உடலுக்குள் இயங்கும் விதிகளைக் கண்டறிந்தவர்! - ரத்தச் சுற்றோட்டம் | அறிவியல் திருப்புமுனைகள் 22

உடலுக்குள் இயங்கும் விதிகளைக் கண்டறிந்தவர்! - ரத்தச் சுற்றோட்டம் | அறிவியல் திருப்புமுனைகள் 22
Updated on: 
2 min read

உடலின் முக்கியமான அம்சங்களில் ஒன்று ரத்தம். உடல் முழுவதும் ஆரோக்கியத்துடன் இயங்க ரத்தச் சுற்றோட்டம் அவசியம்.

இந்த ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும் உறுப்பு, இதயம். ஆனால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் உடலில் ரத்தச் சுற்றோட்டம் சுழற்சியாக நடைபெறுகிறது என்பதே தெரியாது.

உடல் குறித்த ஐரோப்பியச் சிந்தனையில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியவர் பண்டைய கிரேக்க மருத்துவரான கேலன்.

அவர், ரத்தம் கல்லீரலில் உருவாகி, உடல் முழுவதும் சென்று, பின்பு திசுக்களால் உறிஞ்சப்படுகிறது என்றும் ரத்தம், சிறு துளைகள் வழியாக இதயத்தின் வலப் பக்கத்தில் புகுந்து இடப் பக்கம் செல்கிறது என்றும் சொன்னார். இதுவே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது.

லியனார்டோ டா வின்சி, மைக்கேல் சர்வெடஸ், ஆண்ட்ரியே சிசல்பினோ போன்றோர் உடலைப் பகுப்பாய்ந்து இதயம், ரத்த நாளங்கள் போன்ற உறுப்புகளை வரைந்து, புதிய விளக்கங்களைக் கொடுத்தனர்.

இவை அனைத்தையும் மேம்படுத்தி, கேலனின் கருத்தை அடியோடு புரட்டிப்போட்டவர் வில்லியம் ஹார்வி. 17ஆம் நூற்றாண்டு என்பது ஐரோப்பிய நகரங்கள் வளர்ச்சி கண்ட காலக்கட்டம்.

வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ நிறுவனங்கள் உருவாகி இருந்தன. மாணவர்கள் இந்நிறுவனங்களில் இணைந்து, நோயாளிகளைக் கண்காணித்து மருத்துவம் பயிலும் சூழல் உருவானது.

அதேபோல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வணிகமும் அதிகரித்ததால் அறிவியல் அறிவு பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஹார்வி இங்கிலாந்தில் பிறந்தார்.

உள்நாட்டில் பள்ளிக் கல்வியை முடித்தவர், இத்தாலியில் உள்ள படுவா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். படுவா என்பது அப்போது உடல்கூராய்வில் முக்கிய மையமாக இருந்தது.

குறிப்பாகப் பாடப்புத்தகத்துடன் இணைந்து, பரிசோதனை முறையில் சடலத்தை வெட்டிப் பகுப்பாய்வு செய்வதில் பிற ஐரோப்பிய மருத்துவ நிறுவனங்களைவிட முன்னணியில் இருந்தது. அங்கே படிப்பை முடித்துவிட்டு லண்டன் திரும்பிய ஹார்வி, இங்கிலாந்தின்

மன்னர்களுக்கு மருத்துவராகப் பணியாற்றினார். இதோடு லண்டன் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறையின் விரிவுரையாளராகவும் செயல்பட்டார். மாணவர்களுக்குச் சடலங்களை வெட்டிக்காட்டி ஹார்வி விளக்கம் தருவார்.

ஆனால், சடலங்கள் கிடைப்பது அப்போது எளிது அல்ல. சில நேரத்தில் சட்டவிரோதமாகச் சடலத்தைப் பெற வேண்டும். புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலையும் வரும்.

இவை தவிர, மன்னருடன் வேட்டைக்குச் செல்லும்போது விலங்குகளை ஆராய்வார். இறைச்சிக் கடைகளுக்குச் சென்று, விலங்குகள் வெட்டப்படுவதைக் கவனிப்பார். அவற்றில் ரத்தம் வெளியேறும் பகுதிகளை எல்லாம் குறித்துக்கொள்வார்.

இவ்வாறு ஆராய்ந்து 1628ஆம் ஆண்டு De Motu Cordis et Sanguinis எனும் புத்தகத்தை வெளியிட்டார் ஹார்வி. அதில் இதயம் குறித்தும் ரத்த ஓட்டம் குறித்தும் புரட்சிகரப் பார்வையை முன்வைத்தார். முதலில் இதயம் என்பது தசைகளால் ஆன குழாய் போலச் செயல்படுகிறது என்றார்.

இதயம் சுருங்கும்போது ரத்தத்தைத் தமனிகளுக்குள் (Arteries) செலுத்துகிறது. அந்த ரத்தம் உடலுக்குச் சென்று, சிரைகள் (Veins) வழியாக மீண்டும் இதயத்துக்குத் திரும்புகிறது.

அதாவது, ரத்தம் என்பது உடலில் மூடிய சுழற்சியில் தொடர்ந்து இயங்குகிறது என்றார். இதேபோல நுரையீரல் சார்ந்த சுழற்சியும் (Pulmonary Circulation) உடலில் உண்டு, இவை இரண்டும் இணைந்ததுதான் இதய ரத்தநாள அமைப்பு (cardiovascular system) என்றார் ஹார்வி.

இதயம் துடிக்கும்போது ஒவ்வொரு முறையும் எவ்வளவு ரத்தம் வெளியேறுகிறது என்பதையும், ஒருநாளைக்கு எத்தனை முறை இதயம் துடிக்கிறது என்பதையும் கவனித்து உடலில் உள்ள ரத்தத்தின் அளவைக் கணக்கிட்டார்.

இவ்வளவு ரத்தம் உடலில் இருக்கும்பட்சத்தில், அவை நிச்சயம் புதிதாக உருவாக வாய்ப்பில்லை. ஏற்கெனவே இருக்கும் ரத்தம்தான் சுற்றோட்ட முறையில் இதயத்துக்கும் உடலுக்கும் செல்கிறது என்றார்.

இந்த உண்மையை ஹார்வி கண்டடைந்த காலக்கட்டம், பிற புரட்சிகர அறிவியல் கருத்துகளும் உருவான காலக்கட்டம். அந்தக் காலக்கட்டத்தில் அறிவியலில் உள்ள பழைய புராதனக் கருத்துகள் அனைத்தும் கேள்விக்கு உள்படுத்தப்பட்டன. அறிவியல் அறிஞர்கள் இயற்கையை, அறிவியல் விதிகளின் அடிப்படையில் விளக்க முயன்றனர்.

ஒவ்வொரு கண்டறிதலும் கணிதரீதியில் ஆய்வு செய்யப்பட்டு, விதிகளாக உருவாகத் தொடங்கின. ஒருபக்கம் கோப்பர்நிக்கஸ், கலிலியோ போன்றோர் அண்டத்தைக் கணிதரீதியாக விளக்க முயல, ஹார்வி உடலுக்குள் இயங்கும் விதிகளை விளக்கியிருந்தார்.

ஹார்வியின் கண்டறிதல் உயிரியல் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது. உடல் என்பது தனித்தனி உறுப்புகளின் தொகுப்பு மட்டுமல்ல; ஒன்றோடு மற்றொன்று தொடர்புடைய, விதிகளுக்கு உள்பட்டு இயங்கும் ஓர் அமைப்பு எனும் பார்வையை நிறுவியது. அதேபோல் மருத்துவச் சிகிச்சையிலும் ரத்தமேற்றுதல், ரத்தநாள அறுவைசிகிச்சை, இதய மருத்துவம் போன்ற துறைகளுக்குத் தேவையான அடிப்படை உடலியல் புரிதலை உருவாக்கியது.

இன்னொருபுறம் அறிவியல் அணுகு முறையில் பாரம்பரியக் கோட்பாடுகளை நம்பி இருக்காமல் நேரடி அவதானிப்பு, பரிசோதனை, அளவீடு, தர்க்கரீதியான ஆதாரங்களின் அடிப்படையில் இயற்கையை அணுக வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அமைந்தது.

(திருப்புமுனையைக் காண்போம்)

- tnmaran25@gmail.com

உடலுக்குள் இயங்கும் விதிகளைக் கண்டறிந்தவர்! - ரத்தச் சுற்றோட்டம் | அறிவியல் திருப்புமுனைகள் 22
மரபியல் துறைக்கு வித்திட்ட மெண்டல் - மரபியல் | அறிவியல் திருப்புமுனைகள் 22

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in