கிளியோபாட்ராவும் சாயாவும் | வரலாறு முக்கியம் மக்களே! - 30

கிளியோபாட்ராவும் சாயாவும் | வரலாறு முக்கியம் மக்களே! - 30
Updated on
2 min read

ஓர் ஒளிப்படம் அந்த ‘இருவரையும்’ உலகப் புகழ்பெற வைத்தது. இது உண்மையான ஒளிப்படமா, அல்லது கிராபிக்ஸ் வேலையா என்றுகூடச் சிலருக்குச் சந்தேகம் வந்தது. உண்மையான ஒளிப்படம் என்று அறிந்துகொண்டபோது, ஆச்சரியத்தில் உறைந்தார்கள்.

சிறுத்தை ஒன்றும், அதற்கு இணையாகக் கருஞ்சிறுத்தை ஒன்றும் கம்பீரமாக, நேர்கொண்ட பார்வையுடன் கேமராவை நோக்கியபடி நின்று கொண்டிருந்தன. அவை எங்கே வாழ்கின்றன என்று பலரும் தேடியபோது, கபினி காட்டுப் பகுதி என்பதை அறிந்தனர்.

கர்நாடகத்தில் கபினி அணைப்பகுதிக்கு அருகே நாகர்ஹோலே தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. இது கபினி காட்டுப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் காட்டுக்குச் சொந்தமானதுதான் கிளியோ பாட்ரா. பெண் சிறுத்தை. 2009இல் இருந்தே கிளியோபாட்ரா கபினி காட்டுப்பகுதியில் வாழ்ந்து வருவதாகப் பதிவுகள் உண்டு.

ஒரு மணி நேரத்தில் சுமார் 57 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய அளவு திறனும், ஒல்லியான உடல்வாகும் கொண்டவை சிறுத்தைகள். நன்றாக நீச்சலடிக்கும். சட்டென மரத்தில் ஏறிவிடும்.

வேட்டையாடிய இரையை, மரத்தின் மீதேறி ஆற, அமர உண்பதுதான் சிறுத்தைகளின் இயல்பு. ஆண் சிறுத்தைகளைவிட, பெண் சிறுத்தைகள் பொறுப்புமிக்கவை.

குட்டிகளை வளர்ப்பது, அவற்றைப் பாதுகாப்பது, வேட்டையாடக் கற்றுக்கொடுப்பது, இரண்டு வயதுவரை அவற்றை வழிநடத்துவது என்று எல்லாவற்றையும் செய்வது பெண் சிறுத்தைகளே. 2009இல் கேமராவை எடுத்துக்கொண்டு வனவிலங்கு ஒளிப்படக் கலைஞராக ‘வாழ’ வேண்டும் என்கிற லட்சியத்துடன் கபினி காட்டுக்குள் புகுந்தார் மிதுன் ஹுனகுண்ட்.

அவருக்குச் சிறுவயது முதலே வனவிலங்குகள் மீது ஆர்வம். அதுவும் புலி, சிறுத்தைப் போன்ற பூனைக்குடும்ப உறுப்பினர்களைத் தொடர்ந்து சென்று படம்பிடிப்பது பிடித்திருந்தது.

கபினி காட்டுக்குள் அவர் ஒரு ராணிபோல வலம்வந்த கிளியோபாட்ராவைக் கண்டார். அதன் அழகும் கம்பீரமும் மிதுனைக் கவர்ந்தன. அவரது கேமராவுக்குள் அது அடிக்கடி சிக்கியது.

கருஞ்சிறுத்தைகள் அரிதானவை. அவை எளிதில் கண்ணில் அகப்படாது. 2014இல் கபினி காட்டுப்பகுதியில் மரத்தின் மீது ஒரு கருமந்தி இருப்பதாக நினைத்தார் மிதுன். பின்பு அந்தக் காட்டுப்பகுதியில் கருமந்திகள் கிடையாதே என்பது நினைவுக்கு வந்தது.

அப்போதுதான் அது ஒரு கருஞ்சிறுத்தை என்பதைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்தார். மிதுன் அதுக்கு, ‘சாயா’ என்று பெயர் வைத்தார். அதன் அழகில் மெய்மறந்து, படம் எடுக்க மறந்துவிட்டார்.

2016இல் மீண்டும் கபினி காட்டுப்பகுதிக்கு வந்த மிதுனுக்கு அந்தக் காட்சியை நம்ப முடியவில்லை. கிளியோபாட்ராவும் சாயாவும் சேர்ந்து ஒரே இடத்தில் காணப்பட்டன. அதாவது சாயா தனக்கான எல்லையை வகுத்துக் கொண்டது. அந்த எல்லைக்குள் கிளியோபாட்ராவை அனுமதித்தது. ஒரே கூட்டத்தைச் சேராத ஆண் – பெண் சிறுத்தைகள் ஒன்றாக வலம் வருகின்றன என்றால் அவற்றுக்கு இடையே நல்ல உறவு உருவாகியிருக்க வேண்டும்.

மிதுன் அந்தச் சிறுத்தைகளைத் தொடர்ந்து சில நாள்களுக்கு நோட்டமிட்டார். சாயாவும் கிளியோபாட்ராவும் இணைந்து வாழ்கின்றன என்று தெரிந்துகொண்டார். மிதுனைப் போலவே ஷாஸ் ஜங் ஒளிப்படக் கலைஞரும் அந்தச் சிறுத்தைகளைப் பின்தொடர்ந்து ஆவணப்படம் உருவாக்கினார். கபினி காட்டுப்பகுதியின் அடையாளமாக அந்த ஜோடி வலம்வந்தது.

சாயாவையும் கிளியோபாட்ராவையும் சேர்த்து நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்று மிதுன் ஆண்டுக் கணக்கில் காத்திருந்தார். ஒரு வனவிலங்கை நினைத்ததுபோல ஒளிப்படம் எடுக்க, பொறுமை மிக அவசியம். அது எளிதான காரியமல்ல. அப்படி ஓர் அற்புதமான தருணம் அடுத்த நொடி வாய்க்கலாம். அடுத்த மாதம் வாய்க்கலாம்.

சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தால் கிடைக்கலாம். மிதுன் சுமார் நான்கு ஆண்டுகளாக சாயாவையும் கிளியோபாட்ராவையும் பின்தொடர்ந்தார். அப்போது ஓர் உண்மையைப் புரிந்துகொண்டார்.

பொதுவாக ஆணின் எல்லைக்குள் வாழும் பெண் சிறுத்தை, அதற்குக் கட்டுப்பட்டு வாழும். ஆனால், வயதில் மூத்த கிளியோபாட்ரா முன்னாடி செல்ல, அதை நிழலாகப் பின்தொடர்ந்து அன்பு காட்டியது சாயா. Eternal Couple என்று அவற்றுக்குப் பெயர் வைத்தார்.

2020. மிதுன் தொடர்ந்து ஆறு நாள்கள் கபினி காட்டுப்பகுதியில் கேமராவுடன் காத்திருந்தார். கிளியோபாட்ராவும் சாயாவும் எந்தப் பகுதியில் திரியும், வேட்டையாடும், நீர் அருந்த வரும் என்பன போன்றவற்றைத் தன் அனுபவத்தால் கணித்து, பொறுமையாக இருந்தார்.

முந்தைய நாள்தான் அவை ஒரு மானை வேட்டையாடி விருந்து உண்டன. அவை நூறு மீட்டர்களுக்கு அப்பால்தான் உலவுகின்றன என்பதைப் புரிந்து கொண்டார். தனக்கான தருணம் வரும் என்று பொறுமையாகக் காத்திருந்தார்.

மறுநாள் காலை. அருகிலிருந்த குரங்குகள், சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறதென அங்கே மேய்ந்து கொண்டிருந்த மான்களை எச்சரிக்க, மறைவிலிருந்து கம்பீரமாக நடந்துவந்தது கிளியோபாட்ரா. அதைத் தொடர்ந்து அதன் நிழல்போல வந்து நின்றது சாயா.

இரண்டும் ஒரே மாதிரி நின்று, ஒரே திசையில் பார்க்க, மிதுன் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடவில்லை. உலகின் கண்களுக்கு அந்த அற்புதமான தருணம் படமாகக் கிடைத்தது. அந்த ஜோடியை உலகம் கொண்டாடியது. கிளியோபாட்ராவுக்கும் சாயாவுக்கும் வாரிசுகள் பிறந்தன.

சாயா, இப்போதும் கபினி காட்டுப்பகுதியில் வாழ்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் காலம் முடிந்துவிட்டது. இரண்டும் இணைந்து வாழ்ந்த அழகான நாள்களை வரலாற்றுத் தருணங்களாகப் பதிவுசெய்திருக்கும் மிதுன், இப்போதும் சாயாவைப் பின்தொடர்ந்து வருகிறார்.

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

கிளியோபாட்ராவும் சாயாவும் | வரலாறு முக்கியம் மக்களே! - 30
மொஸார்ட்டின் இசைப் பறவை! | வரலாறு முக்கியம் மக்களே! - 29

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in