புதிய சிறார் நூல்கள்

புதிய சிறார் நூல்கள்
Updated on: 
2 min read

கொழுக்கட்டை மழை பெய்த நாள்,

உதயசங்கர், நிவேதிதா பதிப்பகம்,

தொடர்புக்கு: 89393 87296

சிறார் நாவல், கதைகள், பாடல்கள் எழுதுவதற்காக அறியப்படும் எழுத்தாளர் உதயசங்கர் இந்திய அளவிலான நாடோடிக் கதைகளின் தொகுப்பாக இந்த நூலை உருவாக்கியுள்ளார். இந்தக் கதைகளில் ஒரு சிலவற்றின் மையக்கருவை மட்டும், ஏதோ ஒரு வகையில் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.1879இல் டார்ஜிலிங்கில் வாழ்ந்த டுங்க்னி என்கிற மூதாட்டி கூறிய கதையும் இந்தத் தொகுப்பில் உண்டு.

சேட்டைக்கார சின்னா,

குருங்குளம் முத்து ராஜா, மேஜிக் லாம்ப்,

தொடர்புக்கு: 99425 11302

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களை எழுதுவதற்குப் பெயர்பெற்ற குருங்குளம் முத்து ராஜா, சேட்டைக்காரச் செல்லப் பூனை சின்னாவை மையப்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கிறார். வங்கிக் கொள்ளையனைத் தடுத்தல், சங்கிலித் திருடனைப் பிடித்தல், கல்யாணத்தில் கலாட்டா என அதன் சேட்டைகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன.

கனவைக் காத்த மனிதர்,

அமுதன் தேவேந்திரன், அறிவியல் வெளியீடு,

தொடர்புக்கு: 94880 54683

சிறாருக்கு எழுதப்படும் கதைகள் பெரும்பாலும் பொழுதுபோக்கான அம்சங்கள், சிறிய ஆச்சரியங்களை மையப்படுத்தியே எழுதப்படுகின்றன. முதன்முறையாகக் குழந்தைகளுக்கு எழுத முயன்றிருக்கும் அமுதன், கல்வியின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி இந்தக் கதைகளை எழுதியிருக்கிறார்.

குட்டித் தவளை கோபாலு,

மோ.கணேசன்,

வாலு பதிப்பகம்,

தொடர்புக்கு: 94442 96929

‘ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி', 'டும் டும் டும் தண்டோரா', 'டக்கு முக்குத் தக்காளி', 'நானும் பறப்பேன்' சிறார் பாடல் தொகுப்புகளைத் தொடர்ந்து இந்த ஐந்தாவது பாடல் தொகுப்பை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் மோ.கணேசன்.

அடேலியின் பனிமலைப் பயணம்,

சரிதா ஜோ, ஆலா பதிப்பகம்,

தொடர்புக்கு: 99407 16606

அண்டார்க்டிக் பனிப்பாறை களில் தனியே சென்ற அடேலி பென்குவினின் பாதிப்பில் அடேலி, ஜப்பானிய விலங்குக் காட்சியகத்தில் அம்மாவால் கைவிடப்பட்ட பஞ்ச் என்கிற குரங்கு, ஆளு ஆமை - இப்படிச் செய்திகளில் அடிபட்ட பெயர்களின் அடிப்படையில் அதே பெயர்களைக் கொண்ட குட்டிக் கதாபாத்திரங்களைக் கொண்டு இந்தக் கதைகள் அமைந்துள்ளன.

நிறங்கள்,

பஞ்சு மிட்டாய் பிரபு, பஞ்சுமிட்டாய்

- ஓங்கில் கூட்டம்,

தொடர்புக்கு: 94980 62424

குழந்தைகள், ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள், ஒளிப்படக் கலைஞர்கள் எனப் பலரது வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதவை வண்ணங்கள் அதேநேரம் வண்ணங்கள் குறித்த அறிவியல் பின்னணியை, வரலாற்றைச் சொல்லும் நூல் தமிழில் இதுவரை இல்லை. அந்தக் குறையைப் போக்குகிறது பஞ்சுமிட்டாய் பிரபு எழுதியுள்ள இந்த நூல்.

நின்று உயர் நாயகி,

உமையவன்,

நிவேதிதா பதிப்பகம்,

தொடர்புக்கு: 89393 87296

இன்றைய பதின் பருவக் குழந்தைகளுக்குப் பாலினச் சமத்துவம், ஒற்றைப் பெற்றோர், அரசியல், விளம்பரங்களின் உண்மைத் தன்மை, பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் இந்தத் தொகுப்பில் தொகுக்கப் பட்டுள்ளன.

பாரதியார் பாடல்கள்,

தொகுப்பு: சு.பலராமன், காக்கைக் கூடு,

தொடர்புக்கு: 90436 05144

பாரதியார் இன்றி நவீனத் தமிழ் இல்லை. அதேநேரம் பாப்பா பாட்டைத் தவிர, குழந்தைகளுக்கு வேறு எதுவும் அவர் எழுதவில்லை என நினைக்கிறோம். பாரதியாரின் புகழ்பெற்ற, குறிப்பிடத்தக்க 35 பாடல்கள் / பாடல் பகுதிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கலாம்.

தமிழ் ஆரம்,

குரு அரவிந்தன், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்,

தொடர்புக்கு: 94443 60421

கனடிய தமிழ்ச் சிறுவர் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான குரு அரவிந்தன் எழுதிய 10 சிறார் பாடல்கள், வண்ணப் படங்களுடன் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

சிந்திக்க வைக்கும் பழமொழிக் கதைகள்,

கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம்,

தொடர்புக்கு: 99406 97483

நீதி சொல்லும் குழந்தைக் கதைகள் தற்காலத்தில் ரசித்துப் படிக்கப் படுவதில்லை. அதேநேரம், பள்ளித் தேர்வுகளில் பழமொழிகளை விளக்கும் கதைகள் கேட்கப்படுகின்றன. அப்படிக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் 25 பழமொழிகள் அடிப்படையிலான கதைகளை ஓய்வுபெற்ற ஆசிரியரான கமலா இந்த நூலில் எழுதியுள்ளார்.

புதிய சிறார் நூல்கள்
ஜென் ஸீ கையில் தமிழ் மரபு | இளம் தொழில்முனைவோர்

X