

ஸ்காட்லாந்தின் எல்லைப் பகுதியில் லக்லான் மாக்லியோட் என்கிற விவசாயியும் அவரின் மனைவி மொய்ராவும் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்க்கை கடினமானது. ஆடு மேய்த்தல், விவசாயம், தயிர் கடைதல், கம்பளி நெசவு, வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது என எல்லா வேலைகளும் சேர்ந்து அவர்களைச் சோர்வடைய வைத்தன.
“மொய்ரா, இந்த வீட்டையும் வயலையும் பராமரிக்க நம்மால் முடியவில்லை. எவ்வளவு வேலைகள் செய்தாலும் எப்போதும் ஏதாவது வேலை பாக்கி இருக்கிறதே” என்று வருத்தப்படுவார் லக்லான். மறுநாள் முதல் ஒரு விந்தை நிகழ்ந்தது.
ஒவ்வொரு விடியற்காலையிலும் அவர்கள் எழுந்து பார்த்தபோது, சில வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருந்தன. சமையலறை சுத்தமாகத் துடைக்கப்பட்டிருக்கும். சிதறிக் கிடந்த நூற்புக் கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மோர் கடைந்து வெண்ணெய் எடுத்து வைக்கப்பட்டிருக்கும்.
யார் இந்த வேலைகளைச் செய்கிறார்கள் என்று லக்லானும் மொய்ராவும் குழப்பமடைந்தனர். இதைக் கண்டறிய ஒரு நாள் இரவு மொய்ரா உறங்காமல் படுக்கை அறையின் கதவு இடுக்கிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
அப்போது சமையலறையின் இருண்ட மூலையில் மூன்று அடி உயர வயதான மனிதர் போன்ற உருவம் ஒன்று தோன்றியது. அது சமையலறையில் வேகமாகவும் சத்தமில்லாமலும் வேலை செய்தது. அடுத்ததாக அதன் சிறிய கைகள் கம்பளி நூற்பு வேலையைத் துரிதமாகச் செய்தன.
அது ஸ்காட்லாந்து வீடுகளின் ‘வீட்டு ஆவி’யான ப்ரௌனி என்பதை மொய்ரா புரிந்துகொண்டார். பொதுவாக ஆவிகள், பேய், பிசாசுகள் என்றால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பவையாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், ஐரோப்பிய ‘வீட்டு ஆவி’ என்பது வீட்டைக் காக்கும், வீட்டு வேலைகளைச் செய்யும் ‘நல்ல’ ஆவி.
அனைவரும் தூங்கிய பிறகு, நள்ளிரவில் வந்து வீட்டைப் பெருக்குவது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, தானியங்களை அரைப்பது, விவசாய வேலைகளில் ஈடுபடுவது ப்ரௌனியின் வழக்கம். அதன் உதவிக்காகப் பணமோ புத்தாடையோ கொடுக்கக் கூடாது.
அவ்வாறு செய்தால் அதை அவமதிப்பாக எடுத்துக்கொண்டு, வீட்டைவிட்டு நிரந்தரமாகச் சென்றுவிடும். அதற்குப் பதிலாக இரவில் ஒரு கிண்ணத்தில் பால், கிரீம், ஓட்ஸ் கஞ்சி, தேன் தடவிய ரொட்டி என ஏதாவது உணவை வைத்துவிட்டால் போதும். அதை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
லக்லானும் மொய்ராவும் அந்த விதியைக் கவனமாகக் கடைப்பிடித்தனர். ப்ரௌனிக்குத் தேவையான கஞ்சி அல்லது பால் ஏடு தினமும் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு ப்ரெளனி அந்த வீட்டில் வேலை செய்தது. மாக்லியோட் குடும்பம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தது.
ப்ரெளனி குளிரில் கடினமாக உழைக்கும்போது, அதன் அங்கி கிழிந்து, கரடுமுரடான கால்கள் தெரிந்தன. அதைக் கண்டு மொய்ரா பரிதாபப்பட்டார். லக்லானிடம், “ப்ரெளனிக்கு ஒரு புதிய மேலாடையும் தொப்பியும் தைத்துக் கொடுக்கலாம். இது கூலி அல்ல, நம் அன்பின் பரிசு” என்றார்.
“வேண்டாம், அது மனிதர்களின் வழக்கங்களைப் பின்பற்றாது; மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் செய்யாது. அது புதிய உடையைக் கூலியாகவே கருதும்” என்றார் லக்லான்.
ஆனால், மொய்ராவால் அந்தச் சிறிய, கடினமாக உழைக்கும் ப்ரெளனியின் கிழிந்த உடையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. லக்லானுக்குத் தெரியாமல் தனது கம்பளியிலிருந்து ப்ரெளனிக்கு ஓர் அழகிய அங்கியையும் தொப்பியையும் தைத்தார்.
அடுத்த நாள் இரவு அவற்றைச் சமையலறையில் கஞ்சிக் கிண்ணத்துக்கு அருகில் வைத்தார். ப்ரெளனி வேலைக்காக வழக்கம்போல வந்தபோது, அங்கியையும் தொப்பியையும் பார்த்து அசைவற்று நின்றது. “ஓஹோ, இவர்கள் என்னைக் கூலிக்கு வேலை செய்யும் அடிமை என்று நினைக்கிறார்களா? என் சேவை விலைமதிப்பற்றது…” என்றது.
அப்போது படுக்கையறைக் கதவிடுக்கிலிருந்து மொய்ராவின் குரல் ஒலித்தது. “இது கூலியல்ல. என் அன்பளிப்பு. நீ எங்களுக்காக எவ்வளவு பாடுபட்டு, எத்தனை உதவிகள் செய்கிறாய்! அதற்கு நான் இந்தக் கைமாறு செய்யக் கூடாதா? எங்களின் அன்பை நீ புரிந்துகொள்ள மாட்டாயா? உன் கிழிந்த ஆடையைப் பார்க்கும்போது என் இதயம் எவ்வளவு வேதனைப்படுகிறது தெரியுமா?”
ப்ரெளனி திடுக்கிட்டுக் குரல் வந்த திசையைப் பார்த்தது. பிறகு புன்னகையோடு வேலைகளைச் செய்தது. மொய்ராவும் லக்லானும் காலையில் எழுந்தபோது, வேலைகள் நேர்த்தியாகச் செய்து முடிக்கப்பட்டிருந்தன. சமையலறையில் கஞ்சிக் கிண்ணம் நிரம்பியே இருந்தது. புதிய அங்கியும் தொப்பியும் காணவில்லை.
லக்லானும் மொய்ராவும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதன் பிறகு ப்ரௌனி திரும்பி வரவே இல்லை. அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்ல; ஸ்காட்லாந்தின் எந்த வீடுகளுக்கும் வரவில்லை.
“அடப் பாவமே, ஒரு மனிதன் காட்டிய நன்றிக்காக அந்த அற்புதமான ஆவி, நம் நாட்டினர் எல்லாருக்கும் உதவி செய்வதை நிறுத்திவிட்டதே” என்று ஸ்காட்லாந்து மக்கள் இப்போதும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.