ஒளியாண்டு என்றால் என்ன? | வானம் நமக்கொரு போதிமரம் 13

ஒளியாண்டு என்றால் என்ன? | வானம் நமக்கொரு போதிமரம் 13
Updated on
2 min read

‘ஆண்டு’ என்று இருப்பதால், ‘ஒளியாண்டு’ என்பது காலத்தை அளக்கும் அலகு எனப் பலரும் பிழையாகக் கருதிவிடுகின்றனர். உண்மையில் இது ஒரு நீட்டல் அளவையின் அலகு. வானவியலில், விண்மீன்களுக்கும் விண்மீன் திரள்களுக்கும் இடையேயான மாபெரும் தொலைவை அளவிட இந்த அலகு பயன்படுத்தப்படுகிறது.

ஒருவர் உரக்கக் கூப்பிட்டால், அந்தக் குரல் எவ்வளவு தொலைவுக்குக் கேட்குமோ, அந்தத் தொலைவை ‘கூப்பிடு தூரம்’ என்கிறோம். அதேபோல, ஒரு நிமிடத்தில் சராசரியாக 80 மீ. தொலைவு நடக்க முடியும் என்றால், 5 நிமிட நடை சுமார் 400 மீ. இங்கே, ஒரு நபரின் சராசரி நடை வேகத்தை அடிப்படையாகக் கொண்டு தொலைவை அளக்கிறோம்.

இதே வழிமுறையில், ஒளியின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு தொலைவை அளக்கும் அலகுதான் ‘ஒளியாண்டு’. நாம் காலத்தை நொடி என்கிற அலகில் அளப்பதுபோல, ஒளியாண்டு தொலைவை அளக்கிறது. பள்ளியில் ஒவ்வொரு வகுப்பும் 2,700 நொடிகள் என்று சொல்வதில்லை; ‘45 நிமிடங்கள்’ என்கிறோம்.

அதேபோல, வான வியலில் விண்மீன்களுக்கு இடையேயான தொலைவை கிலோ மீட்டர்களில் சொல்வது பொருத்தமற்றது என்பதால், ‘ஒளியாண்டு’ என்கிற அலகு பயன்படுகிறது. விண்மீன்களுக்கு இடையேயான தொலைவை ஒளியாண்டு அலகில் அளவிட முதன்முதலில் முயன்றவர் ஃபிரீட்ரிக் பெசல் என்கிற வானியலாளர்.

சூரியனுக்கு அடுத்ததாக மற்றொரு விண்மீனின் தொலைவை அளவிட்ட முதல் ஆய்வாளர் இவரே. 1838இல், 61 சிக்னி என்கிற விண்மீனின் தொலைவை ‘ஹீலியோமீட்டர்’ எனும் கருவி மூலம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்படி, அந்த விண்மீனின் இடமாற்றத் தோற்றப் பிழை 0.314 ஆர்க் விநாடிகள் எனக் கண்டறிந்தார்.

இதை அடிப்படையாகக் கொண்டு, 61 சிக்னி விண்மீன் தோராயமாக 99 லட்சம் கோடி கி.மீ. தொலைவில் உள்ளது எனக் கணக்கிட்டார். இந்தத் தொலைவை எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க வேறு வழிமுறைகளைத் தேடினார் பெசல். பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான சராசரி தொலைவு 15 கோடி கி.மீ. இந்தத் தொலைவு ‘வானியல் அலகு’ என்று அழைக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், 61 சிக்னி விண்மீனின் தொலைவு, பூமி-சூரியன் தொலைவைவிட 6,60,000 மடங்கு அதிகம் என்றும், பூமியிலிருந்து புறப்படும் ஒளி அந்த விண்மீனை அடைய சுமார் 10.3 ஆண்டுகள் எடுக்கும் என்றும் தனது நூலில் குறிப்பிட்டார். இதன் விளைவாக, வானவியலில் விண்மீன்களுக்கு இடையேயான தொலைவை, ஒளி செல்ல எடுத்துக்கொள்ளும் காலத்தின் அடிப்படையில், அதாவது ஒளியாண்டு அலகில் அளக்கத் தொடங்கினர்.

வெற்றிடத்தில் ஒளி ஒரு நொடியில் சுமார் 3 லட்சம் கி.மீ. (2,99,792 கிமீ) தொலைவு கடக்கிறது. ‘ஒரு நிமிட நடை’ சராசரியாக 80 மீ. என வரையறுப்பதைப்போல, ‘ஓர் ஒளி நொடி’ என்பது ஒரு நொடியில் ஒளி கடக்கும் தொலைவு, அதாவது சுமார் 3 லட்சம் கி.மீ. என வரையறுக்கலாம்.

அடுத்து, ‘ஓர் ஒளி நிமிடம்’ என்பது 60 ஒளி நொடிகள். எனவே, இது 60 x 3 லட்சம் கி.மீ. = 180 லட்சம் கி.மீ. தொலைவு. 1 மணி நேரம் 60 நிமிடங்கள் ஆகையால், ‘ஓர் ஒளி மணி’ என்பது 60 x 180 லட்சம் கி.மீ. = 10,800 லட்சம் கி.மீ.. ஒரு நாள் 24 மணி நேரம். எனவே, ‘ஓர் ஒளி நாள்’ 24 x 10,800 லட்சம் கி.மீ. = 2,59,200 லட்சம் கி.மீ. ஓர் ஆண்டில் 365 நாள்கள் எனக் கொண்டால், ‘ஓர் ஒளியாண்டு’ 365 x 2,59,200 லட்சம் கி.மீ. = 9,46,08,000 லட்சம் கி.மீ. இருப்பினும், சர்வதேச வானியல் ஒன்றியம் வழங்கிய வரையறைப்படி, ஓர் ஆண்டு 365.25 நாள்கள் எனவும், ஒரு நொடியில் வெற்றிடத்தில் ஒளி கடக்கும் தொலைவு 2,99,792,458 மீட்டர் எனவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படையில், ஓர் ஒளியாண்டு என்பது துல்லியமாக 9,460,730,472,580,800 மீட்டர் அல்லது தோராயமாக 9.5 டிரில்லியன் கி.மீ. (950 லட்சம் கோடி கி.மீ).

சூரியனுக்கு அடுத்துள்ள அண்டை விண்மீனான பிராக்சிமா சென்டாரி 4.24 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது, அந்த விண்மீனிலிருந்து வரும் ஒளி நம்மை அடைய 4.24 ஒளியாண்டுகள் எடுக்கிறது. அதற்கடுத்து, ஆல்பா சென்டாரி 4.4 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இரவு வானில் மிகப் பிரகாசமாகத் தோன்றும் சைரியஸ் விண்மீன் 8.6 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

(அறிவோம்)

- tvv123@gmail.com

ஒளியாண்டு என்றால் என்ன? | வானம் நமக்கொரு போதிமரம் 13
பிராண்ட் எனும் மந்திரக்கோல்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in