

எட்டு வால்வோ பேருந்துகளின் அளவுதான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் வாழும் இடத்தின் அளவு. இதில்தான் 7 பேர் சராசரியாக ஆறு மாதங்கள் தங்கி வேலை செய்வார்கள். பூமியிலிருந்து சுமார் 400 - 450 கி.மீ. உயரத்தில் இது சுற்றுகிறது. 93 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றிவரும். அதாவது ஒரு நாளைக்கு 15 - 16 முறை பூமியை வலம்வந்துவிடும்.
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிவரும் பகுதியில், தெர்மா ஃபிளாஸ்க்கில் உள்ள வெற்றிடத்தைவிட ஆயிரம் மடங்கு குறைவான வெற்றிடம் உள்ளது. ஆயினும் மனிதர்கள் இயல்பாக வாழ்வதற்கு ஏற்ற வகையில், விண்வெளி நிலையத்தின் உள்ளே பூமியின் தரைப்பரப்பில் உள்ள அதே காற்றழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்டிருக்கும். விண்வெளி நிலையக் காற்றில் 20 சதவீதம் ஆக்சிஜனும், 80 சதவீதம் நைட்ரஜனும் இருக்கும்.
ஏனைய வாயுக்கள் மிகச் சொற்ப அளவே இருக்கும். உள்ளே வாழும் பயணிகள் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு, உடல் வெளியிடும் வாயுக்கள், வியர்வை, பல இயந்திரங்கள் வெளியிடும் வாயுக்கள் போன்றவை கலந்தே விண்வெளி நிலையத்தில் காற்று இருக்கும். காற்று சுத்திகரிக்கும் கருவிகள் இந்தக் காற்றைச் சுத்தம் செய்கின்றன. கார்பன்டை ஆக்சைடு பிரிக்கப்பட்டு, மறுபடியும் ஆக்சிஜன் தயாராகிறது.
துர்நாற்ற வாயுக்கள் உறிஞ்சப்பட்டு அகற்றப்படுகின்றன. எனினும், அந்தக் காற்றைச் சுவாசித்துப் பல மாதங்கள் வாழ்ந்தவர்கள், அதில் உடல் வெளியிடும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் என்கிறார்கள். அவ்வப்போது பூமியிலிருந்து புதிய நைட்ரஜனும் ஆக்சிஜனும் எடுத்துச் செல்லப்பட்டு, விண்வெளி நிலையத்தில் உள்ள துர்நாற்றக் காற்றை வெளியேற்றி, புதிய காற்றை நிரப்புவார்கள்.
அவ்வப்போது பூமியிலிருந்து சுத்தமான நீரை எடுத்துச் செல்வார்கள் என்றாலும், எல்லா நீரும் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்படும். சூரியஒளி படும் பகுதியில் வெளியே வெப்பம் 121 டிகிரி செல்சியஸில் தகிக்கும். அதே நேரம் சூரியஒளி படாத பகுதியில் மைனஸ் 157 டிகிரி செல்சியஸ் உறைகுளிராக இருக்கும். ஆயினும் விண்வெளி நிலையத்தின் உள்ளே மனிதர்கள் வாழ இதமான 21 - 23 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் வைப்பார்கள்.
பசித்தால் விண்வெளியில் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட முடியாது. ஏனெனில், இவற்றிலிருந்து வெளிவரும் நுண்ணியத் துகள்கள் விண்வெளி நிலையத்துக்குள் மிதக்கும். இவை மின்னணுக் கருவிகளைச் சேதப்படுத்தும் அபாயம் உண்டு. அல்லது விண்வெளி வீரர்களின் சுவாசக் குழாயில் புகுந்து உடல்நலக் கேடுகளை விளைவிக்கும். எனவே வடை போன்ற திடமான உணவு வகைகளே விண்வெளிக்கு ஏற்றது. சிப்ஸ் எல்லாம் சாப்பிட முடியாது.
எனவே, விண்வெளியில் உண்ண ஏற்ற 300க்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தயார் செய்துள்ளனர். இதிலிருந்து ஒவ்வொரு விண்வெளி வீரரும் தனக்கு விருப்பமான உணவுப் பட்டியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். விண்வெளிக்குச் செல்லும்போதும், அவ்வப்போது விண்வெளி நிலையத்துக்கு செல்லும் சரக்கு விண்கலத்திலும் உணவு வகைகளைப் பதப்படுத்தி அனுப்புவார்கள். அந்த நேரத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே பழங்களும் காய்கறிகளும் கிடைக்கும்.
விண்வெளி வீரர்களின் உணவுப் பட்டியலில் சிக்கன் ஃபஜிதாஸ் (சுவையூட்டப்பட்ட இறைச்சி, காய்கறிகள்), மக்ரோனி, சீஸ், இறால் போன்றவை பிரபலமானவை.
விண்வெளியில் உணவைச் சூடுபடுத்த மைக்ரோவேவ் போன்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. நுண்ணீர்ப்புச் சூழலில் மனிதர்களின் சுவை மொட்டுகள் மந்தமாகிவிடுகின்றன. இதனால், உணவுக்குச் சுவை சேர்க்க, திரவ உப்பு, எண்ணெயில் கரைக்கப்பட்ட மிளகு, காரச் சட்னி போன்ற சுவையூட்டிகளைப் பயன்படுத்துவார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 கழிவறைகள் உள்ளன. மேலும் அதில் சென்று இணையும் விண்கலங்களிலும் கழிவறைகள் இருக்கும். திரவக் கழிவை மறுசுழற்சி மூலம் சுத்தம் செய்து நீரைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவார்கள். திடக் கழிவைக் காற்றுப் புகாத துணிப்பைகளில் அடைத்துவிடுவார்கள்.
இவை விண்வெளி நிலையத்திற்குச் சென்று சேரும் சரக்கு விண்கலத்தில் வைக்கப்படும். சரக்கு விண்கலத்தின் ஆயுள் முடிந்ததும் அது பூமியை நோக்கி விழும். அப்போது பூமியின் வளிமண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு எரிந்து சாம்பலாக மாறிவிடும். விண்வெளியில் குளிப்பது சாத்தியமில்லை. எனவே ஈரத் துண்டு, சிறப்பு வேதிப் பொருள் பூசிய துணி போன்றவற்றைப் பயன்படுத்திதான் உடலைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
வியர்வை இல்லாத காரணத்தால் சில உடைகளை வாரக் கணக்கில் அணிந்து கொள்வார்கள். துணி துவைக்க முடியாது என்பதால், கழற்றிய ஆடைகளைச் சரக்கு விண்கலத்தில் குவித்துவிடுவார்கள். இதுவும் விண்கலம் பூமியில் விழும்போது எரிந்து சாம்பலாகிவிடும். பூமியில் நமது உடல் ஈர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, தலையின் எடையைக் கழுத்து தாங்கி நிற்கிறது. ஆனால் விண்வெளியில் மிதக்கும் நிலை இருப்பதால், உடலின் எந்தத் தசையும் எதிர்விசையைச் சந்திப்பதில்லை.
எனவே உடலின் எலும்புகளையும் தசைகளையும் பராமரிக்க, தினமும் சுமார் 2.5 மணி நேரம் உடற்பயிற்சி கட்டாயம். விண்வெளி நிலையத்தில் கிரீன்விச் நேரம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சுமார் 11 மணி நேரம் பணி செய்வார்கள். இதன்படி ஒவ்வொரு நாளும் காலை 6:30 மணிக்கு வேலை தொடங்கும், இரவு 9:30 மணிவரை நீளும். அதன் பின்னர் பயணிகள் உறங்கச் செல்லலாம். அவர்கள் வழக்கமாக வாரத்தில் 5.5 நாள்கள் பணியாற்றுகிறார்கள், மீதமுள்ள 1.5 நாள்கள் ஓய்வு.
காலை எழுந்ததும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டுப்பாட்டு நிலையம் சொல்லும். அதன்படி அந்த நாளின் செயல்பாடுகள் அமையும்.
விண்கலத்தின் கருவிகளைச் சரிபார்த்தல், பழுதுபார்த்தல், நிலையத்தைச் சீராக இயக்கத் தேவையான பணிகள் போன்ற விண்வெளி நிலையப் பராமரிப்பு தினசரிப் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும்.
மேலும் விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றொரு முக்கியப் பணி. விண்வெளி நடைப்பயணம் செய்து விண்கலத்திற்கு வெளியே சென்று பழுதுபார்ப்பது, புதிய கருவிகளைப் பொருத்துவது, ஆய்வுகளை மேற்கொள்வது வேறொரு பணி. இவைதவிர உண்ணுதல், உடற்பயிற்சி என ஒவ்வொருவருக்கும் தினசரி வேலைப் பட்டியல் தருவார்கள். அதன்படியே செயல்பட வேண்டும்.
இடையிடையே ஆபத்துகால நடவடிக்கை ஒத்திகைகள் நடைபெறும். ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது என்பதைக் கற்றுத்தரவும், எல்லாக் கட்டத்திலும் விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையமும் தயார் நிலையில் இருக்கவும் இது உதவும். ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கலாம், பாட்டுக் கேட்கலாம், பூமியில் உள்ள உறவினர்களோடு பேசலாம்!
(அறிவோம்)