

1738 அசாமின் வனப்பகுதி. டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி ஜான் அல்பெர்ட் சிக்டெர்மேன் கண்ணில் ஒரு மாதப் பெண் காண்டாமிருகக் குட்டி தென்பட்டது. அதன் தாயை யாரோ கொன்றுவிட்டனர். ஜான் அல்பெர்ட், குட்டியைத் தன்னுடன் எடுத்துச் சென்றார். கல்கத்தாவுக்கு அருகில் அமைந்த அவர் மாளிகையின் தோட்டத்தில் அந்தக் குட்டி சுதந்திரமாக உலவியது.
1740. கப்பல் கேப்டன் வான் டெர் மீர், ஜான் அல்பெர்ட்டைச் சந்திக்க வந்தார். அப்போது இரண்டு வயதான காண்டாமிருகம், அவருடன் ஒட்டிக்கொண்டது. வான் டெர் மீருடன் அது கப்பல் ஏறியது.
கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு, இந்தியப் பெருங்கடலைக் கடந்து, ஆப்ரிக்கக் கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, ஐரோப்பியக் கண்டத்தைச் சென்றடைந்தது. 1741, ஜுலை 22 அன்று நெதர்லாந்தில் அது ‘மிஸ் கிளாரா’ என்கிற பெயர் கொண்ட காண்டாமிருகமாகக் கால்பதித்தது.
கேப்டன் டெர் மீருக்கு ஒரு காண்டாமிருகத்தைப் பராமரித்து வளர்ப்பது சாதாரண விஷயமல்ல என்பது புரிந்தது. எனவே, மிஸ் கிளாராவை வைத்துச் சம்பாதிப்பது எப்படி என்கிற திட்டத்தைத் தீட்டினார்.
ரோட்டர்டாம் நகரத்தில் முதன்முதலாக மிஸ் கிளாராவைக் காட்சிப்படுத்தினார். ‘இந்தியாவின் பேரதியச விலங்கைக் காண வாருங்கள்! இதுவரை நீங்கள் பார்த்தேயிராத காண்டாமிருகத்தைக் காண வாருங்கள்!’ மக்கள், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு குவிந்தார்கள்.
ரசித்தார்கள். நெதர்லாந்து எங்கும் கிளாரா பற்றிய பேச்சுதான். அடுத்து பெல்ஜியத்தின் நகரங்களில் கிளாரா கால் பதித்தது. போகும் இடங்களில் எல்லாம் குறைவின்றி வசூலானது. இனி கப்பல் வேலையை மறந்துவிட வேண்டியதுதான். மிஸ் கிளாராவை ஐரோப்பியக் கண்டம் எங்கும் கொண்டுசென்று காட்சிப்படுத்தினாலே போதும்.
நன்றாகச் சம்பாதிக்கலாம் என்று கேப்டன் டெர் மீர் முடிவெடுத்தார். ஆனால், கிளாராவை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்வது என்பது பெரும் சவாலாக இருந்தது. மிகப்பெரிய வசதியான மரக்கூண்டு ஒன்றைச் செய்யச் சொன்னார் டெர் மீர். ஏகப்பட்ட தச்சர்கள் சேர்ந்து அந்தக் கூண்டை உருவாக்கினார்கள்.
கூண்டையும் அதனுள் கிளாராவையும் வைத்து இழுத்துச் செல்வதற்கேற்ப வண்டி ஒன்று தயார் செய்யப்பட்டது. அதை இழுத்துச் செல்ல 8 குதிரைகள் தேவைப்பட்டன. அந்தக் கூண்டின் மேல் பக்கத்தில் ஒரே ஒரு ஜன்னல் வைக்கப்பட்டது. பயண வழி எங்கும் மக்கள் ஆர்வத்துடன் நின்றார்கள்.
அவர்கள் பார்வையில் கூண்டு தெரிந்ததே தவிர, கிளாரா தென்படவே இல்லை. பார்க்க விரும்புபவர்கள் காசு கொடுத்துதான் பார்க்க வேண்டும் என்பதற்காக டெர் மீர் அப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
கிளாராவின் முழு நீள ஐரோப்பியச் சுற்றுப் பயணம், 1746ஆம் ஆண்டின் மத்தியில் ஆரம்ப மானது. கிளாராவின் தோல்களை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்திருக்க மீன் எண்ணெய். அதற்குத் தேவையான உணவைச் சரியான நேரத்தில் கொடுக்க, அதைப் பராமரிக்கப் பணியாளர்கள்.
அதை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்ல வேலையாள்கள் என ஒரு குழுவே கிளாராவின் பயணங் களுக்காக உழைக்க வேண்டியிருந்தது. பெர்லின், ஃபிராங்பர்ட், வியன்னா, ரீகன்ஸ்பர்க் என்று பயணம் நீண்டது. பிரெஷ்ய மன்னர், புனித ரோமப் பேரரசர், போலந்து மன்னர் என்று ஆட்சியாளர்களைச் சந்தித்து மகிழ்வித்தது. ராஜ மரியாதையைப் பெற்றது.
1747ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸை பிரான்ஸில், கிளாராவுடனும் அதன் பார்வையாளர்களுடனும் கொண்டாடினார் டெர் மீர். அடுத்த ஆண்டும் பல ஐரோப்பிய நகரங்களைச் சுற்றிவிட்டு, 1749ஆம் ஆண்டு புத்தாண்டை பிரான்ஸ் அரசர் பதினைந்தாம் லூயியுடன் கொண்டாடியது கிளாரா.
ஓவியர்கள் அதை வரைவதற்காகப் படையெடுத் தனர். சிற்பிகள் வந்து சென்றனர். வெண்கலச் சிலைகள், பாத்திரங்களில் கிளாராவின் ஓவியம், பரிசுப் பொருள்களில் உருவம் என்று கௌரவிக்கப் பட்டது கிளாரா. குழந்தைகள் குட்டிக் கண்கள் விரிய, கண்டு மகிழ்ந்தனர். கவிஞர்கள் வந்து கவிதை பாடிச் சென்றனர்.
ஆய்வாளர்கள் வந்து குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். பெண்கள், கிளாரா கொம்பின் சாயலில் புதிய சிகையலங்காரம் செய்து கொண்டார்கள். பாரிஸின் பத்திரிகைச் செய்திகளில் கிட்டத்தட்ட தினமும் கிளாரா இடம்பிடித்தது. 1749ஆம் ஆண்டில் ஜீன்-பாப்டிஸ்ட் ஓட்ரி என்கிற பிரெஞ்சு ஓவியர் கிளாராவை வரைந்த ஓவியம் மிகவும் புகழ்பெற்றது.
1751ஆம் ஆண்டில் லண்டனுக்குச் சென்ற கிளாராவை, பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினர் கண்டு மகிழ்ந்தனர். அடுத்த ஏழு ஆண்டுகள் வரை கிளாராவின் ஐரோப்பியப் பயணங்கள் தொடர்ந்தன. டெர் மீருக்கு வசூலும் குவிந்தது. 1758. லண்டனின் லாம்பெத் நகரத்தில் கிளாராவின் காட்சி நடந்தது. திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த ஏப்ரல் 14 இல் 20 வயதில் அது இறந்து போனது.
Clara’s Grand Tour: Travels with a Rhinoceros in Eighteenth-Century Europe, இது கிளினிஸ் ரிட்லி என்பவர் எழுதிய கிளாராவின் வாழ்க்கை வரலாற்று நூல். கிளாராவை வைத்துக் குழந்தைகளுக்கான கதைப் புத்தங்களும் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன. மறைந்து 267 ஆண்டுகள் கழித்தும் கிளாரா இப்போதும் படைப்புகள் வழியே உலகைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com