

எறும்புகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன, டிங்கு? - கே. ரம்யா, 6-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
எறும்புகள் பொதுவாகத் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கே கடிக்கின்றன. தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை அறிந்தவுடன், எறும்புக் கூட்டத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் சேதத்தைத் தடுப்பதற்காகவும் கடிக்கின்றன.
சில நேரம் மனிதர்களின் உடலில் ஏறிவிட்டு, வெளியேற வழி தெரியாதபோது பதற்றத்திலும் கடிப்பது உண்டு. சில நேரம் இரை என்று நினைத்து, தவறுதலாகவும் கடிப்பது உண்டு. மற்றபடி கொசுவைப் போல் நம்மைக் கடிக்க வேண்டிய அவசியம் எறும்புகளுக்கு இல்லை, ரம்யா.
எண்ணெய்யில் அப்பளம் பொரித்தால் தட்டையாக வருகிறது. ஆனால், பூரி மட்டும் ஏன் உப்பி வருகிறது, டிங்கு? - அ. ஹரிசங்கர், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
அப்பளம் காய்ந்ததுபோல் தெரிந்தாலும் அப்பளத்திலும் ஈரப்பதம் உண்டு. அதனால்தான் அது எண்ணெய்யில் பொரிகிறது. பூரி மாவில் அப்பளத்தைவிட ஈரப்பதம் (நீர்ச்சத்து) அதிகமாக இருக்கிறது.
சூடான எண்ணெய்யில் பூரி மாவைப் போடும்போது, மாவில் உள்ள நீர்ச்சத்து வெப்பத்தின் காரணமாக நீராவியாக மாறி வெளியேறப் பார்க்கிறது. அதனால் பூரி உப்புகிறது. அப்பளத்திலும் பூரியிலும் உள்ள நீர்ச்சத்தின் அளவு காரணமாகவே அப்பளம் தட்டையாகவும் பூரி உப்பலாகவும் இருக்கின்றன, ஹரிசங்கர்.
கோழிகள் மணலில் முட்டைகளை அடைகாப்பது ஏன் டிங்கு? - மு. கவின், 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி. தங்களாச்சேரி. மதுரை.
கோழிகள் முட்டைகளை அடைகாப்பதற்கு மணல் சிறந்தது. இப்படி மணலில் அடைகாக்கும்போது, சரியான வெப்பநிலையைப் பராமரிக்க முடியும். பூச்சிகள், உண்ணிகளிடமிருந்து ஓரளவு பாதுகாக்கவும் முடியும்.
முட்டைகள் உருண்டு ஓட முடியாது. உடைந்த முட்டைகளை அப்புறப்படுத்துவதும் எளிது. இப்படி இயற்கையான சூழலில் தாய்க்கோழி அடைகாக்கும்போது, குஞ்சு பொரிக்கும் திறனும் அதிகரிக்கிறது. அதனால் கோழிகள் மணலில் முட்டைகளை அடைகாக்கின்றன, கவின்.