கொசு காதில் ரீங்காரம் செய்வது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

கொசு காதில் ரீங்காரம் செய்வது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

வெப்பம் தகிக்கும் பாலைவனத்தில் ஒட்டகங்கள் எப்படி வாழ்கின்றன, டிங்கு? - ஆர். நிர்மலா, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.

பாலைவனத்தில் வசிப்பதற்கு ஏற்றவாறு ஒட்டகங் களுக்குத் தகவமைப்பை வழங்கியிருக்கிறது இயற்கை. திமில், நீண்ட உறுதியான கால்கள், அடர்ந்த முடி, சிறப்பு இமைகள் போன்றவை ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்வதற்கு உதவி செய்கின்றன. உணவைக் கொழுப்பாக மாற்றி, திமிலில் சேமித்து வைப்பதால், உணவு கிடைக்காத காலத்தில் திமிலில் இருந்து ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறன.

இரவு நேரத்தில் பாலைவனக் குளிரைச் சமாளிக்க முடி உதவுகிறது. நீண்ட மெல்லிய கால்கள் பாலைவன மணலில் எளிதாகச் செல்வதற்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கின்றன. பாலைவனப் புயலில் தூசிகள் நுழையாதபடி மூக்கில் இருக்கும் முடிகள் பாதுகாக்கின்றன. கண்களுக்குள் தூசியும் மணலும் செல்லாபடி மூன்று இமைகள் காக்கின்றன.

மிக மெல்லிய இமைத்திரைகள் வழியே ஒட்டகத்தால் பார்க்கவும் முடியும். எவ்வளவு மோசமான மணல் புயலாக இருந்தாலும் இமைகள் மணலைத் தடுத்துவிடுகின்றன. ஒவ்வொரு காலிலும் இருக்கும் இரண்டு விரல்களில் உள்ள நகங்கள் பாதங்களைப் பாதுகாக்கின்றன.

ஒட்டகங்களின் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் இருக்க, அதிகம் வியர்க்காது. வெப்பநிலை சூழலுக்கு ஏற்ப உடலின் தன்மை மாறிக்கொள்ள முடியும் என்பதால், ஒட்டகங்களால் பாலைவத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது, நிர்மலா.

கொசு நம் காதுக்கு அருகில் வந்து ரீங்காரம் செய்வது ஏன், டிங்கு? - என். சரவணன், 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நம் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறும் கார்பன் டைஆக்ஸைடால் கவரப்பட்டு நம் தலைக்கு அருகில் வருகிறது கொசு. எந்த இடத்தில் இறங்கி ரத்தத்தை உறிஞ்சலாம் என்று வட்டமிட்டபடி யோசித்து, சட்டென்று கடித்துவிட்டுப் பறக்கிறது.

கொசு பறக்கும்போது ரீங்காரம் வந்துகொண்டேதான் இருக்கும். தலைக்கு அருகில் வரும்போது ரீங்காரச் சத்தம் நமக்கு நன்றாகக் கேட்கிறது. அதனால் நம் காதில் பாடுவதுபோல் தெரிகிறது, சரவணன்.

கொசு காதில் ரீங்காரம் செய்வது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்
கோழி மணலில் அடைகாப்பது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in