

மனிதனுக்கு விலங்கின் இதயத்தைப் பொருத்த முடியுமா டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
மனித உறுப்புகளுக்கு மாற்றாக, விலங்குகளின் உறுப்புகளைப் பொருத்தும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றன. சிம்பன்சி போன்ற விலங்குகளின் இதயத்தைப் பொருத்தும் முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, பன்றியின் இதயத்தைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பன்றியின் இதயமும் மனிதர்களின் இதயமும் கிட்டத்தட்ட ஒரே அளவிலும் வடிவத்திலும் உள்ளன.
அதனால் மனித உடல் பன்றியின் இதயத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில், பன்றியின் இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்டு, மனித உடலில் பொருத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட ஒரு மனிதர் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிரோடு இருந்தார். அதனால் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றும் முயற்சி இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது, இனியா.
விசிலோ மகுடியின் இசையோ கேட்டு பாம்பு வரும் என்பது உண்மையா, டிங்கு? - வை. சிவப்பிரியா, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, திருமங்கலம், மதுரை.
பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் கிடையாது. அதனால் இசையைக் கேட்க இயலாது. பாம்பாட்டியின் மகுடி அசைவையும் அடிக்கடி மகுடியைத் தரையில் தட்டும்போது ஏற்படும் அதிர்வையும் உணரும் பாம்பு, பயத்திலும் எதிரியை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் உடலை அசைக்கும். இது மகுடியின் இசைக்குப் பாம்பு ஆடுவதுபோல் தோன்றும்.
பெரும்பாலும் பாம்பாட்டிகள் பயன்படுத்தும் பாம்புகளின் நச்சுப் பற்கள் அகற்றப்பட்டிருக்கும். அதனால் பாம்பாட்டி தைரியமாகப் பாம்பு முன்பு அமர்ந்து மகுடியை இசைத்துக்கொண்டிருப்பார், எனவே விசிலோ மகுடியோ ஊதினால் பாம்பு வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை, சிவப்பிரியா.