

2013 நவம்பர் 5 அன்று ‘மங்கள்யான்’ என்கிற இந்திய விண்கலம் செவ்வாய்க் கோளுக்கு ஏவப்பட்டது. அடுத்த ஒரு மாதம் அது பூமியைச் சுற்றி வந்து, தேவையான வேகத்தைப் பெற்றது. பின்னர், டிசம்பர் 30, 2013 அன்று உந்தூர்தி ராக்கெட்டை இயக்கியதன் மூலம் கிடைத்த விசையில், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல விண்வெளியில் சீறிச் சென்றது.
அடுத்த 297 நாள்கள் அந்த விண்கலத்தின் ராக்கெட் இயங்கவில்லை. மீண்டும் செப்டம்பர் 22, 2014 அன்று, செவ்வாய்க் கோளுக்கு அருகில் நெருங்கிய நேரத்தில், விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க மீண்டும் ராக்கெட் இயக்கப்பட்டது. அதாவது, இடைப்பட்ட 297 நாள்கள் விண்கலம் விண்ணில் விரைந்து சென்ற போதும், எரிபொருள் தேவைப்படவில்லை.
‘ஒரு பொருளின் இயக்க நிலையை மாற்ற, ஒரு வெளிவிசை தேவை’ என்பதே நியூட்டனின் முதல் விதி. நகரும் பொருள் நகர்ந்துகொண்டே இருக்கும்; நிலையாக நிற்கும் பொருள் நகராமல் நின்றுகொண்டே இருக்கும். குறிப்பிட்ட திசையில் செல்லும் பொருள், அதே திசையில் செல்லும்.
உதாரணமாக, மேசையின் மீது வைக்கப்பட்டுள்ள புத்தகம், நாம் நகர்த்தாமல் இருந்தால் அங்கேயே நிலைத்திருக்கும். அதை நகர்த்த ஒரு விசை தேவைப்படும். அதேபோல, நேர்க்கோட்டில் சீரான வேகத்தில் உருட்டப்பட்ட பந்து, அதே வேகத்தில், அதே திசையில் என்றென்றும் நகர்ந்துகொண்டே இருக்கும். நகரும் பந்து நிற்கவோ திசை மாறவோ ஒரு வெளிவிசை தேவைப்படும். இதுவே இந்த விதியின் அடிப்படை.
நாம் தள்ளிவிடும் பந்து, சிறிது தூரம் சென்று நின்றுவிடுகிறதே! இங்குதான் ‘உராய்வு’ என்கிற விசையின் பங்கைப் புரிந்துகொள்ள வேண்டும். பந்துக்கும் தரைக்கும் இடையே உள்ள உராய்வுதான் அதன் இயக்கத்தை நிறுத்துகிறது. ஒரு மழை நாளில், சேறும் சகதியுமான சாலையில் பந்தை உருட்டினால், அது விரைவாக நின்றுவிடும்.
ஆனால், சிமெண்ட் தரையில், பந்து வெகு தூரம்வரை உருளும். உராய்வு குறைவாக இருப்பதால், பந்து ‘நகர்ந்துகொண்டே இருக்க’ முடிகிறது. இந்த விதியின் விளைவை நாம் தினசரி வாழ்வில் காணலாம். திடீரென பிரேக் அடிக்கும் பேருந்தில், நாம் முன்னால் தள்ளப்படுகிறோம். பேருந்து நின்றுவிடுகிறது, ஆனால் நம் உடல் ‘முன்னோக்கி நகரும்’ நிலையைத் தொடர முயல்கிறது.
இறுதியில் நாம் எதையாவது பிடித்தோ, மற்றொரு நபர் மீது மோதியோதான் நம் தடுமாற்றத்தை நிறுத்துவோம். எனவே, நியூட்டனின் முதல் விதி இயற்கையின் அடிப்படை விதி. உராய்வு இல்லாத இடத்தில், ஒரு பொருள் என்றென்றும் அதே இயக்க நிலையில் இருக்கும். விண்வெளியில் உராய்வு என்பதே இல்லை.
எனவே, விண்வெளியில் எறியப்பட்ட ஒரு பந்து என்றென்றும் அதே திசையில் சென்றுகொண்டிருக்கும். அதேபோல, ஒரு விண்கலமும் எந்தத் திசையில் ஏவப்பட்டதோ, அதே திசையில் எரிபொருள் தேவையின்றி சென்றுகொண்டே இருக்கும். பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து, வளிமண்டல உராய்வு விசையைச் சமாளித்து விண்வெளியை அடைய, தொடர்ச்சியாக விசை தேவைப்படுகிறது. இந்த விசையைத்தான் ஏவூர்தி வழங்குகிறது.
இந்த நிலையில் மட்டுமே எரிபொருள் தேவைப்படுகிறது. விண்வெளியை அடைந்த பின்னர், செவ்வாயை நோக்கித் திசை மாற்றுவதற்கு விசை தேவைப்படும்; அப்போதும் எரிபொருள் தேவைப்படுகிறது. பின்னர், பூமியிலிருந்து செவ்வாய்க் கோளைச் சந்திக்கும் புள்ளிவரை செல்ல, எரிபொருள் எதுவும் தேவை இல்லை. சந்திக்கும் புள்ளியில், அதே வேகத்தில் விண்கலம் சென்றால், அது செவ்வாய்க் கோளைத் தாண்டிச் சென்றுவிடும்.
எனவே செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசையில் சிக்கவைக்க, விண்கலத்தின் திசைவேகத்தை மாற்ற வேண்டும். இதற்காக மீண்டும் உந்தூர்தி ராக்கெட்டை இயக்க வேண்டியுள்ளது. இங்கே மீண்டும் எரிபொருள் தேவைப்படுகிறது. செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசையில் சிக்கிக்கொண்டால், பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள் போல, விண்கலம் செவ்வாய்க் கோளைச் சுற்றிவரத் தொடங்கும். இந்த நிலையில் மீண்டும் எரிபொருள் தேவை இல்லை.
பூமி, தன்னைத்தானே சுற்றிவர எந்த வெளிவிசையும் தேவை இல்லை. அதேபோல, பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்கும் எரிபொருள் தேவை இல்லை. ஆனால், பூமியைச் சுற்றிவரும் ஒரு செயற்கைக்கோளை, வேகமாக வந்து மோத இருக்கும் விண்வெளிக் குப்பையில் இருந்து தப்பிக்க, அதன் உயரத்தை மாற்ற வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
இந்த இயக்கத்தை மேற்கொள்ள, சிறிதளவு எரிபொருள் தேவைப்படும். அதேபோல, பூமியின் வேறொரு பகுதியின் படத்தை எடுக்க செயற்கைக்கோளின் கேமராவைத் திருப்ப வேண்டும் என்றாலும், இயக்கம் தேவைப்படுவதால், எரிபொருள் தேவைப்படுகிறது.
(அறிவோம்)
- tvv123@gmail.com