பறக்க ஆசைப்பட்ட பட்டம் | கதை

பறக்க ஆசைப்பட்ட பட்டம் | கதை
Updated on
2 min read

சோலையூர் மிகவும் அழகானது. எங்கும் மரங்களும் செடிகொடிகளும் நிறைந்திருக்கும். அங்கே ஊருணியும் கண்மாயும் இருந்தன. கண்மாயின் கரையில் இருந்த புளியமரத்தின் மீது ஒரு பட்டம் படுத்துக் கிடந்தது.

“பட்டம் என்றால் பறக்க வேண்டும். நான் இப்படி மரத்தின் மீது படுத்துக் கிடக்கிறேனே...?” என்று அது புலம்பியது. அதைக் கேட்ட புளியமரம், “நீ ஓய்வெடுக்கிறாய் என்றல்லவா நினைத்தேன். உன்னை யார் கட்டிப் போட்டது? எழும்பிப் பறந்து செல்ல வேண்டியதுதானே?” என்று கேட்டது.

“நீ அறியாதது அல்ல. என்னால் தானாகவே பறக்க முடியாது. காற்றின் உதவி தேவை. நீண்ட நேரமாக நான் பறந்து செல்லும் அளவுக்குக் காற்று வீசவே இல்லை.” “கவலைப்படாதே, இன்னும் சிறிது நேரத்தில் காற்று வீசப்போகிறது. நீ பறந்து செல்லலாம்” என்று நம்பிக்கையுடன் சொன்னது புளியமரம்.

சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியது. பட்டத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பட்டம் தானாகப் பறக்கத் தொடங்கியது. “புளியமரமே, நீ சொன்னது போல் காற்று வீசுகிறது. நானும் பறக்கத் தொடங்கிவிட்டேன். மிக்க நன்றி” என்றது பட்டம்.

“பத்திரமாகப் பறந்து செல்” என்று வழியனுப்பி வைத்தது புளியமரம். சிறிது நேரத்தில் சட்டென்று காற்று நின்றுவிட்டது. உடனே அந்தப் பட்டம் மெதுவாகத் தரையிறங்கத் தொடங்கியது. ஆடி ஆடி வந்து ஒரு வீட்டு மாடியின் மேல் விழுந்துவிட்டது.

“ஐயோ... மீண்டும் படுத்துவிட்டேனே... என்னை யாராவது பறக்கவிட மாட்டார்களா?” என்று மீண்டும் புலம்பியது பட்டம். அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஏதோ சத்தம் கேட்கிறது என்று மாடிக்கு வந்தனர். விழுந்து கிடந்த பட்டத்தைக் கண்டனர்.

“ஆஹா! பட்டம்... பட்டம்... அப்பா, அந்தப் பட்டத்தை எடுத்துக்கொடுங்கள்” என்று இரண்டு குழந்தைகளும் உற்சாகத்தில் கத்தினர். உடனே அவர்களின் அப்பா அந்தப் பட்டத்தை எடுக்க வந்தார். பட்டம் அழத் தொடங்கியது. “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.

“காற்றில் பறந்து வந்து விழுந்ததில் என்னுடைய வால் கிழிந்து விட்டது, இனிமேல் என்னை யாரும் பறக்கவிட முடியாது. நானாகவும் பறக்க முடியாது” என்று அந்தப் பட்டம் அழுதுகொண்டே சொன்னது.

“நீ வருத்தப்படாதே, எங்கள் வீட்டில் இருக்கும் இந்த இரண்டு குழந்தைகளும் உன்னைக் கவனித்துக்கொள்வார்கள், உன்னைச் சரிசெய்து அவர்களே பறக்க விடுவார்கள்” என்று சொல்லிவிட்டு, குழந்தைகளிடம் பட்டத்தைக் கொடுத்தார்.

“அண்ணா, பட்டத்தோட வால் கிழிந்துவிட்டது. ஒட்டறதுக்குச் சோற்றுப் பருக்கைகளைக் கொண்டு வா” என்றாள் தங்கை. அண்ணன் சோற்றுப் பருக்கைகளுடன் வந்தான். இருவரும் சேர்ந்து கிழிந்த வாலை ஒட்டினார்கள். ஒரு நூல்கண்டை எடுத்துக் கட்டினார்கள். சிறிது நேரத்தில் பசை காய்ந்து, பட்டம் பறக்கத் தயாராக இருந்தது.

“அப்பாவும் அம்மாவும் வாங்க. நாங்க பட்டம் விடப் போறோம்” என்றார்கள் குழந்தைகள். எல்லாரும் மாடிக்குச் சென்றனர். பட்டத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

காற்று வேகமாக வீசியது. அண்ணனும் தங்கையும் பட்டத்தை அசைத்து அசைத்து மேலே பறக்கவிட்டனர். ஜிவ்வென்று பட்டம் காற்றில் உயர உயரப் பறந்து சென்றது.

குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கத்தினார்கள். சட்டென்று பட்டம் கீழ்நோக்கி வந்தது. குழந்தை களுக்குக் காரணம் புரியவில்லை. “என்னுடைய வாலை ஒட்ட வைத்து, என்னைப் பறக்க வைத்த உங்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். நன்றி செல்லங்களா” என்று சொல்லிவிட்டு, மீண்டும் பறக்கத் தொடங்கியது பட்டம்!

- ஜெ. பாண்டியராஜ்

பறக்க ஆசைப்பட்ட பட்டம் | கதை
புதிதாக அறிமுகமாகியுள்ள பட்டப் படிப்புகள் | வெற்றி உங்கள் கையில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in