புறக்கோள்களைத் தேடி... | வானம் நமக்கொரு போதிமரம் 29

புறக்கோள்களைத் தேடி... | வானம் நமக்கொரு போதிமரம் 29
Updated on
3 min read

பிப்ரவரி 17, 1600. ரோம் நகரில் ஜோர்டானோ புருனோ உயிருடன் எரிக்கப்பட்டார். அவர் செய்த குற்றம்? இரவில் நாம் பார்க்கும் எல்லா விண்மீன்களும் சூரியன்கள்தான். ஒவ்வொரு சூரியனுக்கும் சொந்தமாகக் கோள்கள் உண்டு. அந்தக் கோள்களில் உயிர்கள் தோன்றலாம் என்று சொன்னார்.

இது ஏன் குற்றமாகக் கருதப்பட்டது? கடவுள் பூமியையும் உயிர்களையும் படைத்ததாகப் புனித நூல்கள் கூறின. மற்ற உலகங்கள் பற்றி அந்த நூல்களில் எதுவும் இல்லை.

வேறு கோள்கள் இருந்தால், அங்கே உயிர்கள் இருந்தால், அவற்றைப் படைத்தவர் யார்? இந்தக் கேள்வியே ஆபத்தானதாக இருந்தது. புருனோவின் கருத்துகள் கடவுளுக்கு எதிரானவை என்று அறிவிக்கப்பட்டன.

ஆனால் அந்தச் சிந்தனை அவருடன் மறைந்துவிடவில்லை. பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் யோசித்துக்கொண்டே இருந்தார்கள். மற்ற விண்மீன்களுக்குக் கோள்கள் உண்டா? அவை எப்படி இருக்கும்? அங்கே யாராவது வாழ்கிறார்களா? நெடுங்காலம் இவை வெறும் கற்பனைக் கருத்துகளாக மட்டுமே இருந்தன.

போதுமான வலிமையான தொலைநோக்கி இல்லை. பின்னர் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது; நம் கேள்விகளுக்கு விடை பிறந்தது. 1800களின் மத்தியில் நுங்கம்பாக்கத்தில் ஒரு வான் ஆய்வகம் (Madras Observatory) இருந்தது.

அது ‘கிழக்கின் கிரீன்விச்’ என்று அழைக்கப்பட்டது. உலகெங்கும் புகழ்பெற்றதாக இருந்தது. அங்கே கேப்டன் டபிள்யூ.எஸ். ஜேக்கப் என்கிற பிரிட்டிஷ் வானியலாளர் பணிபுரிந்தார்.

ஜேக்கப் ‘70 ஒபியூச்சி’ என்கிற இரட்டை விண்மீன் தொகுதியைக் கவனித்துக்கொண்டிருந்தார். அந்த விண்மீன் நேர்க்கோட்டில் நகரவில்லை. அது சற்றே அசைந்தாடிக்கொண்டிருந்தது. மிகமிக நுட்பமாகத் தள்ளாடியது.

தானே விண்மீன் அசைந்தாடாது. ஏதாவது ஒரு பொருள் அதனை ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுத்தால் மட்டுமே அசையும். அதனால், ஜேக்கப்புக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த விண்மீனை ஒரு கோள் சுற்றி வந்தால், கோளின் ஈர்ப்பு விசையில் விண்மீன் சற்றே தள்ளாடும்.

அப்படி ஒரு கோள் இருந்தால் அதனை நேரடியாகப் பார்க்க முடியாது. அவ்வளவு தொலைவில் மிகமிகச் சிறிதாக இருக்கும். ஆனால் கோளின் ஈர்ப்பு விண்மீனை இழுக்கும்.

கோள் சுற்றும்போது, அது விண்மீனை இடப்புறமும் வலப்புறமும் இழுக்கும். அதனால் பூமியிலிருந்து பார்க்கும்போது, அந்த விண்மீன் அலை அலையான பாதையில் நகர்வதைப் போல் தெரியும்.

இதற்குப் பெயர்தான் ‘ஆரத் திசைவேக முறை’ (Radial Velocity method). ஜேக்கப் உற்சாகம் அடைந்தார். அங்கே ஒரு கோள் இருப்பதாக ஆய்வுக் கட்டுரை எழுதினார். ஆயினும் பின்னர் மேலாய்வுகளில் அவரின் பிழை வெளிப்பட்டது; அக்காலக் கருவிகள் துல்லியமானவை அல்ல.

அவரின் ‘கண்டறிதல்’ பிழையானது; ஆனால் அவரின் யோசனை சரியானதுதான். அவர் வழிமொழிந்த ‘ஆரத் திசைவேக முறை’ கொண்டுதான் பல புறக்கோள்களை இன்று நாம் காண்கிறோம்.

முதல் கண்டறிதல்

1992இல் தான் முதன்முதலாகப் புறக்கோள் இனம் காணப்பட்டது. அலெக்சாண்டர் வோல்ஸ்ஜான், டேல் ஃபிரெயில் என்கிற இரண்டு வானியலாளர்கள் PSR B1257+12 என்கிற பல்சாரை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்கள். கலங்கரை விளக்கம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை சரியாக சுழன்று ஒளி வீசும்.

பல்சாரும் அப்படித்தான், ஆனால் அது ஒளிக்குப் பதிலாக வானொலித் துடிப்புகளை மிகத் துல்லியமாக வெளியிடும். வோல்ஸ்ஜானும் ஃபிரெயிலும் இந்தப் பல்சாரின் துடிப்புகளுக்காகக் காத்திருந்தார்கள். திடீரென்று சில துடிப்புகள் கொஞ்சம் முன்னதாக வந்தன.

சில கொஞ்சம் பின்னதாக வந்தன. ஏதோ ஒன்று பல்சாரை முன்னும் பின்னுமாக இழுப்பதைப் போல் இருந்தது. இதனைக் கொண்டு அந்த பல்சாரை ஒரு கோள் சுற்றிவருகிறது என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

துடிப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கவனமாக ஆய்வு செய்து, பூமியைப் போலப் பல மடங்கு நிறை கொண்ட இரண்டு கோள்கள் முறையே 66 மற்றும் 98 நாள்களில் அந்தப் பல்சாரைச் சுற்றி வருகின்றன எனக் கண்டறிந்தார்கள். அப்படித்தான் 1992இல் முதல் புறக்கோள்கள் கண்டறியப்பட்டன. ஒரு சாதாரண விண்மீனைச் சுற்றி அல்ல. இறந்த விண்மீனைச் சுற்றி.

திருப்புமுனை

1995இல் மைக்கேல் மேயர், டிடியர் குயலோஸ் ஆகியோர் 51 பெகாசி பி என்கிற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோளைக் கண்டறிந்தனர். இது இறந்த விண்மீன் அல்ல. சாதாரண விண்மீன். நமது சூரியனைப் போன்றதே.

இந்தக் கண்டறிதலுக்கு முன்புவரை நமக்குத் தெரிந்த ஒரே கோளமைப்பு நமது சூரியக் குடும்பம்தான். ஒரு பூமியும் ஏழு கோள்களும் மட்டுமே நமக்குத் தெரிந்திருந்தன. 51 பெகாசி பி கண்டறிதல் மூலம் சாதாரண விண்மீன்களைச் சுற்றியும் கோள்கள் இருப்பதை உறுதிசெய்ய முடிந்தது.

ஒரு கோள் விண்மீனைச் சுற்றும்போது, அது விண்மீனை இழுக்கிறது. அந்த விண்மீன் நம்மை நோக்கிக் கொஞ்சம் நகரும், பின்னர் நம்மை விட்டுவிலகும். இது விண்மீனின் ஒளியை நுட்பமாக மாற்றும். விண்மீனின் ஒளியை நிறமாலையாகப் பிரித்துப் பார்க்கும்போது, இந்த நகர்வை அளவிட முடியும். இப்படித்தான் இந்தப் புறக்கோள் கண்டறியப்பட்டது.

அந்தக் கோளுக்கு ‘51 பெகாசி பி’ என்று பெயரிடப் பட்டது. அது ஒரு பெரும் வளிமப் பேரரக்கன். வியாழனின் பாதி நிறை கொண்டது. மேலும் அது தன் விண்மீனைச் சுற்றி வெறும் 4.2 நாள்களில் வலம்வந்தது! சூரியனுக்கு அருகே உள்ள புதன் கோள்கூட 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

இந்தக் கோளின் சுற்றுப்பாதை விண்மீனுக்கு மிக மிக அருகில் இருந்தது. இத்தகைய கோள்கள் ‘ஹாட் ஜூபிடர்’ (வெப்ப வியாழன்) என்று அழைக்கப்படுகின்றன.

அத்தகைய கோள்களில் உயிர் தோன்றுமா என்பது கேள்விக்குறிதான். இந்த அற்புதக் கண்டறிதலுக்காக மேயர், குயலோஸ் ஆகியோர் 2019இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்கள்.

இன்றைய நிலவரம்

இன்று, பிப்ரவரி 2026 நிலவரப்படி, நமக்கு 6,256 புறக்கோள்கள் தெரியும். சில வியாழன் போன்ற வளிமப் பேரரக்கர்கள். சில பூமி போன்ற பாறைக் கோள்கள். சில தங்கள் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றுகின்றன. சில மைய விண்மீனிலிருந்து வெகு தொலைவில் குளிர் இருளில் உள்ளன.

நமக்கு மிக அருகிலுள்ள புறக்கோள் ‘பிராக்சிமா சென்டாரி பி’. அது வெறும் 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மனித அளவில் இது மிகப் பெரிய தொலைவுதான். ஆனால் விண்வெளி அளவில் அருகில் உள்ள பகுதியே. இது ஒரு பாறைக் கோள்.

பூமியைவிடச் சற்றுக் கனமானது. இது தன் விண்மீனைச் சுற்றி வெறும் 11 நாள்களில் வலம் வந்துவிடும். மேலும் இது உயிர் வாழக்கூடிய மண்டலத்தில் அமைந்துள்ளது. இரவில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விண்மீனுக்கும், குறைந்தது ஒரு பாறைக் கோளாவது அதைச் சுற்றியிருக்க வாய்ப்புள்ளது.

(அறிவோம்)

புறக்கோள்களைத் தேடி... | வானம் நமக்கொரு போதிமரம் 29
சூரியனுக்கு எப்படிக் காந்தப்புலம் உருவாகும்? | வானம் நமக்கொரு போதிமரம் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in