

செண்பகக் காட்டின் மலை அணில் வயிறு முட்டப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாகக் தூங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் மலை அடிவாரத்தில் திடீரென முளைத்திருந்த ஓர் இரும்புக் கோபுரம் அதன் கண்ணில் பட்டது. அது ஓர் அலைபேசி நிறுவனம் தனது இணைய சேவைக்காகவும், தகவல் பறிமாற்றத்துக்காகவும் நட்டு வைத்த கோபுரம்.
கோபுரத்தின் உச்சியில் ஏறிப் பார்த்தால் மேகத்தைத் தொட்டுவிடலாம் போலிருக்கிறதே என்று நினைத்த மலை அணில், மடமடவென ஏறியது. சுமார் 60 அடி உயரத்திற்குச் சென்றதும் குளிர்ந்த காற்று வீசியது. இரும்புக் கோபுரத்தில் கவிழ்த்த குடை போலிருந்த ஆண்டெனா பெட்டியை நெருங்கியதும், ‘அப்பாடா, இதுதான் சரியான இடம்’ என்று அதன் அடியில் படுத்துக்கொண்டது மலை அணில்.
சில நிமிடங்களில் அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சில விசித்திரமான குரல்கள் அணிலின் காதுகளில் கேட்கத் தொடங்கின. "வணக்கம்! நான் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் உயிருக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம். மிகக் குறைந்த பிரீமியத்தில் மாதம் வெறும் 500 ரூபாய் கட்டினால் போதும்" என்று சொன்னதைக் கேட்ட மலை அணில் அதிர்ச்சி அடைந்தது.
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தது. ஆனால் யாரையும் காணோம். ‘யார் அது? என் உயிர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நான் மரத்திலிருந்து குதிக்கும்போது வால் துண்டானால் புதிய வால் தருவார்களா?’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டது.
அடுத்து ஒரு பெண் குரல், "சார், உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டுமா? வாழ்நாள் முழுவதும் இலவசமாக எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு பணம் கட்டலாம்” என்றது. ‘எனக்குத் தேவையான பழங்களையும் பருப்புகளையும் நானே உழைத்துச் சம்பாதித்துக்கொள்வேன். எனக்கு எதுக்கு இந்தக் கடன் அட்டை?’ என்று நினைத்த அணிலுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
அடுத்து வந்த குரலோ இன்னும் வேடிக்கை. “வாழ்த்துகள்! நீங்கள் 5 கோடி குலுக்கல் லாட்டரியில் வென்றிருக்கிறீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தந்தால் பணத்தை அனுப்பி வைப்போம்” என்றது.
அணில் இப்போது பரபரப்பானது. ‘5 கோடியா? ஒருவேளை 5 கோடி நிலக்கடலைகளாக இருக்குமோ? அந்த அளவு கடலை கிடைத்தால் வாழ்நாள் முழுவதும் கவலையே இருக்காது. வங்கி என்றால் எறும்புகள் சேமித்து வைக்கும் குழியைப் போன்றதா? ஆனால், எதையும் பத்திரமாகக் கையாள வேண்டும். தப்பித் தவறி கறையான் புற்றில் 5 கோடியைப் பத்திரப்படுத்தினால் கறையான்கள் தின்றுவிடுமே’ என்று கவலைப்பட்டது.
எதிர்பாராத நேரத்தில் ஓர் எச்சரிக்கைக் குரல் கேட்டதும் அணிலுக்குப் பயம் அதிகரித்தது. "உங்கள் ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உங்களின் ரகசிய எண்ணைச் சொல்லுங்கள்" என்கிற வார்த்தைகளைக் கேட்ட அணிலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே குழப்பம்.
மலை அணில் பயத்தில் எழுந்து உட்கார்ந்தது. “ஐயோ, இங்கு எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. நான் பருப்புகளையும், நிலக்கடலைகளையும் ஒளித்து வைத்திருக்கும் 3 மரப்பொந்துகள் பற்றி அந்த எலி தகவல் தந்திருக்குமோ? என் ரகசிய இடத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று தலையை ஆட்டியது.
தொடர்ந்து வந்த அழைப்புகள் மலை அணிலைக் குழப்பத்தில் ஆழ்த்தின. கடைசியாக ஒரு நிறுவனத்தின் மேலாளர், "நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சேவை செய்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம்..." என்றார் கரகரத்த குரலில்.
அப்போதுதான் மலை அணிலுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. சில நாள்களுக்கு முன் காட்டில் முகாமிட்டிருந்த மனிதர்கள், சிக்னல் கிடைக்கவில்லை என்று கோபுரத்தின் அடியில் நின்று கத்திக்கொண்டிருந்தார்கள்.
‘இது மனிதர்களின் குரல். 24 மணி நேரமும் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட அமைதியாக இயற்கையை ரசிக்கவோ, பறவைகளின் பாட்டைக் கேட்கவோ நேரம் ஒதுக்குவதில்லை. எப்போதும் எதையாவது வாங்க, விற்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கை நிறையப் பணம் இருந்தாலும், நிம்மதியாகத் தூங்க ஒரு நல்ல மரக்கிளைகூட மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை போலிருக்கிறது’ என்று பரிதாபப்பட்டது மலை அணில்.
திடீரெனக் கோபுரத்திலிருந்து ஒரு பலமான ‘பீப்' சத்தம் கேட்க, மலை அணில் காதுகளைப் பொத்திக்கொண்டு, “ஆளை விடுங்க. எனக்கு இன்சூரன்ஸும் வேண்டாம், 5 கோடியும் வேண்டாம். எனக்கான காடு, என் மரம், நான் சேமித்த பழங்கள், பருப்புகள்... இவையே எனக்குப் போதும்” என்று கத்திக்கொண்டே கீழே இறங்கியது.
வேகமாக ஓடிவந்த மலை அணில் ஆலமரப் பொந்திற்குள் புகுந்துகொண்டது. அங்கு வந்த பக்கத்து மர அணில், “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டது. “மனிதர்களின் உலகத்திற்குப் போனேன்.
அவர்கள் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.” “நமக்கு அந்தத் தொல்லை இல்லை. நிம்மதியாகத் தூங்கு” என்றது பக்கத்து மர அணில். அன்று இரவு மலை அணில் எந்தத் தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கியது.