

மனிதகுலத்துக்கு அதிகச் சேதாரம் ஏற்படுத்தும் உயிரினம் எது என்று கேட்டால், எல்லாருடைய கைகளும் எலியை நோக்கி நீளும். இன்னொருபுறம் மனிதர்களின் பல்வேறு பரிசோதனை முயற்சிகளுக்கு எலிகளே உயிர்த்தியாகம் செய்து கொண்டிருக்கின்றன. ஆபத்தான களத்தில் துணிவுடன் ஓடியாடி, மனிதர் களின் உயிர்களைக் காப்பாற்றிய ஒரு வீர தீர சூர எலிதான் மகாவா.
மனிதன் உருவாக்கிய மோசமான ஆயுதங்களுள் ஒன்று கண்ணிவெடி. நிலத்தில் புதைத்துவிட்டால், எதிரிகளின் கால்பட்டுச் சின்னாபின்னமாகி விடுவார்கள். எப்போதோ நடந்த போர்களுக்காக நிலத்தில் புதைக்கப்பட்டு, நீக்கப்படாமல் இருக்கும் கண்ணிவெடிகள் உலகின் பல பகுதிகளில் இருக்கின்றன. கம்போடியா தேசமும் அதில் ஒன்று. சென்ற நூற்றாண்டில் கம்போடியாவின் பல பகுதிகளில் போர் நடவடிக்கைகளுக்காகக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன.
போர்கள் முடிந்த பிறகும் அவை அகற்றப்படவில்லை. ஏனெனில் அவற்றை அகற்றுவது என்பது எளிதான காரியமே இல்லை. கம்போடியாவில் மட்டும் 40 முதல் 60 லட்சம் கண்ணிவெடிகள் இன்னும் நிலத்துக்குள் இருந்தபடி உயிரைப் பறிக்கக் காத்திருக்கின்றன என்று அந்தத் தேசத்தின் அதிகாரபூர்வத் தகவல் சொல்கிறது. கண்ணிவெடி விபத்துகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளில் கம்போடியா முன்னணியில் இருக்கிறது.
அங்கே சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்ணிவெடியில் சிக்கி கை, கால்களை இழந்துள்ளனர். கண்ணிவெடிகள் நிலத்தில் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்று கண்டறிவதுதான் இருப்பதிலேயே பெரிய சவால். அதற்காகவே APOPO (Anti-Personnel Landmines Detection Product Development) என்கிற பெல்ஜியத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வாழும் அளவில் பெரிய எலிகளுக்கு (Southern giant pouched rat) மோப்ப சக்தி அதிகம். மனிதர்கள் கற்றுக் கொடுக்கும் விஷயங்களைச் செயல்படுத்தும் திறன் உண்டு. இந்த எலிகளை இவர்கள் HeroRATs என்கிறார்கள். இந்த எலிகளே தற்போது கம்போடியாவில் ஆபரேஷன் கண்ணிவெடி நீக்கத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
தான்சானியாவில் பிறந்த எலி அது. APOPO அமைப்பினர் மகாவா (துணிவு) என்று பெயர் வைத்து, ஓராண்டுப் பயிற்சி கொடுத்தனர். முதலில் மனிதர்களோடு பழக்குவது. மனிதர்களைப் பார்த்தால் ஓடி ஒளியும் கூச்ச சுபாவத்தை நீக்குவது. பின்பு வெவ்வேறு விதமான ஒலிகளை எலிகளுக்குப் பழக்குவது. எந்தச் சத்தத்துக்கும் அஞ்சாமல் இருக்கப் பயிற்சி அளிப்பது.
அடுத்து வெவ்வேறு சூழ்நிலைகளில் எலிகளை விட்டு, அவற்றைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்வது. இவை எல்லாம் அடிப்படைப் பயிற்சிகள். அடுத்தது முக்கியமான பயிற்சி. வெடிமருந்துப் பொருள்களை மோப்பம் பிடித்துக் கண்டறிவது. பல்வேறு வாசனைகளை எலிகளுக்கு அறிமுகப்படுத்தி, அதில் எவை வெடிமருந்துப் பொருள்களுக்கான வாசனை என்று உணர வைப்பது.
அடுத்த நிலை மிக முக்கியமானது. போலியான கண்ணிவெடிகளுக்கு மத்தியில், நிஜக் கண்ணிவெடியைக் கண்டறியப் பயிற்சி அளிப்பது. நிஜக் கண்ணிவெடியைக் கண்டறிந்ததும் மண்ணைச் சுரண்டி சைகை காட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனால் எலிகளுக்கு ஆபத்து இல்லை. ஏனென்றால் எலிகள் எடை குறைவானவை. அவை கண்ணிவெடிகள் மீது நடந்து சென்றாலும் அது வெடிக்கும் அளவுக்கு அழுத்தம் உண்டாகாது. அவை மனிதர்களைவிட வேகமானவை. ஆகவே அதிகப் பரப்பளவில் ஓடிச்சென்று, மோப்ப சக்தியால் கண்ணிவெடிகளைக் கண்டறிந்துவிடுகின்றன.
மகாவாவும் ஓர் ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் கம்போடியாவுக்கு அழைத்துவரப்பட்டது. கண்ணிவெடிகள் நிறைந்த களத்தில் இறக்கிவிடப்பட்டது. முதல் நாளிலிருந்தே அதன் செயல்திறன், ஆச்சரியப்படும் அளவுக்கு இருந்தது.
மிகத் திறமையாக, அசல் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து, மண்ணைக் கீறி ‘சிக்னல்’ கொடுத்தது. பின்பு, கண்ணிவெடியை அகற்றும் நிபுணர், மகாவா காட்டிக் கொடுத்த இடத்துக்குச் சென்றார். கண்ணிவெடியைத் தகுந்த பாதுகாப்புடன் அகற்றினார்.
இருபதே நிமிடங்களில் ஒரு டென்னிஸ் மைதானம் அளவுக்கான நிலப்பரப்பில் கண்ணிவெடி இருக்கிறதா என்று கண்டறியும் வேகமும் திறனும் மகாவாவுக்கு இருந்தது. ஒவ்வொரு முறையும் சரியான கண்ணிவெடியைக் கண்டறிந்தால், பரிசாகப் பிடித்த உணவைக் கொடுத்து, உற்சாகப்படுத்தினர். ஒவ்வொரு முறையும் மகாவா உற்சாகமாகப் பரிசுகளை வென்றுகொண்டே இருந்தது.
மகாவா தன் வாழ்நாளில் ஆபத்துகள் நிறைந்த 1,41,000 ச.மீ. பரப்பளவு கண்ணிவெடிகளைக் கண்டறிந்து, அவற்றை அகற்ற வழிசெய்துள்ளது. இந்தப் பரப்பளவு என்பது பத்துக் கால்பந்து மைதானங்களுக்குச் சமமானது. மகாவாவால் கண்டறியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் செயலிழப்பு செய்யப்பட்டுள்ளன.
இப்படியாக நூற்றுக்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது மகாவா. எனவே அதற்கு வீர தீரச் செயல்களுக்காக வழங்கப்படும் PSDA பதக்கம் வழங்கினர். இந்தக் கௌரவத்தைச் சம்பாதித்த முதல் எலி மகாவாவே! சுமார் ஐந்து ஆண்டுகள் மகாவா கண்ணிவெடி கண்டறியும் வீரனாகக் களத்தில் அசத்தியது.
பின்பு வயதான காரணத்தினால் இயல்பாகவே அதன் மோப்ப சக்தி குறைந்துபோனது. எனவே பணி ஓய்வு பெற்றது. ஜாலியாக விளையாடிக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் ஓய்வுக் காலத்தை அனுபவித்தது. 2022 ஜனவரியில், ‘நான் மனிதகுலத்துக்கு எப்பேர்ப்பட்ட சேவை செய்திருக்கிறேன்’ என்கிற கர்வம் துளிகூட இல்லாமல் அமைதியாகக் கண்களை மூடியது மகாவா.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com