சென்னை எழும்பூரில் கவனம் ஈர்க்கும் ‘தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்’!

சென்னை எழும்பூரில் கவனம் ஈர்க்கும் ‘தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்’!
Updated on
2 min read

தமிழகத்தில் முதன்முறையாகக் காவலர்களின் திறமைகளைப் பறைசாற்றும் விதமாகவும் அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் விதமாகவும் தொடங்கப்பட்டதுதான் சென்னை, எழும்பூரில் உள்ள ‘தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்.’

தற்போது காவல் அருங்காட்சியமாக உள்ள இந்தக் கட்டிடம், 169 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் காவல் ஆணையர் அலுவலகம் அமைப்பதற்காக அருணகிரி முதலியாரிடம் வாடகைக்கு வாங்கி, பின்பு அரசுடைமையாக்கப்பட்டு, கடந்த 2013 வரையிலும் காவல் ஆணையகமாகச் செயல்பட்டு வந்துள்ளது.

கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் காவல் ஆணையகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, 2020-இல் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2021-இல் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக உருவானது. தற்போது இதனைக் காண இளைஞர்களும் சிறார்களும் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் வருகின்றனர்.

காவலர் அர்ச்சனா, “காவலர்களுக்கு முன்னோடியே ஊர்க் காவல் வீரர்கள்தான். அந்தக் காலத்தில் ஊரில் உள்ள ஆடு, மாடுகளைப் பாதுகாக்கும் வேலையை அவர்கள் செய்துவந்தனர். இதற்கான ஆதாரங்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் காவல் துறையினரால் சிலைகள் கடத்துபவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கின்றன. இதற்கான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. தீர்ப்பு வந்ததும் எங்கு இருந்து வந்தனவோ அங்கே அனுப்பி வைக்கப்படும்” என்றவர், ஒரு கல்லைக் காட்டினார்.

அது கல் அல்ல மரம் என்பது அவர் சொன்ன பிறகே தெரிந்தது. 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மண்ணிற்குள் புதைந்த புளியமரம், கல்லாக மாறியுள்ளது. இது புதுச்சேரி அருகிலுள்ள திருவக்கரையில் கண்டறியப்பட்டது. அருகிலிருந்த புலி 200 வருடங்களுக்கு முன்பு பதப்படுத்தப்பட்டது. அதன் தோல், எலும்புகள், பற்கள் இன்றும் நன்றாக உள்ளன. இந்தப் புலி, கரோனா காலக்கட்டதில் தமிழகக் காவல்துறையின் பங்களிப்பைப் பாராட்டி, ஸ்டீவ் பார்ஜியா என்பவரால் ஓசூரில் இருந்து அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

காவல் துறையின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 1856 முதல் பணியாற்றிய காவல் ஆணையர்களின் ஒளிப்படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் காவல் ஆணையரின் அலுவலகம், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் இருந்தன. அதனைத் தொடர்ந்து வாள்கள், துப்பாக்கி எனக் காவல் துறைக்குக் கீழ் செயல்படக்கூடிய அனைத்துத் துறைகளையும் அவை பயன்படுத்திய பொருள்களையும் காணும்போது வியப்பாக இருந்தது.

காவல் துறையின் முக்கிய நிகழ்வுகளும் தமிழகத்தில் நடந்த முக்கியச் சம்பவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியத்தின் வரலாற்றை எடுத்துரைப்பதற்குப் பல மொழிகள் தெரிந்த காவலர்களைப் பணியில் அமர்த்தியுள்ளனர். அனைவரும் காண வேண்டிய அருங்காட்சியகம்.

| கட்டுரை, படங்கள்: கொ.தீனேஷ்வர், பயிற்சி இதழாளர். |

சென்னை எழும்பூரில் கவனம் ஈர்க்கும் ‘தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்’!
கொங்கு மட்டன் பிரியாணி முதல் விருதுநகர் பரோட்டா வரை: பெசன்ட் நகர் கடற்கரையில் ‘உணவுத் திருவிழா’ 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in