

பச்சைமலைக் காட்டில் எப்போது மழை பெய்தாலும் காட்டாற்றில் வெள்ளம் வரும். அப்போது வெள்ளம் ஆற்றின் கரையை மீறி காட்டிற்குள் வந்துவிடும். அதனால் காட்டு விலங்குகளுக்கு ஆபத்து உண்டாகும்.
கடந்த முறை கனமழை பெய்து ஆற்றில் வெள்ளம் கரையை மீறியது. அதனைப் பார்த்த சிங்கராஜா அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்தது. எனவே சிங்கராஜா நரியுடன் கலந்து ஆலோசித்தது.
“அரசே, காட்டாற்றின் கரை மிகவும் தாழ்வாக இருக்கிறது. அதனால்தான் கனமழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் காட்டிற்குள் வருகிறது. நாம் ஆற்றின் கரையை உயர்த்திக் கட்டினால் பிறகு வெள்ளத்தால் நமக்கு ஆபத்து இல்லை” என்றது நரி. நரியின் யோசனை சிங்கராஜாவுக்கும் சரி என்றே தோன்றியது.
சிங்கராஜா எல்லா விலங்குகளையும் தன் இருப்பிடத்திற்கு அழைத்தது. “அன்பர்களே, கனமழை பெய்யும் போது காட்டாற்றில் வெள்ளம் காட்டிற்குள் வருவதை நீங்கள் அறிவீர்கள். அதனால் ஆற்றின் கரையை உயர்த்திக் கட்ட வேண்டும். அதற்காக நாம் எல்லாருமே உழைக்க வேண்டும்.
இப்போது கோடைக்காலமாக இருப்பதால் அடுத்த மழைக்காலத்திற்குள் நாம் கரையை உயர்த்த வேண்டும். நாளையிலிருந்தே பணியைத் தொடங்க வேண்டும்” என்றது சிங்கராஜா. அதைக் கேட்ட யானை, “அரசே, ஆற்றின் கரையை உயர்த்தும் பணி கடினமானது.
கற்களை எல்லாம் அள்ளி வந்து கரையில் சுவர்போல அடுக்கி வைக்க வேண்டும். பிறகு களிமண்ணைக் கொண்டுவந்து அந்தக் கற்களின் மீது பூசி, சுவர்போலக் கட்டி எழுப்ப வேண்டும். அப்போதுதான் அது உறுதியாக இருக்கும். மழைக் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் படாது” என்றது.
“யானை சொன்னது சரி. இந்தப் பணியைச் செய்ய காட்டிலுள்ள அனைத்து விலங்குகளும் ஒத்துழைக்க வேண்டும். எலி, அணில், கீரி, தேவாங்கு போன்ற சிறு விலங்குகளும்கூட நாளையிலிருந்து பணியாற்ற வேண்டும். சிறுத்தை கரை அமைக்கும் பணியை மேற்பார்வை செய்யும்” என்றது சிங்கராஜா.
யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற பல மிக்க விலங்குகளுக்குச் சிரிப்பு வந்தது. “அரசே, ஆற்றின் கரையை உயர்த்தும் பணியைப் பெரிய விலங்குகளான நாங்களே செய்து முடிக்கிறோம். சிறிய விலங்குகள் வேண்டாம். அவற்றால் என்ன செய்துவிட முடியும்? ஒரு நெல்லிக்காய் அளவு கற்களைக்கூட எலியாலோ அணிலாலோ தூக்க முடியாதே” என்றது புலி.
“அப்படி எல்லாம் அவர்களை நிராகரிக்க வேண்டாம். அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்வார்கள். நீங்கள் எல்லாரையும் அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டது சிங்கராஜா. மறுநாளில் இருந்து ஆற்றின் கரையை உயர்த்தும் பணி ஆரம்பமானது.
பலாப்பழ அளவிலான பெரிய பெரிய கற்கள் ஆற்றின் கரைக்குக் கொண்டு வரப்பட்டன. அவற்றைக் கரடி அழகாகச் சுவர்போல அடுக்கி வைத்தது. யானையும் புலியும் களிமண்ணைக் கொண்டுவந்து போட்டன. குரங்குகள் சிறிய மூங்கில் குழாய்களில் நீர் கொண்டுவந்தன. புலி களிமண்ணைக் குழைத்துக் கலவை போலாக்கி, அடுக்கி வைக்கப்பட்ட கற்களின் மீது பூசியது.
அணிலும் எலியும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடின. ஆனாலும் சிங்கராஜாவின் உத்தரவின்படி இலந்தை அளவிலான கூழாங்கற்களைக் கொண்டுவந்து கொடுத்தன. குன்றிமணி அளவில் களிமண்ணைக் கொண்டுவந்து போட்டன.
தேவாங்கு காலையில் மண் எடுக்கப் போனால் மாலையில் கொஞ்சம் மண்ணைக் கொண்டு வந்து போட்டது. இதை எல்லாம் பார்த்து யானையும் புலியும் சிரித்தன. “அணிலும் எலியும் கல்லும் மண்ணும் கொண்டுவர வேண்டாம். எங்கள் கால்களுக்கு நடுவே அங்கும் இங்கும் ஓடி தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்” என்றது புலி.
எலியும் அணிலும் கீரியும் யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவை சிங்கராஜாவின் உத்தரவுப்படி தங்களால் ஆன வேலைகளைச் செய்துகொண்டிருந்தன. சில நாள்கள் சிங்கராஜாவும் அங்கே வந்து வேலைகளைச் செய்தது.
பத்தே நாள்களில் விலங்குகள் சேர்ந்து காட்டாற்றின் கரையை நன்றாக உயர்த்திக் கட்டிவிட்டன. இன்னும் ஒரு வாரம் சுவர் வெயிலில் நன்றாகக் காய்ந்துவிட்டால் உறுதியாகிவிடும். அதன் பிறகு ஆற்றில் வெள்ளம் வந்தாலும் கரையை மீறிக் காட்டிற்குள் வராது.
கட்டி முடிக்கப்பட்ட கரையை சிங்கராஜா வந்து பார்த்தது. மிகவும் மகிழ்ந்தது. “அன்பர்களே, நாளை உங்கள் அனைவருக்கும் என் குகை முன்பு விருந்து” என்று சொல்லிவிட்டுச் சென்றது. மறுநாள் அனைத்து விலங்குகளும் விருந்துக்கு வந்துசேர்ந்தன.
அப்போது யானை சிங்கராஜாவிடம், “அரசே, பலம்வாய்ந்த விலங்குகளான நாங்களே ஆற்றுக்குக் கரையை எழுப்பியிருப்போமே? ஏன் சிறிய விலங்குகளையும் பணிபுரியச் சொன்னீர்கள்?” என்று கேட்டது.
“ஆற்றின் கரை என்பது நம் காட்டிலுள்ள அனைவருக்குமான பொதுச் சொத்து. அதை உருவாக்குவதில் எல்லாருடைய பங்களிப்பும் இருந்தால்தான் பின்னாளில் அதைச் சேதப்படுத்தும் எண்ணம் யாருக்கும் வராது.
கூடவே, நம்மாலும் இந்தக் காட்டுக்குப் பயனுள்ள செயலைச் செய்ய முடியும் என்கிற எண்ணம் சிறிய விலங்குகளுக்கும் உண்டாக வேண்டும். அதனால்தான் எல்லா விலங்குகளும் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன்.
நானும் சில நாள்கள் வந்து பணிபுரிந்தேன்” என்று சிங்கராஜா சொல்லி முடிக்க, அதைக் கேட்டு அணில், எலி, தேவாங்கு போன்ற சிறிய விலங்குகள் மட்டுமன்றி பெரிய விலங்குகளும் கைதட்டின.