கிரகணத்தின்போது நிலவு சிவப்பாகத் தெரிவது ஏன்? | வானம் நமக்கொரு போதிமரம் 14
முழுச் சந்திர கிரகணத்தின்போது, நிலவு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தோன்றுவது அற்புதமான காட்சி! இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது, பூமியின் அமைப்பு, அது ஏற்படுத்தும் நிழலின் தன்மை ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரு நேர்க்கோட்டில் வரிசையாக அமையும்போதுதான் முழுச் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது, பூமி நேரடியாகச் சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே செல்கிறது, பூமியின் நிழல் நிலவின் மீது படர்கிறது.
நாம் வாழும் இந்தப் பூமி ஒரு திடமான கோளம் மட்டுமல்ல; இந்தத் திடமான பூமியைச் சுற்றி, ஓரளவு ஒளி ஊடுருவக்கூடிய வளிமண்டலப் படலம் போர்வைபோல பூமியைச் சுற்றியுள்ளது.
எனவே, பூமியின் திடப்பகுதி நிலவின் மீது இருண்ட நிழலை உருவாக்கும்போது, அந்தத் திடப்பகுதியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் வழியாக ஒளி கசிந்து செல்ல முடிகிறது. இந்தக் கசியும் ஒளியின் ஒரு பகுதிதான் நிலவின் மீது படரும் வாய்ப்பைப் பெறுகிறது.
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து இன்னோர் ஊடகத்திற்குச் செல்லும்போது வளைகிறது என்பது நமக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக, தண்ணீரிலிருந்து காற்றுக்குள் செல்லும்போது ஒளி வளைவதுபோல, பூமியின் வளிமண்டலத்தில் இருந்து விண்வெளிக்குள் செல்லும்போதும் ஒளிக்கதிர்கள் வளைந்து, பூமியின் நிழல் செல்லும் திசை நோக்கிச் செலுத்தப்படுகின்றன.
சூரிய ஒளி என்பது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு (VIBGYOR) என அனைத்து வண்ணங்களின் கலவை. இந்தச் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் ஏற்படுகிறது. சூரிய ஒளிக்கலவையில் உள்ள வண்ணங்கள் சிதறடிக்கப்படுகின்றன.
இந்த வண்ணங்களில், நீல நிற ஒளியானது சிவப்பு நிற ஒளியைவிட அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது. இதனால்தான் பகலில் நாம் வானத்தை நீல நிறத்தில் பார்க்கிறோம். ஆனால், சிவப்பு நிற ஒளி மிகக் குறைவாகச் சிதறடிக்கப்படுவதால், அது வளிமண்டலத்தின் வழியே நேரடியாகக் கடந்து செல்லும் தன்மை கொண்டது.
இதன் விளைவாக, பூமியின் திடப்பகுதியின் ஓரங்களைச் சூழ்ந்துள்ள வளிமண்டலம் வழியாக, சிவப்பு நிற ஒளியானது பிற நிறங்களைவிட அதிக அளவில் வெளியேற்றப்பட்டு, பூமியின் திட நிழலின் திசையிலேயே பயணிக்கிறது.
கிரகணம் நடைபெறும்போது மட்டுமல்ல, மற்ற எல்லாக் காலங்களிலும் இவ்வாறு சிவப்பு நிற ஒளி தூக்கலாக பூமியின் விளிம்பு வளிமண்டலம் வழியே கசிந்து, பூமியின் நிழலின் ஊடே பரவிக்கொண்டிருக்கும்.
எனவே, முழுச் சந்திர கிரகணத்தின்போது, நிலவு முழுவதுமாகப் பூமியின் நிழலில் மூழ்கியிருக்கும் தருணத்தில், இந்தச் சிவப்பு ஒளியே நிலவின் மீது விழுகிறது. இதன் காரணமாகவே நிலவு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தின் பல சாயல்களில் காணப்படுகிறது.
ஆனால், பூமியின் நிழலில் பகுதி நிலவு மட்டும் மறைக்கப்படும் போது, அந்தப் பகுதி சிவப்பாகத் தென்படுவதில்லை. இது போன்ற பகுதி சந்திர கிரகணத்தின்போது, நிலவின் ஒரு பகுதியில் நேரடிச் சூரிய ஒளி விழுந்துகொண்டிருக்கும்.
அந்தப் பகுதி மிகவும் பிரகாசமாக இருப்பதால், பூமியின் நிழலில் உள்ள நிலவு பகுதியின் சிவப்பு நிறம் நமக்குத் புலனாகாது. இதனால்தான், ‘பிளட் மூன்' அல்லது ’சிவப்பு நிலவு’ என்கிற அற்புதக் காட்சி, முழுச் சந்திர கிரகணத்தின்போது மட்டுமே நமக்குக் காணக் கிடைக்கிறது.
(அறிவோம்)
- tvv123@gmail.com
