

“இந்தக் குடையா... பார்க்கவே நல்லா இல்லை.” அம்மா நீட்டிய கறுப்புக் குடையைப் பார்த்து முகத்தைச் சுருக்கினாள் நித்திலா. “ஏன் நித்திலா? ரெயின்கோட் வேண்டாம், கவின், ஹரிணி எல்லாரும் குடைதான் எடுத்துட்டு வர்றாங்க... நானும் ஸ்கூலுக்குக் குடை எடுத்திட்டுப் போவேன்னு அடம்புடிச்சுட்டு இருந்த...”
“ஆமா... ஆனா எனக்கு என்னோட எல்சா குடைதான் வேணும். ஹரிணி யூனிகார்ன் குடை வச்சிருக்கா. கவின்கிட்ட ஸ்பைடர்மேன் குடை இருக்கு. இதை எடுத்துட்டுப் போனா எல்லாரும் சிரிப்பாங்க.”
நித்திலாவின் குடை ஊதா நிறத்தில் இருக்கும். விரியும்போது ஒவ்வொரு மடிப்பிலும் எல்சாவும் ஆனாவும் நீல விழிகளைக் காட்டிப் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் அவளும் மிடுக்காக நின்று சிரிப்பாள். கைப்பிடியில் ஓர் ஊதா விசிலும் இணைக்கப்பட்டிருக்கும்.
அதைச் சுற்றிச் சுற்றி விளையாடுவாள். நேற்று மாலை அடித்த காற்றில் அந்தக் குடை தலைகீழாக மடங்கிவிட்டது. இரண்டு கம்பிகள் வளைந்துவிட்டன. “பழுது பார்க்கக் கொடுத்திருக்கோம் இல்லையா? மழை வர்ற மாதிரி இருக்கு. இன்னிக்கு மட்டும் தாத்தா குடையை எடுத்துட்டுப் போ.”
தாத்தாவின் குடை நீளமாக இருந்தது. அதை மடித்து வைத்திருக்கும்போதே நித்திலாவின் இடுப்பு உயரத்துக்கு வந்தது. கைப்பிடியில் விரிசல்விட்ட இடத்தைக் கறுப்பு டேப்பால் சுற்றியிருந்தார் தாத்தா. “போம்மா... எங்க கிளாஸ்ல யாருமே இந்த மாதிரி குடை கொண்டுவர மாட்டாங்க.”
“அப்போ உன்னோடது தனியா தெரியுமே...” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் தாத்தா. நித்திலா அவரைப் பார்த்து முறைத்தாள். ‘நாளைக்குப் பாருங்க. நானும் குடை எடுத்துட்டு வருவேன்’ என நண்பர்களிடம் சொல்லியிருந்ததால் வேறு வழியின்றி அந்தக் குடையை எடுத்துக்கொண்டு சென்றாள். வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக அதைக் கதவுக்குப் பின்னால் மறைத்து வைத்தாள்.
குடை சற்றுச் சாய்ந்து, அதன் வளைந்த கைப்பிடி மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது. “இது யாரோட வாக்கிங் ஸ்டிக்?” என்று கிண்டலாகக் கேட்டான் கவின். பதில் சொல்லாமல் முறைத்துவிட்டுத் தன் இடத்துக்குப் போய் உட்கார்ந்தாள் நித்திலா.
கடைசிப் பாடவேளையின் போதே தூறல் விழத் தொடங்கிவிட்டது. சற்று நேரத்தில் மைதானமே தெரியாத அளவுக்கு மழை பெய்தது. நித்திலா வேண்டாவெறுப்பாக அந்தக் குடையைக் கையில் எடுத்துக்கொண்டாள்.
அந்த நேரத்தில், கைப்பையைத் தலைக்கு மேலே பிடித்துக்கொண்டு தாத்தா உள்ளே வந்தார். மழை பெய்யும் நாள்களில் பள்ளிக்கு உள்ளேயே வந்து அழைத்துப் போவதற்கு அனுமதி உண்டு.
“ஏன் தாத்தா குடை எடுத்துட்டு வரலையா?” “நீதான் கொண்டு வந்திருக்கியே...” நித்திலாவிடமிருந்து குடையை வாங்கி விரித்தார். ‘படார்’ என்கிற சத்தத்துடன் ஒரு குட்டிக் கூடாரம்போல விரிந்தது.
வகுப்பறை வாசலில் நின்றிருந்த கவின் வாயைப் பிளந்தான். “வாவ்... எவ்ளோ பெரிசு! நானும் இதுக்குள்ள வரட்டுமா? அம்மா வந்துட்டு இருப்பாங்க. “ஏன்... நீ உன்னோட ஸ்பைடர்மேன் குடையை எடுத்துட்டு வரலயா?” கவின் தோளைக் குலுக்கினான், “அதோட பட்டன் உடைஞ்சு போச்சு. அம்மா புதுசா ஒண்ணு ஆர்டர் பண்ணிருக்காங்க.”
“பையை வச்சு இடிக்காம வரணும்... ஓகேயா?” என்று நித்திலா கண்களை உருட்டிச் சொல்லிவிட்டு, நகர்ந்து கொண்டாள். இருவரும் குடைக்குள் நின்றார்கள். இன்னும் கொஞ்சம் இடமிருந்தது.
குடையை மறந்துவிட்டு வந்த ஹரிணியும் அவளின் தம்பியும் குடைக்குள் சேர்ந்துகொண்டனர். தாத்தா குடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நடந்தார். “என் ஷுவை மிதிக்காதே...” “நீதான் என்னை மிதிக்கற...” “ நீதான் குறுக்கே வந்த...” “டேய், தண்ணியில குதிக்காதே...” குடைக்குள் குதூகலமாகப் பேசியபடி நடந்தனர். ஹரிணியின் தம்பி குனிந்து பார்த்தபடியே வந்தான்.
“ஒண்ணு, ரெண்டு, மூணு...” “என்னடா எண்ணறே?” என்றாள் ஹரிணி. “நம்மளோட கால்களைத்தான். பாரேன்... நம்ம குடைக்கு எட்டுக் கால்கள் இருக்கு...” “தாத்தாவையும் சேர்த்துப்போம்... அப்ப பத்துக் கால்களாகிடும்” என்றாள் ஹரிணி.
“அப்போ பத்துக்கால் பவர் குடை” என்று புதுப் பெயர் சூட்டினான் கவின். குடைக்குள் இடிச்சிரிப்பு எழுந்தது. அந்தச் சிரிப்பில் நித்திலாவின் சிடுசிடுப்பும் கரைந்து காணாமல் போனது.
மறுநாள் காலை பழுது பார்த்த எல்சா குடையை நித்திலாவிடம் நீட்டினார் தாத்தா. அவள் தலையை வேகமாக ஆட்டி மறுத்தாள். ஓடிப்போய்ப் பத்துக்கால் குடையை எடுத்துக்கொண்டாள்.