

பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் ஊர்தான் ஜின்ஜினுகான் பாளையம். அந்த ஊரில் பொன்முடி, வணங்காமுடி என இரண்டு நண்பர்கள் வாழ்ந்தனர். பொன்முடி வெங்காய வியாபாரி, வணங்காமுடி பூண்டு வியாபாரி.
பொன்முடி தன் வியாபாரத்தை விரிவாக்க எண்ணி, சலாமியா நாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார். ஒருநாள் வெங்காய மூட்டைகளுடன் கப்பலில் ஏறினார். சில நாள்களில் கப்பலில் ஏதோ பிரச்சினை வந்துவிட்டது. கப்பல் மெதுவாகச் சென்றது. அதைச் சரிசெய்வதற்குச் சில நாள்கள் ஆகும் என்றார் கப்பலின் மாலுமி.
இப்படித் தாமதமானால் மழையில் வெங்காயம் நனைந்து, பாழாகிவிடும் என்று பயந்தார் பொன்முடி. அப்போது சற்றுத் தொலைவில் ஒரு கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் தெரிந்தது. “மாலுமி, அருகில் ஒரு நாடு இருக்கிறது. அதுவரை கப்பலைக் கொண்டு சென்றால்கூடப் போதும்” என்றார் பொன்முடி.
மாலுமியும் கப்பலை அந்தக் கலங்கரை விளக்கத்தை நோக்கிச் செலுத்தினார். வெங்காய மூட்டைகளோடு கஸ்மகஸ் நாட்டில் இறங்கினார் பொன்முடி. அங்கிருப்பவர்கள் முதலில் பொன்முடியை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.
பின்பு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். ஒரு கடைக்காரரிடம் தான் ஒரு வெங்காய வியாபாரி என்றும் உங்கள் வியாபாரச் சந்தை எங்கு உள்ளது என்று கேட்டார் பொன்முடி. மொழி புரியாததால் கடைக்காரரால் பதில் சொல்ல இயலவில்லை. அரசவையில் பல மொழி தெரிந்தவர் இருக்கிறார், அவரைச் சந்திக்கச் சொன்னார் ஒருவர்.
அரசவைக்குச் சென்றார் பொன்முடி. வெங்காயம் விற்பதற்காக வந்தேன் என்றார். ஆனால், ஒருவருக்கும் வெங்காயம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. வெங்காயத்தின் சுவை, பலன், மருத்துவக் குணம் என என்னென்னவோ சொன்னாலும் அவர்களுக்குப் புரியவில்லை.
கடைசியாக பொன்முடிக்கு ஒரு யோசனை வந்தது. தான் சாப்பிடுவதற்காகக் கொண்டுவந்த வெங்காய பக்கோடாவையும் வெங்காய ஊறுகாயையும் எல்லாருக்கும் ருசி பார்க்கக் கொடுத்தார். சாப்பிட்டவர்கள் ருசியில் மயங்கினர்.
மன்னரும் வெங்காய பக்கோடாவையும் வெங்காய ஊறுகாயையும் சாப்பிட்டார். உடனே அனைத்து வெங்காயத்தையும் வாங்கிக்கொள்வதாக அறிவித்தார். வெங்காயத்துக்குப் பதிலாக என்ன வேண்டும் என்று கேட்டார் மன்னர். “தங்கள் நாட்டில் விலை உயர்ந்த பொருள் எதுவோ அதைக் கொடுங்கள், மன்னா” என்றார் பொன்முடி.
ஒரு பெட்டி நிறையத் தங்கக் காசுகளைக் கொடுத்து, கஸ்மகஸ் நாட்டு மன்னரும் மக்களும் மிகுந்த மரியாதையுடன் பொன்முடியை வழியனுப்பி வைத்தனர். ஒரு வாரத்துக்குப் பிறகு ஊர் வந்து சேர்ந்த பொன்முடி, தனக்குக் கிடைத்த அனுபவங்களை வணங்காமுடியிடம் பகிர்ந்துகொண்டார். “நண்பா, நானும் கஸ்மகஸ் நாட்டுக்குப் பூண்டு வியாபாரம் செய்வதற்குப் போகட்டுமா?” என்று கேட்டார் வணங்காமுடி.
“தாராளமாகச் செல். நல்ல நாடு. நல்ல மன்னர். அன்பான மக்கள். எப்படிச் செல்ல வேண்டும் என்பதையும் உனக்குச் சொல்லிவிடுகிறேன்” என்றார் பொன்முடி.
ஒரே வாரத்தில் வணங்காமுடி பூண்டு மூட்டைகளுடன் புறப்பட்டார். கஸ்மகஸ் நாட்டில் பூண்டு மூட்டைகளை இறக்கினார். பூண்டின் அருமை பெருமைகளைச் சொன்னார். யாருக்கும் புரியவில்லை. பூண்டு ரசத்தையும் பூண்டு ஊறுகாயையும் சாப்பிடக் கொடுத்தார்.
சுவைத்தவர்கள் அருமை என்றார்கள். உடனே மன்னருக்குத் தகவல் சென்றது. வணங்காமுடியை அழைத்தார். “பூண்டு ரசமும் பூண்டு ஊறுகாயும் அருமை. வெங்காயத்தைப் போல் பூண்டும் பிரமாதம். அனைத்துப் பூண்டுகளையும் வாங்கிக்கொள்கிறோம். அதுக்குப் பதிலாக உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் கஸ்மகஸ் நாட்டு மன்னர்.
“நன்றி மன்னா. தங்கள் நாட்டில் மதிப்பு மிக்கப் பொருள் என்னவோ அதைக் கொடுங்கள்” என்றார் வணங்காமுடி. சிறிது நேரத்தில் மிகப் பெரிய பெட்டி ஒன்று வந்தது.
‘அடடா! பொன்முடிக்குக் கிடைத்த பெட்டியைவிட எனக்குக் கிடைத்த பெட்டி ரொம்பப் பெரியது!’ என்று மகிழ்ந்த வணங்காமுடி, மன்னருக்கு நன்றி சொல்லிவிட்டு, பெட்டியைப் பெற்றுக்கொண்டார்.
“பிரித்துப் பாருங்கள்” என்று மன்னர் சொன்னதும் மகிழ்ச்சியாகப் பெட்டியைப் பிரித்த வணங்காமுடிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“தற்போது எங்கள் நாட்டில் மதிப்பும் விலையும் மிகுந்த பொருள் வெங்காயம்தான்! அதை உங்களுக்குக் கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி” என்று வணங்காமுடியை அனுப்பி வைத்தார் கஸ்மகஸ் மன்னர்.
- ஜி.சுரேஷ்