

புறக்கோள்களில் சிலவற்றை நேரடியாகத் தொலைநோக்கியில் காண முடியும். சில தலையாட்டி பொம்மை போலத் தள்ளாடும். இந்தத் தள்ளாட்டத்தை அதனைச் சுற்றிவரும் கோள் ஏற்படுத்தும். எனவே, விண்மீனின் தள்ளாட்டத்தை வைத்தும் அதனைச் சுற்றிவரும் புறக்கோள்களை அடையாளம் காண முடியும்.
எனினும், சில நேரம் விண்மீனின் தள்ளாட்டத்தை நாம் காண முடியாது. விண்மீனைச் சுற்றிவரும் கோள் பூமியைப் போல நிறை குறைந்த கோளாக இருந்தால், அது ஏற்படுத்தும் தள்ளாட்டம் மிகச் சிறியதாக இருக்கும். அதனை அடையாளம் காண முடியாது.
ஆனால், அதன் ‘கண் சிமிட்டலை’ நாம் படம் பிடித்துவிட முடியும். இதன் வழியே அந்த விண்மீனைச் சுற்றிவரும் கோளை அடையாளம் காணலாம். ஒரு கோள் நமது பார்வைக் கோட்டில் அதன் தாய் விண்மீனுக்கு நேராகக் குறுக்கே சென்றால், அந்தக் குறுகிய தருணத்தில் விண்மீனின் ஒளி சிறிது மங்கும்.
ஒரு தெருவிளக்கின் முன் ஒருவர் நடந்து செல்லும்போது ஒளி மறைப்பதைப் போல. கோள் இடைமறிப்பு செய்யும்போது விண்மீனின் ஒளி மங்கி, கோள் விட்டு விலகிய பின்னர் மறுபடி தன் இயல்பான பிரகாசத்துக்குத் திரும்பும்.
இந்தக் கண்சிமிட்டும் செயல் கோள் இருப்பதை நமக்குச் சொல்கிறது. இதுதான் ‘குறுக்கீட்டு இடைமறிப்பு’ அல்லது கண்சிமிட்டல் (transit) முறை. உறுதிப்படுத்தப்பட்ட அனைத்துப் புறக்கோள்களிலும் தோராயமாக 75 - 77 சதவீதம் வரை இந்த முறையில்தான் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வளவு ஒளி மறைக்கப்படுகிறது என்பது கோளின் அளவை நமக்குச் சொல்கிறது. இந்து இரண்டு ‘கண் சிமிட்டல்களுக்கும்’ இடையிலான காலம், கோள் அந்த விண்மீனைச் சுற்றி வர எவ்வளவு நேரம் எடுக்கிறது (சுற்றுக்காலம்) என்பதைக் காட்டுகிறது.
இந்த முறைக்கும் ஒரு சார்பு உண்டு. கோள் நமக்கும் விண்மீனுக்கும் நேராகக் குறுக்கே செல்ல வேண்டும். அப்போதுதான் விண்மீனின் ஒளிப் பிரகாசம் குன்றும். நமது பார்வையில் விண்மீனை மேலும் கீழுமாகச் சுற்றிவரும் கோள் இடைமறிப்பு செய்யாது. எனவே விண்மீன் ஒளியில் பிரகாச வேறுபாடு ஏற்படாது. இவற்றை இந்த முறைகொண்டு அறிய முடியாது.
மைய விண்மீனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்கள்தான் எளிதில் நமது நேர்கோட்டுப் பார்வையில் வரும். இடைமறிப்பு செய்யும். விண்மீனிலிருந்து தொலைவில் சுற்றிவரும் கோள்கள் இடைமறிப்பு செய்வது எளிதல்ல.
எனவே ‘குறுக்கீட்டு இடைமறிப்பு’ முறை பெரும்பாலும் குறுகிய சுற்றுக்காலம் கொண்ட கோள்களைத்தான் கண்டறிகிறது. சிறிய கோள்களைவிட இந்த முறையில் பெரிய கோள்கள் எளிதில் புலனாகும்.
இதுவரை 2,500க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் இந்த முறையில் கண்டறியப்பட்டுள்ளன. ‘தள்ளாட்டம்’ (radial velocity) அல்லது ‘கண் சிமிட்டல்’ (transit) முறைகளைக் கொண்டுதான் இதுவரை 94 சதவீதம் புறக்கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பிற முறைகள்
மீதமுள்ள 6 சதவீதம் எப்படிக் கண்டறியப் படுகின்றன? மூன்று முறைகள் நமக்கு உதவுகின்றன. நேரடி ஒளிப்படமெடுத்தல் (Direct Imaging) என்பதும் ஒரு முறை. நூற்றுக்கும் குறைவான கோள்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன.
ஈர்ப்பு விசை ஒளிவிலகல் (Gravitational Microlensing) என்பது வேறொரு வழிமுறை. ஒரு விண்மீன், அதற்கு வெகு தொலைவில் உள்ள மற்றொரு விண்மீனின் முன்னே செல்கிறது என வைத்துக்கொள்வோம்.
முன்னே உள்ள விண்மீனின் ஈர்ப்பு விசை, பின்னே உள்ள விண்மீனின் ஒளியை ஒரு லென்ஸைப் போல வளைத்துத் திருப்புகிறது. அந்த முன்னணி விண்மீனுக்கு ஒரு கோள் இருந்தால், இந்த ஒளிவிலகலில் ஒரு திடீர் உச்சம் (spike) தென்படும்.
அப்போது பின்னணி விண்மீனின் ஒளி திடீரெனப் பிரகாசமாகும். இம்முறை மிகத் தொலைவில் உள்ள கோள்களையும், எந்த விண்மீனையும் சுற்றாமல் தனியாக மிதக்கும் கோள்களையும் கண்டறிய முடியும்.
விண்மீன் இருப்பிட அளவியல் (Astrometry) முறை கொண்டும் அடையாளம் காணலாம். ஒரு விண்மீனின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாக அளந்து, அதன் சிறிய ‘தள்ளாட்டத்தை’ வானில் காண்பதுதான் இம்முறை. இதுவரை மிகச் சில கோள்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால், அளவீட்டுக் கருவிகள் மேலும் துல்லியமாகும்போது, இந்த முறை முக்கியத்துவம் பெறலாம். ஒவ்வொரு புதிய புறக்கோள் கண்டறிதலும், நாம் தனியல்ல, இந்த அண்டத்தில் வேறு எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என்பதை உறுதிப் படுத்துகிறது.
(அறிவோம்)
- tvv123@gmail.com