

நீண்ட காலத்துக்கு முன்பு ஓர் அழகிய கிராமத்தில் பட்டு தன் பாட்டியுடன் வசித்து வந்தாள். பாட்டி வீட்டிலேயே இட்லிக் கடை நடத்தி வந்தார். இட்லியை மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்துவந்தார். பட்டுவும் தன் பாட்டியைப் போலவே எல்லாரிடமும் மிகவும் அன்பாக இருந்தாள்.
சிலரால் பாட்டியின் கடைக்கு வந்து சாப்பிட இயலவில்லை. அதனால் பட்டுவிடம் அவர்களுக்கான இட்லிகளைக் கொடுத்து அனுப்பினார் பாட்டி. பட்டுவும் அந்த வேலையை மகிழ்ச்சியாகச் செய்தாள்.
திடீரென்று பட்டுவுக்கு ஒரு பிரச்சினை வந்தது. அவள் யார் வீட்டுக்குச் சென்றாலும் அவள் கால்களில் சில சிறிய பொருள்கள் ஒட்டிக்கொண்டு வந்தன. அவளுக்கு ஏன் இப்படிப் பொருள்கள் ஒட்டிக்கொள்கின்றன என்பது புரியவில்லை.
“பாட்டி, இந்தப் பொருள் எப்படி என் கால்களில் ஒட்டிக் கொண்டு வருகின்றன என்றே தெரியவில்லை. வீட்டுக்கு வந்த பிறகுதான் கவனித்தேன். என்னை எல்லாரும் தவறாக நினைக்கப் போகிறார்கள்” என்று பயந்தாள் பட்டு.
“அது எப்படித் திடீரென்று கால்களில் பொருள்கள் ஒட்டும் பட்டு? என்னாலேயே நம்ப முடியவில்லையே?” என்று கேட்டார் பாட்டி. “எனக்குத் தெரியலையே பாட்டி.” “நான் போய் இந்தப் பொருள்களைக் கொடுத்துட்டு வரேன், வீட்டைப் பார்த்துக்க” என்றார் பாட்டி.
பட்டுவுக்கு வருத்தமாக இருந்தது. மறுநாள் பட்டுவிடம் இட்லிகளைக் கொடுக்கும் போது, “ஏதாவது பொருள் ஒட்டிக்கொண்டால் அங்கேயே கொடுத்துவிட்டு வந்துவிடு” என்று சொல்லி அனுப்பினார் பாட்டி. சில வீடுகளிலுள்ள பொம்மைகள் பட்டுவின் காலில் ஒட்டிக்கொள்ளும். சில வீடுகளிலுள்ள சிறிய பாத்திரங்கள் பட்டுவின் கால்களில் ஒட்டிக் கொள்ளும். பட்டுவுக்கு அப்படியோர் அதிசய ஆற்றல் இருந்தது.
“என்ன பட்டு, பொம்மையை எடுத்துட்டுப் போறே?” என்று கேட்கும்போதுதான் அவளுக்கே அது தெரிந்தது. பட்டு தன் கால்களில் பொருள்கள் ஒட்டிக்கொள் கின்றன என்பதையும் அதற்கான காரணம் தெரியவில்லை என்பதையும் சொன்னாள். ஆனால், அவர்கள் நம்பவில்லை.
ஊர் மக்கள் பட்டுவைப் பற்றி, பாட்டியிடம் புகார் சொன்னார்கள். பாட்டிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. “பாட்டி, என்னை நம்புங்கள். நான் எந்தப் பொருளையும் எடுக்கவில்லை” என்று அழுதாள் பட்டு.
“நான் உன்னை நம்பலாம், மற்றவர்கள் நம்ப மாட்டார்களே” என்றார் பாட்டி. வருத்தத்துடன் பட்டு தோட்டத்துக்குச் சென்றாள். அப்படியே தூங்கிவிட்டாள். சட்டென்று யாரோ அவளை எழுப்பினார்கள். “ஆ... தேவதையா!” “ஆமாம், பட்டு உனக்கு என்ன பிரச்சினை?”
“தேவதையே, நான் எந்த வீட்டுக்குப் போனாலும் என் கால்களில் சில பொருள்கள் ஒட்டிக்கொள்கின்றன. அது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஊர் மக்கள் எல்லாரும் நான் பொருள்களை எடுத்துவிடுவதாக நினைக்கிறார்கள்.
என்னை இந்தப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள்” என்று அழுதுகொண்டே சொன்னாள் பட்டு.“உன் கால்களால் எப்படி உனக்கு அவப் பெயர் உண்டானதோ அதே கால்களால் உன்னை எல்லாருமே பாராட்டுவார்கள்” என்றார் வனதேவதை.
பட்டுவுக்கு ஒன்றும் புரியவில்லை, “தேவதையே, அதெப்படி என் கால்களின் காரணமாக என்னைப் பாராட்டுவார்கள்?” என்று வியப்போடு கேட்டாள். “இனி நீ தரையில் நடந்து செல்ல மாட்டாய். எல்லா இடங்களுக்கும் பறந்துதான் செல்வாய்” என்றார் தேவதை.
“ஆ... நான் எப்படிப் பறப்பேன்?” என்று ஆச்சரியப்பட்டாள் பட்டு. “இதோ இப்படித்தான்” என்று சொன்ன படி பட்டு தலையில் கைவைத்து ஏதோ மந்திரத்தைச் சொன்னார் வனதேவதை. மறுகணமே பட்டு நான்கு இறக்கைகள் கொண்ட ஒரு பட்டாம்பூச்சியாக மாறிவிட்டாள்!
“ஆஹா! மிக்க நன்றி தேவதை” என்று சொல்லிவிட்டுப் பறக்க ஆரம்பித்தாள் பட்டு. அன்றிலிருந்து அவள் பறந்து பறந்து சென்றாள். பசித்தபோது பூக்களில் அமர்ந்து தேனைக் குடித்தாள். பூக்களின் மீது அமரும்போது மகரந்தம் அவள் கால்களில் ஒட்டிக்கொண்டது.
அவள் வேறு பூக்களில் அமர்ந்தபோது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று, மேலும் அழகான, வண்ணமயமான பூக்கள் உருவாகின. பட்டாம்பூச்சியின் கால்களில் மகரந்தத் துகள்கள் ஒட்டிக்கொண்டதற்காக மக்கள் அதனைப் பாராட்டினர். தங்கள் பூந்தோட்டம் செழித்து வளர்ந்ததற்காக மகிழ்ந்தனர். இன்று கண்ணைக் கவரும்படி இங்குமங்கும் பறந்து சென்று கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள் எல்லாம் பட்டுவின் வழித்தோன்றல்களே!