

ஏறக்குறைய 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் 4 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 66 லட்சம் வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை எனவும் சொல்கிறது ஓர் ஆய்வு. மத்திய அரசு வெளியிட்ட தரவொன்றில், நாட்டில் சுமார் 20 லட்சம் வழக்கறிஞர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்த இரண்டுக்கும் உள்ள இடை வெளியைச் சரிசெய்வதே லெக்ஸியின் நோக்கம்’ என்கிறார் 25 வயது இளைஞரான கிரண் மோகன். தனது நண்பர் ஹர்ஷித் கார்க் உடன் இணைந்து இவர் உருவாக்கியுள்ள ‘லெக்ஸி’, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சட்டத் தீர்வுகளை வழங்குகிற ஸ்டார்ட்அப் நிறுவனம்.
“சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படித்தபோது ஹர்ஷித் தைச் சந்தித்தேன். ஏஐ, ஃபின்டெக்கை நானும் ஏஐ, சைபர் செக்யூரிட்டியில் ஹர்ஷித்தும் ‘ஸ்பெஷலைஸ்’ செய்தோம்.
அப்போது 'ஆக்சஸ்'ங்கற பேர்ல நானும் ‘டிக்கெட்டர்'ங்கற பேர்ல அவரும் தனித்தனியா டிக்கெட்டிங் ஸ்டார்ட்அப் தொடங்கினோம். அப்படித் தான் எங்களது நட்பு தொடங்கியது” என்கிறார் கிரண் மோகன்.
ஐஐடி முதலாமாண்டு மாணவர் போன்று தோற்றமளித்தாலும், மூன்று ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமுள்ளவர் கிரண். இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் சட்டம் பயின்றிருக்கிறார் ஹர்ஷித். அப்போது, தான் எதிர்கொண்ட சட்டம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நண்பரோடு நிறையவே விவாதித்தி ருக்கிறார் கிரண்.
சிறு இடைவெளிக்குப் பிறகு 2025இல் மீண்டும் சந்தித்த இருவரும் சிங்கப்பூர் அரசின் ‘GOVTECH’ முகமையின் கீழ் ‘built for good’ திட்டத்தில் பணியாற்றி இருக்கின்றனர். அப்போது, சட்டரீதி யான உதவிகள் மிக எளிமையாக மக்களுக்குக் கிடைக்கும் வகையில் ‘lawify’ எனும் ஏஐ வாய்ஸ் ஏஜென்ட்டை வடிவமைத்துள்ளனர்.
ஒருவர் அதில் தமது குறைகளைச் சொன்னால், அது தொடர்பான பதில்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கிடைக்கும். ‘வாடகை ஒப்பந்தம்’, ‘வேலை ஒப்பந்தம்’ தொடர்பாக மாணவர்களும் ‘உயில்’ போன்ற வற்றுக்காகப் பெரியவர்களும் அதனை அதிகம் பயன்படுத்தி இருக்கின்றனர்.
“அதனை எப்படி இன்னும் சிறப்பாக்குவது என்று யோசித்துச் சில வழக்கறிஞர்களிடம் பேசியபோது, போதுமான எண்ணிக்கையில் வழக்கறி ஞர்கள் இல்லாதது தெரியவந்தது. அதனைக் கருத்தில்கொண்டே நாங்கள் ‘லெக்ஸி’யைத் தொடங்கினோம்” என்கிறார் கிரண்.
வழக்கறிஞர்களின் திறனை அதிகப்படுத்தி, அதன் வழியே அவர்களை நிறைய வழக்குகளைக் கையாள வைப்பதே ‘லெக்ஸி’யின் செயல்பாடாக இருக்கும் என்கிறார் கிரண்.
அதற்கேற்ப உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், பன்னாட்டு நிறுவனச் சட்டங்கள், ஒப்பந்தங்கள் என்று இப்போதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தரவுகள் ‘லெக்ஸி’யில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கின்றன.
“ஏற்கெனவே உள்ள மாதிரியைக் கொண்டு ஓர் ஒப்பந்தம் அல்லது நோட்டீஸைத் தயார் செய்வதே வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் உள்ள வழக்கம். அதுபோலவே, குறிப்பிட்ட வகையில் அமைந்த வழக்குகளில் நீதிபதிகளின் தீர்ப்பு, தற்போதைய வழக்குடனான ஒப்பீடு குறித்த ஆய்வுக்கும் நிறைய நேரமெடுக்கும்.
அதிக பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள், தடயங்களை ஆராய்ந்து பார்க்கவும் நேரம் செலவழியும். ஆனால், ‘லெக்ஸி’யில் ஒரு நோட்டீஸைத் தயார் செய்யவோ, ஆய்வை மேற்கொள்ளவோ ‘இன்புட்’ கொடுத்தால் போதும்; அரைநாள் அல்லது ஒருநாளில் நிறைவுறுகிற வேலை பத்து நிமிடங்களில் முடிந்துவிடும்.
இதன் மூலம், ஒரு வழக்கறிஞர் நிறைய வழக்குகளை எடுத்துக்கொண்டு மக்களுக்கு உதவ முடியும். சிறந்த வழக்கறிஞர்கள் ஒரு வழக்கினை எவ்வாறு கையாளுகின்றனர் என்பது உள்ளிட்ட அம்சங்கள் மாதிரியில் உள்ளீடு செய்யப்படுவதால், அவர்களது திறன்கள் அதில் நிச்சயம் பிரதிபலிக்கப்படும்” என்கிறார் கிரண்.
தாத்தா, தந்தைவழியில் சட்டம் பயின்றிருக்கும் ஹர்ஷித், ஏஐ தொழில் நுட்பத்திலும் சிறப்புற்றிருப்பது, ‘வழக்கறிஞருக்கான பிரச்சினைகளுக் குத் தீர்வு காண்பதில் லெக்ஸியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உதவியாக இருப்பதாக’க் குறிப்பிடுகிறார்.
இந்தியாவிலுள்ள கீழமை நீதிமன்றங் களில் அந்தந்த மாநில மொழிகள் பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கேற்பப் பல மொழிகளில் கையாளும் திறனோடு ‘லெக்ஸி’ வடிவமைக்கப் பட்டிருக்கிறதாம்.
“எங்களிடமுள்ள மொழிபெயர்ப்பு மாதிரியைக் கொண்டு எந்த இந்திய மொழியில் இருந்தும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கலாம். ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மொழி களுக்கு மொழிபெயர்க்க முடியும்” என்கிறார் கிரண்.
‘ஏஐ பயன்பாட்டில் இருக்கிற துல்லியத்தன்மை’ குறித்துக் கேள்வி எழுப்பினால், “சட்டம் பயின்றவர்களைப் பணியில் அமர்த்தி, ஏஐ மூலமாகக் கிடைக்கிற தீர்வுகளைச் சரிபார்க்கிறோம்.
மாதிரிகளைத் தயாரிக்கும்போதே, அவுட்புட்டை ஆய்வுசெய்து எந்தப் பகுதியில் இன்னும் மேம்பாடு தேவை என்று அவர்கள் சொல்வா
ர்கள். அந்தத் தரவுகளை எடுத்துக்கொண்டு மாதிரியை மாற்றியமைக்கிறோம். மேலும், ஏஐ ஏஜெண்ட்கள் தகவல்களைச் சரிபார்ப்பதன் மூலமாகத் தரவுகளில் துல்லியத்தன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்கிறோம்” என்று சொல்லும் கிரண், “பயனர்கள் தருகிற விவரங்கள் ‘சென்சிட்டிவ்’வாக இருக்குமென்பதால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே அதனைக் காணும் வகையில் EE2E (end to end encryption) கொண்டதாக லெக்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனால் இது ரொம்பவே பாதுகாப்பானது” என்கிறார். தற்போது சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா என்று சுற்றிச் சுழன்று வருகிறார் இவர். மூன்று நாடுகளிலும் சட்டச் செயல்பாடுகள் வேறுபடும் நிலையில், இது எப்படிச் சாத்தியம்? “இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பொதுச் சட்ட அமைப்பு பின்பற்றப்படுகிறது.
தீர்ப்புகளை எப்படிப் புதிய வழக்குகளோடு பொருத்திப் பார்ப்பது, எவ்வாறு அவ்வழக்கைக் கையாளுவது என்பதெல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். அதேநேரத்தில் ஆய்வு அமைப்பு, கூறுகளை மட்டுமே மாற்ற வேண்டியிருக்கும்” என்கிறார் கிரண். கூடவே, லெக்ஸிக்கான தொழில்நுட்பம் இந்தியாவில் கட்டமைக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
“இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் லெக்ஸியைப் பயன்படுத்தி வருகின் றனர். எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் என எல்லாரும் லெக்ஸியைப் பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப, ஒரு சட்டபூர்வமான இயங்குதளத்தை (legal operating system) உருவாக்குவதே எங்களது ஆசை” என்கிறார் கிரண்.
- uthayasankaran.p@hindutamil.co.in