நான் எப்படிச் சாப்பிடுவேன்? | கதை

நான் எப்படிச் சாப்பிடுவேன்? | கதை
Updated on: 
2 min read

பூவரசங்காட்டில் இளங்காலைத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பச்சைமலை அடிவாரத்தில் நின்றிருந்த கரடி, வந்து கொண்டிருந்த குட்டி விலங்குளை வரவேற்றுக் கொண்டிருந்தது.

அப்போதுவரை மலைமீது ஏறுவதற்கு குட்டிகளை அவற்றின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இப்போது குட்டிகள் அனைத்தும் ஓரளவு வளர்ந்திருந்தன. சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த குட்டிகள் ஆர்வத்துடன் வந்துகொண்டிருந்தன.

காலையில் மலைமீது ஏற வேண்டும். அங்கு எல்லாரும் பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி மகிழ்ந்திருக்க வேண்டும். அதன் பிறகு சற்று நேரம் விளையாட வேண்டும். பிறகு அவரவர் கொண்டுவந்த உணவைச் சாப்பிட வேண்டும். சற்று நேரம் இளைப்பாற வேண்டும். மதியம் மலையிலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும் என்பதுதான் கரடியின் திட்டம்.

கையில் சிறிய பையுடன் முதலில் முயல்குட்டி வந்தது. அடுத்து சிறிய பொட்டலத்துடன் குரங்கு வந்தது. அடுத்து மான், நரி, எலி, அணில், யானை என அனைத்து விலங்குகளும் வந்துசேர்ந்தன.

பிறகு அனைத்துக் குட்டிகளையும் மலைப் பாதையில் கரடி அழைத்துச் சென்றது. அனைத்தும் மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்து மலைமீது ஏறின. அதுவரை மலையையே பார்த்திராத குட்டிகளுக்கு அது அற்புதமான காட்சியாக இருந்தது. மலை மீது ஏறஏற கீழே இருந்த மரங்கள் எல்லாம் சிறிய செடிகள் போலத் தோற்றமளித்தன.

ஒருவழியாக மலையின் மீதிருந்த சமதளப் பரப்புக்குக் குட்டிகளை அழைத்து வந்தது கரடி. இனி சிறிது நேரம் ஏதேனும் ஒரு பாட்டை பாடிக் காண்பியுங்கள் என்று கரடி சொல்ல, குட்டிகள் மகிழ்ச்சியாகப் பாடின. பிறகு நடனமாடின.

ஆடல் பாடல் நிகழ்ச்சி முடிந்ததும் அனைத்துக் குட்டிகளும் பந்து விளையாட நினைத்தன. ஆனால், பந்து எங்கே கிடைக்கும் என்று யோசித்தன. அப்போது குரங்கு தன் பையிலிருந்து நார்த்தங்காய்களை எடுத்தது. “நண்பர்களே, மலையேறும் வழியில் நார்த்தங்காய் மரத்திலிருந்து சில காய்களைப் பறித்து வந்தேன். இதை வைத்து விளையாடலாம்” என்றது.

அதைக் கேட்டு அனைத்துக் குட்டிகளும் மகிழ்ச்சியில் குரல் கொடுத்தன. வட்டமாக நின்றபடி நார்த்தங்காய்களைத் தூக்கிப் போட்டு விளையாடின. மதிய நேரம். “இனி எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். அருகிலேயே சுனையில் தண்ணீர் இருக்கிறது” என்றது கரடி.

அனைத்துக் குட்டிகளும் ஒன்றாக அமர்ந்து, தங்கள் உணவுப் பையை எடுக்க, மான்குட்டி மட்டும் திருதிருவென்று விழித்தது. அது அம்மா கொடுத்த உணவுப் பையை எடுத்துவர மறந்துவிட்டிருந்தது.

“ஐயோ, எல்லாரும் உண்ணும்போது நான் மட்டும் பசியோடு இருக்க வேண்டுமா?” என்று புலம்பியது. அதைப் பார்த்து எல்லாக் குட்டிகளும் சிரித்தன. “மான்குட்டியே, உணவு கொண்டுவர மறந்ததற்கா வருத்தப்படுகிறாய்? இப்போது உனக்கு வயிறாற உணவு கிடைக்கும் கவலைப்படாதே” என்றது கரடி.

ஆவலுடன் பார்த்தது மான். “செல்லங்களே, நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டு வந்திருக்கும் உணவில் கைப்பிடி அளவு எடுத்து, இந்த வாழை இலையில் வையுங்கள்” என்று சொன்ன கரடி, தனது உணவிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து இலையில் வைத்தது.

உடனே முயல், நரி, குரங்கு, யானை என அனைத்தும் தம் உணவில் சிறிதளவு எடுத்து இலையில் வைக்க, மானுக்குத் தேவையான உணவு வந்துவிட்டது. “இதோ, இதை நீ சாப்பிடு” என்று மானிடம் கரடி சொல்ல, மானும் மகிழ்ச்சியாக உண்டது.

“கரடி மாமா, நல்லவேளை மான் உணவைக் கொண்டுவர மறந்துவிட்டது. ஒருவேளை நம் யானை உணவு கொண்டுவர மறந்துபோயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று சிரித்தபடி கேட்டது நரி. அதைக் கேட்டு எல்லாக் குட்டிகளும் சிரித்தன.

“ஒன்றும் ஆகியிருக்காது. அப்போதும் இந்த உணவு போதுமானதாகவே இருந்திருக்கும். பகிர்ந்து உண்ணும்போது குறைவாக உண்டாலும் பசி நீங்கிய உணர்வு வந்துவிடும். எல்லாருக்கும் உணவு கிடைக்கிறது என்கிற மனநிறைவு நம் வயிற்றையும் நிறைத்துவிடும்.

அது எலியாக இருந்தாலும் யானையாக இருந்தாலும் அப்படித்தான். அதனால் இனி எப்போதும் உங்கள் உணவை உணவு இல்லாதவரிடம் பகிர்ந்து உண்ணுங்கள்” என்று கரடி சொல்ல, இப்போது எலியும் யானையும் சேர்ந்து கைதட்டின. “எல்லாரும் வாருங்கள், அந்தச் சுனையில் நீர் அருந்திவிட்டு, மலையிலிருந்து இறங்கலாம்” என்று கரடி முன்னே செல்ல, எல்லாக் குட்டிகளும் பின்தொடர்ந்தன.

நான் எப்படிச் சாப்பிடுவேன்? | கதை
உடலுக்குள் இயங்கும் விதிகளைக் கண்டறிந்தவர்! - ரத்தச் சுற்றோட்டம் | அறிவியல் திருப்புமுனைகள் 22

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in