

கயானாவின் டெமராரா ஆற்றங்கரை ஓரம் கரும்புத் தோட்டங்கள் பரந்து விரிந்துகிடந்தன. அவற்றில் ஆப்ரிக்க, இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். சூரியன் உதிப்பதற்கு முன்பே வேலையை ஆரம்பித்து, சூரியன் மறையும்வரை வேலை செய்ய வேண்டும். அந்தத் தோட்டங்களில் ஒன்றில் ‘கோஃபி'யும் வேலை செய்தார்.
ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் கைகள் கரும்புகளை வெட்டி வெட்டித் தழும்பு ஏறியிருந்தன. கயானாவின் வெயிலில் உடல் எரியும்போதும், கரும்புத் தோகைகள் கைகளைப் பதம்பார்க்கும் போதும் முகம் சுளிக்கமாட்டார். அவரின் ஒரே ஆறுதல், அவர் இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கிற காய்ந்த சுரைக்காய் குடுவையில் செய்யப்பட்ட இசைக் கருவிதான்.
தொழிலாளர்கள் இயந்திரம் போலவே செயல்பட்டனர். அவர்களுக்குப் பேசுவதற்கு அனுமதியில்லை, சிரிப்பதற்கு நேரம் இல்லை. பிரிட்டிஷ் கங்காணிகள் குதிரை மீது அமர்ந்துகொண்டு, யாராவது சற்று இளைப்பாறினால்கூடத் தடியால் விளாசுவார்கள்.
அன்று ஓர் இளம் தொழிலாளி பசியாலும் தாகத்தாலும் மயங்கி விழுந்தார். கங்காணி அவரைத் தடியால் அடித்து, "எழுந்து வேலை செய். உன் சோம்பேறித்தனம் இந்தச் சர்க்கரை ஆலைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது" என்று கத்தினார்.
மயங்கியவரின் முதுகில் ரத்தம் வழிந்தது. மற்ற தொழிலாளர்கள் பயத்தில் அமைதியாக இருந்தனர். தன் கோபத்தை வெளிப்படுத்த முடியாத கோஃபி, இடுப்பிலிருந்த இசைக் கருவியைத் தட்டி, தாளத்தை எழுப்பினார்.
‘டக்-டக்-டகா-டக்' என்கிற அந்தச் சத்தம் கரும்புத் தோகைகளை ஊடுருவிச் சென்றது. அந்தத் தாளத்தோடு கோஃபி ஒரு பாடலையும் பாடினார். அது தொழிலாளர்களின் துயரத்தைப் போக்கும் விதத்தில் இருந்தது.
அவரின் குரல் கரும்புத் தோட்டம் முழுவதும் எதிரொலித்தது. குனிந்து வேலை செய்த தொழிலாளர்கள் மெல்லத் தலைநிமிர்ந்தனர். அந்தப் பாடல் அவர்களின் வலியைக் குறைத்து, ஆறுதலாக இருந்தது. தாளத்துக்கு ஏற்ப தொழிலாளர்களின் கைகளில் இருந்த அரிவாள்கள் கரும்புகளை வெட்டித் தள்ளின.
கங்காணி ஓடிவந்து, “நிறுத்து உன் பாட்டை. இது வேலை செய்யும் இடம், கூத்தாடும் இடமல்ல” என்று கத்தினார். கோஃபியின் தோளில் தடியடி விழுந்தது. ஆனால் அவர் அந்த வலியிலும் தாளத்தை நிறுத்தாமல் சிரித்தார். “நீங்கள் என் உடம்பைத்தான் அடிக்க முடியும். நான் பாடும் பாட்டைத் தடுக்க முடியாது. என் பாட்டு, என் மக்களின் இதயத்தில் இருக்கிறது” என்றார் கோஃபி.
அன்று இரவு தொழிலாளர்களின் குடியிருப்புகளில் பெரிய மாற்றம் தெரிந்தது. எப்போதும் களைப்பால் சோர்ந்து படுத்துக் கிடக்கும் மக்கள், இன்று கோஃபியைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர் ஒரு பழைய மரப் பீப்பாயில் தோலைக் கட்டி, பெரிய மேளத்தைச் செய்திருந்தார். அதில் அவர் தட்டிய தாளம் அங்குள்ள மக்களின் காதுகளைத் துளைத்து, நெஞ்சில் அதிர்வுகளை உண்டாக்கியது.
பெருங்குரலெடுத்து அவர் பாடினார். ‘கடல் தாண்டி வந்தோமே கரை சேர வழியில்ல கப்பல் ஏறி வந்தோமே காசு பணம் கையிலில்ல பிரிட்டிஷ்காரர் தோட்டத்திலே உடம்பு வாடிப் போகுதே, அடி மேளம் அடிடா அசதி போக அடிடா விடியும் ஒரு காலம் பயத்தை விரட்டிடுடா.’ அந்தப் பாடலால் தடியடிக்கு அஞ்சாத துணிச்சல் அவர்களிடம் பிறந்தது. மறுநாள் காலையில் அந்தத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றபோது அவர்களின் கண்களில் புதிய ஒளி தெரிந்தது.
கோஃபி ஒவ்வொரு நாளும் புதிய தாளத்தையும் பாடலையும் உருவாக்கினார். வேலை செய்யும்போது ஒருவர் சோர்வடைந்தால், மற்றொருவர் அந்தப் பாடல்களைப் பாடி உற்சாகம் ஊட்டினர். சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆச்சரியப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் உற்பத்தி அதிகரித்திருந்தது.
ஆனால் அது பயத்தால் அல்ல, கோஃபி உருவாக்கிய 'இசை’யால் ஏற்பட்டது. அந்தப் பாடல்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கங்காணியின் கடுமை இப்போது அவர்களைப் பாதிப்பதில்லை. அந்த வலிகளைப் பாடல்களாக மாற்றி அவர்கள் காற்றில் கரைத்துவிட்டனர். கோஃபியின் பாடல்களால் ஆலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால், அது ஏற்படுத்திய தொழிலாளர் ஒற்றுமை, வீரம் ஆகியவை தங்களுக்குப் பாதகமாக வரும் என்பதை நிர்வாகம் உணர்ந்தது. அதனால் ஒருநாள், கோஃபியின் மேளத்தை உடைத்து எறிந்தது. அப்போது ஓர் அதிசயம் நடந்தது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கைகளில் இருந்த அரிவாள்களையும், கரும்புகளையும் தட்டி ஒரே தாளத்தை உருவாக்கினர்.
அந்தச் சத்தம் அந்தப் பகுதியையே உலுக்கியது. அந்தச் சத்தத்தில் ஓர் எச்சரிக்கை இருந்தது. 'எங்களை நீங்கள் ஒடுக்கலாம், ஆனால் எங்கள் இசையை, எங்கள் ஒற்றுமையை உங்களால் அழிக்க முடியாது' என்பதே. ஆலை நிர்வாகம் பணிந்தது. கோஃபி விடுவிக்கப்பட்டார். கோஃபி உருவாக்கிய தாளங்களும் பாடல்களும் கயானாவின் கரும்புத் தோட்டங்கள்தோறும் நிலைத்துநின்றன.
அந்தப் பாடல்கள்தான் பிற்காலத்தில் கயானாவின் புகழ்பெற்ற நாட்டுப்புற இசை வளர அடிப்படையாக அமைந்தன. இன்றும் கயானாவில் கரும்பு அறுவடைக் காலங்களில், முதியவர்கள் தங்களின் பேரப் பிள்ளைகளுக்குக் கோஃபியின் கதையைச் சொல்கிறார்கள். ‘வியர்வை சிந்தும்போது பாடுங்கள் சர்க்கரையைவிட இனிப்பானது நம் உழைப்பு!’