

1966இல் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இங்கிலாந்து பெற்றது. உருகுவே, இத்தாலி, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. யார் மூன்றாவது முறை சாம்பியன் பட்டம் வென்று, ஜூல்ஸ் ரிமெட் கால்பந்து உலகக் கோப்பையைத் தங்கள் நாட்டுக்குத் தூக்கிச் செல்லப் போகிறார்கள் என்று உலகமே காத்திருந்தது. ஆனால், கோப்பையைத் திருடர்கள் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
1966 ஜூலையில் இங்கிலாந்தில் போட்டிகள் தொடங்குவதாக இருந்தன. அதற்கு முன்பாக ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, அங்கே சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. மார்ச் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் சென்ட்ரல் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. கோப்பையைப் பாதுகாப்பதற்கு என்றே அந்த அறைக்குக் காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
மார்ச் 20, ஞாயிறு. நண்பகல் 12.10. காவலர்கள் கோப்பை வைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தனர். கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அறையின் பின்கதவு திறந்து கிடந்தது. கோப்பை அங்கே இல்லை. உடனடியாக இங்கிலாந்து முழுவதும் செய்தி அனுப்பப்பட்டது. காவலர்கள் பல இடங்களிலும் தேடினர். ‘ஜூல்ஸ் ரிமெட் கோப்பையைக் காண வில்லை’ என்கிற செய்தி உலகம் எங்கும் கால்பந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
இங்கிலாந்து கால்பந்து அமைப்பின் சேர்மன் ஜோ மியர்ஸுக்கு மார்ச் 21 அன்று, தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஜாக்சன் என்பவர், ‘நாளை பார்சல் வரும்’ என்றார். மார்ச் 22 அன்று மியர்ஸின் வீட்டுக்கு வந்த பார்சலில், கோப்பையின் மேல்புறம் பூசப்பட்டிருந்த பூச்சை மட்டும் உரித்து அனுப்பி இருந்தார்கள். அந்தக் கோப்பையின் அன்றைய மதிப்பு 3,000 பவுண்ட்.
கோப்பையைக் கடத்தியவர்கள் 15,000 பவுண்ட் கேட்டுக் கடிதம் அனுப்பி இருந்தார்கள். காவல்துறைக்கோ பத்திரிகைகளுக்கோ தகவல் கொடுக்கக் கூடாது. பணம் சரியாக வந்து சேர்ந்தால், மார்ச் 25 அன்று கோப்பை திரும்ப வந்துவிடும். இல்லை என்றால் உருக்கி விடுவோம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் மியர்ஸ், காவல் துறைக்குத் தகவல் சொன்னார். கொஞ்சம் பணத்தையும் நிறைய வெற்றுக் காகிதங்களையும் நடுவில் நிரப்பி, சூட்கேஸ் ஒன்றைத் தயார் செய்தார்கள். மார்ச் 25 அன்று மியர்ஸுக்கு ஜாக்சனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு பூங்காவுக்கு வரச் சொன்னார்.
அங்கே பணம் கைமாறியது. ஜாக்சன் காரில் புறப்பட்டார். நீண்ட துரத்தலுக்குப் பின் ஜாக்சன் சிக்கினார். இவர், ஏற்கெனவே பல வழக்குகளில் தேடப்பட்ட எட்வர்ட் பெட்ச்லே. ‘நான் கோப்பையைத் திருடவில்லை. இந்தக் காரியத்தை முடித்துக் கொடுத்தால் பணம் தருவதாகச் சொன்னார்கள். எனக்குக் கோப்பை எங்கிருக்கிறது என்று தெரியாது’ என்று வாக்குமூலம் கொடுத்தார் ஜாக்சன். ஆனால், வழக்கு அவர் மீது பதியப்பட்டது.
மார்ச் 27. லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் டேவிட் கோர்பெட், பிக்கிள்ஸ் என்கிற நாயுடன் நடந்து கொண்டிருந்தார். சிறுநீர் கழிப்பதற்காகப் புதர்ப்பகுதியில் ஒதுங்கியது பிக்கிள்ஸ். அங்கே செய்தித்தாள் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்றை மோப்பம் பிடித்துக் குரைத்தது. டேவிட் சந்தேகத்துடன் செய்தித்தாளை விலக்கி, பெட்டியைத் திறந்தார்.
உள்ளே ஒரு கோப்பை இருப்பதைக் கண்டார். 1930 சாம்பியன் உருகுவே, 1934 சாம்பியன் இத்தாலி என்று வரிசையாக நாடுகளின் பெயர்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்தான், அது காணாமல் போன ஜூல்ஸ் ரிமெட் உலகக் கோப்பை என்று புரிந்துகொண்டார். அருகில் இருந்த காவல் நிலையத்துக்குக் கோப்பையுடன் விரைந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏகப்பட்ட கேமராக்கள், ‘துப்பறியும் ஸ்டார்’ பிக்கிள்ஸை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்தன. இந்தப் பரபரப்புகளுக்குப் பிறகு நடந்த அந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தே சாம்பியன் பட்டம் வென்று பெருமை தேடிக்கொண்டது. பிக்கிள்ஸ் இங்கிலாந்தின் நட்சத்திரமானது.
உலகம் விரும்பும் உன்னத நாயானது. கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி வீரர்களுடன் அது உணவு உண்டது. ‘இங்கிலாந்துக்குக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்ததில் வீரர்களுக்கு மட்டுமல்ல, பிக்கிள்ஸுக்கும் பங்கு இருக்கிறது’ என்று பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின. ‘அந்த வருடத்தின் சிறந்த நாய்’ என்று விதவிதமான விருதுகளை வாங்கிக் குவித்தது. The Spy with a Cold Nose என்கிற திரைப்படத்தில் நடித்து, கூடுதல் புகழ்பெற்றது.
பிக்கிள்ஸ் தன் புகழால் டேவிட்டுக்கு ஒரு வீடு வாங்கும் அளவுக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால், அந்த வீட்டில் பிக்கிள்ஸ் அதிக காலம் வாழவில்லை. 1967. டேவிட்டின் மகன் பிக்கிள்ஸை அழைத்துக் கொண்டு வெளியே போனான். பிக்கிள்ஸுக்குப் பூனைகளைக் கண்டாலே ஆகாது. அன்றைக்கும் ஒரு பூனையைக் கண்டு, அந்தப் பையனின் பிடியிலிருந்து நழுவி, அதைப் பிடிக்க ஓடியது. அடுத்த தெருவில் இறந்து கிடந்தது.
தற்செயலாகச் செய்த ஒரே ஒரு சம்பவத்தால் இன்றுவரை புகழுடன் வாழ்கிறது. மான்செஸ்டர் தேசிய கால்பந்து அருங்காட்சியகத்தில் பிக்கிள்ஸின் கழுத்துப் பட்டை, காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஜூல்ஸ் ரிமெட் உலகக் கோப்பையைத் திருடியது யார், கோப்பை எப்படி அந்தப் புதருக்குள் சென்றது என்பதற்கான மர்மம் இன்னும் விலகவில்லை!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com