

நீண்ட காலமாகப் போர்க்களங்களில் இருக்கும் வீரர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எந்த நேரமும் ஆபத்து காத்திருக்கும். மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்ப இயலுமா என்கிற கவலை. குடும்பத்தைப் பிரிந்திருக்கும் துயரம்.
அசந்துகூட உறங்க இயலாத நெருக்கடி. இந்தச் சூழலில் போர் முகாம்களில் ஏதாவது செல்ல உயிரினத்தை வளர்ப்பது வழக்கமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் போலந்து ராணுவ வீரர்களிடம் போர் முகாமில் ஒரு வித்தியாசமான செல்ல உயிரினம் உற்சாகமாக, ஆஜானுபாகுவாக வலம்வந்தது.
அது ஒரு கரடி! தாய் இல்லாமல் ஒரு குட்டி ஆதரவின்றித் திரிந்து கொண்டிருந்தது. ஆடு மேய்க்கும் பாரசீகச் சிறுவன் ஒருவன், அந்தக் கரடிக் குட்டியை ஈரான் நாட்டின் அமாதான் நகரத்துக்கு எடுத்துச் சென்றார். யாராவது அந்தக் கரடிக்குட்டியை வாங்கிக்கொள்வார்கள், காசு கிடைக்கும் என்று நினைத்தான்.
இரீனா போகீவிச் என்கிற போலந்து பெண், டெஹ்ரான் நகரத்துக்குச் செல்லும் ரயிலில் இருந்தார். வழியில் அமாதான் ரயில் நிலையத்தில் நின்றது (1942, ஏப்ரல் 8). அங்கே கரடிக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்டார். அதை வாங்க ஆசைப்பட்டார். பணம் இல்லை.
அங்கே இருந்த போலந்து ராணுவ வீரர் ஒருவர், கரடிக்குட்டியை வாங்கிக் கொடுத்தார். டெஹ்ரானில் போலந்து மக்களுக்கான அகதிகள் முகாமில் கரடிக்குட்டி வளர ஆரம்பித்தது. சில மாதங்கள்தான். அது வளர, வளர இரீனாவால் பராமரிக்க இயலவில்லை. ஆகவே, போலந்து ராணுவ முகாமில் கரடியை ஒப்படைத்தார்.
போலந்து வீரர்கள் அதற்கு ‘வோய்தெக்’ (wojtek - மகிழ்ச்சியான வீரன்) என்று பெயர் வைத்தனர். பால், பழம், தேனை விரும்பிச் சாப்பிட்டது வோய்தெக். காபி குடிக்கவும் பழகிக்கொண்டது. ராணுவ முகாமிலேயே வளர்ந்ததால், போலந்து ராணுவச் சீருடை அணிந்த ஒவ்வொருவரிடமுமே அது பாசமாகப் பழகியது.
அந்த முகாமிலிருந்த ஒவ்வொருவருமே வோய்தெக்குடன் மகிழ்ந்து விளையாடினர். மனிதர்களுடன் வளர்ந்ததால், அந்தக் கரடி மனிதப் பழக்கங்கள் சிலவற்றை பழகிக்கொண்டது. ‘வா… உனக்கும் எனக்கும் போட்டி வச்சுக்கலாமா?’ என்று வோய்தெக்குடன் வீரர்கள் மல்யுத்தம் செய்து விளையாடினார்கள்.
அந்த ராணுவ முகாமில் வோய்தெக்குக்கு எனத் தனியாக உணவுச் செலவு, மாதச் சம்பளம், படுப்பதற்குத் தனி இடம், உபயோகிப்பதற்குத் தனி பொருள்கள், தனியாக ராணுவப் பயிற்சி என்று அனைத்தும் வழங்கப்பட்டன. தன் பெயருக்கு ஏற்ப மகிழ்ச்சியான வீரனாகத்தான் வோய்தெக்கும் மளமளவென வளர்ந்தது.
ஒருமுறை ராணுவ முகாமுக்குள் எதிரி வீரர் ஒருவர், அங்குள்ள வெடிமருந்துகளைத் திருடும் நோக்கத்துடன் ரகசியமாக நுழைந்தார். அங்கே இருந்த கூடாரம் ஒன்றுக்குள் எட்டிப்பார்த்தார். தூங்கி எழுந்த வோய்தெக் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது. அந்த எதிரி பயத்தில் அலறினார். மாட்டிக்கொண்டார். இப்படித் தனது முகாமுக்குப் பாதுகாவலனாகவும் வோய்தெக் இருந்தது.
போலந்து ராணுவ வீரர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அவர்களுடனேயே வோய்தெக்கும் சென்றது. எகிப்துக்குச் செல்லும் வழியில் காசா நகரத்தில் முகாமிட்டி ருந்தார்கள். வோய் தெக்கால் அங்கிருந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. தண்ணீரைத் தேடி அலைந்தது. எல்லாருடைய பயன்பாட்டுக்கும் இருந்த நீரையும் குளித்துக் காலி செய்தது.
யாரும் கோபப்படவில்லை. வோய்தெக்குக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க அந்த வீரர்கள் தயாராகவே இருந்தார்கள். போலந்து ராணுவ வீரர்கள், தங்கள் கூட்டணி நாடான பிரிட்டன் போர்க்கப்பலில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. விலங்குகளை ஏற்ற மாட்டோம் என்று விதிமுறைகளைச் சொன்னார்கள்.
போலந்து வீரர்கள் வோய்தெக்கை விட்டுக்கொடுக்க வில்லை. அதுவும் ராணுவ வீரனே. எங்கள் சம்பளப் பட்டியலில்கூட அதன் பெயர் இருக்கிறது என்று போராடி, கப்பலில் ஏற்றிய பிறகே புறப்பட்டனர். 1944இல் இத்தாலியின் மோண்ட்டே கேஸினோ களத்தில் ஆறடி வோய்தெக் ஆஜானுபாகுவாக வலம்வந்தபோது, எதிரிப் படையினர் சற்றே நடுங்கித்தான் போயினர்.
தன் மேலதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பது, மார்ச் ஃபாஸ்ட் செய்வது, வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட பெட்டியைப் போலந்து வீரர்களிடம் கொடுக்கும் பணியையும் வோய்தெக் செவ்வனே செய்தது. கரடி ஒன்று களத்தில் ஆயுதங்களுடன் நடமாடும் படம் சர்வதேச அளவில் செய்தித்தாள்களில் கவனம் பெற்றது.
வோய்தெக் கையில் வெடிகுண்டுடன் இருப்பது போன்ற ஓவியம், போலந்தில் அந்தப் படைப்பிரிவின் சின்னமாகவே வைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற வோய்தெக், கௌரவப் பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றது.
பிறகு பல ஊர்களுக்குச் சென்ற வோய்தெக், மக்களால் War Hero ஆகக் கொண்டாடப்பட்டது. 1947இல் ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் உயிரியல் பூங்காவுக்கு வோய்தெக் அனுப்பி வைக்கப்பட்டது.
சுமார் 16 வருடங்கள் அங்கேயும் ஹீரோவாக வாழ்ந்து தன் வாழ்க்கையை நிறைவு செய்துகொண்டது (1963). போலந்தில் சில இடங்களில் வோய்தெக்குக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். வோய்தெக்கை நாயகனாகக் கொண்ட படைப்புகளும் கதைப் புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com