்மீன் மட்டும், வண்டிச் சக்கரத்தின் அச்சு போல, வானில் அதே இடத்தில் நிலையாகக் காட்சியளிக்கும்.
இந்த விண்மீனை உற்று நோக்கியபோது சில செய்திகள் தெரியவந்தன. தெற்கே உள்ள கன்னியாகுமரி முனையிலிருந்து இந்த விண்மீனைப் பார்த்தால், வடக்குத் திசையில் அடிவானத்திலிருந்து சுமார் 8 டிகிரி உயரத்தில் தெரியும். இதே விண்மீனைக் கன்னியாகுமரிக்கு வடக்கே உள்ள உஜ்ஜைனியில் இருந்து பார்த்தால், வடக்குத் திசையில் சுமார் 23.18 டிகிரி உயரத்தில் காணப்படும்.
ஆச்சரியம் என்னவென்றால், கன்னியாகுமரிக்கு நேர் கிழக்கே உள்ள இலங்கையின் அனுராதபுரம் சென்று பார்த்தாலும் எந்த மாற்றமும் இல்லை; அதே 8 டிகிரி உயரத்திலேயே வடதுருவ விண்மீன் தென்படுகிறது. கன்னியாகுமரிக்கு நேர் மேற்கே லட்சத்தீவுகளின் மினிகாய் தீவுக்குச் சென்றாலும் மாற்றமில்லை; அதே 8 டிகிரி உயரத்தில்தான் தெரியும்.
எனினும், கன்னியாகுமரிக்கு நேர் தெற்கே கடலுக்குள் சென்றால் வடதுருவ விண்மீனின் கோண உயரம் குறைகிறது. இவற்றைத் தொகுத்துப் பார்த்தால், ஓர் இடத்திலிருந்து நேர் கிழக்கு அல்லது மேற்கு நோக்கிச் சென்றால், வடதுருவ விண்மீனின் நிலையில் மாற்றம் இல்லை. வடக்கு நோக்கிச் சென்றால் அதன் கோண உயரம் கூடுகிறது; தெற்கு நோக்கிச் சென்றால் கோண உயரம் குறைகிறது.
பூமி தட்டையானது என்றால், இந்நிகழ்வு சாத்தியமில்லை. பந்து போல பூமி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த உற்றுநோக்கலில் கிடைத்த தரவுகளை வைத்துதான் ஆரியபடர், பூமியின் வடிவம் கோளம் என்கிற முடிவுக்கு வந்தார். அதுமட்டுமல்ல, 9.17 யோசனை தொலைவு நேர் வடக்கே சென்றால், வடதுருவ விண்மீனின் கோண உயரம் 1 டிகிரி உயர்கிறது என அளவீடு செய்து கண்டறிந்தார்.
மைல், கிலோமீட்டர் போல, பண்டைய இந்தியாவில் பின்பற்றப்பட்ட நீட்டல் அளவே ‘யோசனை’ அலகு. சராசரி மனிதனின் 8 ஆயிரம் மடங்கு உயரம்தான் ஒரு யோசனை என ஆரியபடர் பதிவுசெய்திருக்கிறார். கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில், வேறொரு வழியில் பூமியின் வடிவத்தை அடையாளம் கண்டார்.
துறை முகத்தை விட்டு வெகுதொலைவு செல்லும் கப்பல்களைப் பார்த்தால், தொலைவு செல்லச்செல்ல அதன் உருவம் சிறிதாவது மட்டுமன்றி, அதன் அடிப்பகுதியில் இருந்து, மேல் பகுதிவரை மெல்லமெல்ல காட்சியிலிருந்து மறைந்தது; தொடுவானத்தை அடைந்த பின்னர் முழுக் கப்பலும் மறைந்துவிட்டது.
பூமி தட்டையானது என்றால், கடலில் தொலைவாகச் செல்லும் கப்பலின் உருவம் சிறிதாக இருக்கும். ஆனால், கப்பலின் அடி முதல் மேல் வரை தெரியும். பூமி கோள வடிவத்தில் இருந்தால்தான், கப்பல் தொலைவு செல்லச் செல்ல, முதலில் அதன் அடிப்பகுதி காட்சியிலிருந்து மறையும்; பின்னர் மெல்லமெல்ல நடுப்பகுதியும் மறையும்; இறுதியில் அதன் உச்சிப் பகுதியும் மறைந்து, முழுக் கப்பலும் கண்ணுக்குத் தெரியாமல் போகும். இந்த நிகழ்வைக் கொண்டே பூமியின் வடிவம் கோளம் என்று அரிஸ்டாட்டில், முடிவுசெய்தார்.
(அறிவோம்)
- tvv123@gmail.com