உலகிலேயே அழகான அம்மா! | கதை

உலகிலேயே அழகான அம்மா! | கதை
Updated on
2 min read

“சிங்கராஜா, ஆற்றங்கரையில் பறவைக் குஞ்சு ஒன்று வழிதவறி வந்து அழுது கொண்டிருக்கிறது” என்று கரடி சொன்னதும், ஆற்றங்கரைக்குப் புறப்பட்டது சிங்கராஜா. அங்கே குஞ்சு ஒன்று அழுது கொண்டிருக்க, அதனைச் சுற்றி மற்ற விலங்குகள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தன.

“நான் உன் அம்மாவிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். அழாதே. உன் அம்மா எப்படி இருப்பார்?” என்று கேட்டது சிங்கராஜா. “என் அம்மா மிகவும் அழகாக இருப்பார்” என்றது குஞ்சு. “அரசே, நம் காட்டில் மிக அழகான பறவை என்றால் அது பஞ்சவர்ணக்கிளிதான். ஒருவேளை இந்தக் குஞ்சின் அம்மா பஞ்சவர்ணக்கிளியாக இருக்குமோ?” என்றது கரடி.

“உடனே பஞ்சவர்ணக்கிளியை வரச் சொல்லுங்கள்” என்று சிங்கராஜா உத்தரவிட, சற்று நேரத்தில் பஞ்சவர்ணக்கிளி வந்து நின்றது. “இவரா உன் அம்மா?” என்று சிங்கராஜா கேட்டது. “இவர் என் அம்மா இல்லை” என்றது குஞ்சு.

“உன் அம்மாவைப் பற்றி வேறு ஏதேனும் சொல்ல முடியுமா?” என்று கேட்டது சிங்கராஜா. “என் அம்மா மிகவும் அழகாகக் கூடு பின்னுவார். நானும் என் சகோதர சகோதரிகளும் அம்மா பின்னிய அழகான கூட்டில்தான் பிறந்தோம்” என்றது குஞ்சு.

“அரசே, இதன் அம்மா தூக்கணாங்குருவியாகத்தான் இருக்கும்” என்றது சிறுத்தை. “தூக்கணாங்குருவியை உடனே வரச் சொல்லுங்கள்” என்று சிங்கராஜா உத்தரவிட, சற்று நேரத்தில் தூக்கணாங்குருவி வந்து நின்றது. தூக்கணாங்குருவியைப் பார்த்த குஞ்சு, “இவர் என் அம்மா இல்லை” என்றது.

“உன் அம்மாவைப் பற்றி வேறு ஏதேனும் சொல்ல முடியுமா?” என்று கேட்டது சிங்கராஜா. “என் அம்மா எங்களுக்கு மிகவும் சுவையான உணவை ஊட்டி விடுவார்” என்றது குஞ்சு. “அரசே, இதன் அம்மா தேன்சிட்டாக இருக்கலாம்” என்றது நரி. “அப்படி என்றால் தேன்சிட்டை உடனே வரச் சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டது சிங்கராஜா.

சற்று நேரத்தில் அங்கே தேன்சிட்டு வந்தது. உடனே “இவர் என் அம்மா இல்லை” என்றது குஞ்சு. “உன் அம்மாவைப் பற்றி வேறு ஏதேனும் சொல்” என்று கேட்டது சிங்கராஜா. “என் அம்மா அழகாகப் பாடுவார்” என்றது குஞ்சு. “அரசே, நம் காட்டில் மிகவும் அழகாகப் பாடுவது குயில்தானே! எனவே இதன் அம்மா குயிலாகத்தான் இருக்கும்” என்றது புலி.

“குயிலை உடனே வரச் சொல்லுங்கள்” என்றது சிங்கராஜா. சற்று நேரத்தில் குயில் அங்கே வந்து சேர்ந்தது. “இவரும் என் அம்மா இல்லை” என்று அழத் தொடங்கியது குஞ்சு. இப்போது சிங்கராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்தக் குஞ்சின் அம்மாவை எப்படிக் கண்டறிவது என்று குழப்பமாக இருந்தது.

அப்போது சிங்கராஜாவின் முன்னே வந்தது யானை. “சிங்கராஜா, பொதுவாக ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் அம்மா அழகாகவே தெரிவார். அதற்குப் பிறகு அம்மாவின் நற்பண்பு குழந்தையின் மனதில் பதிந்திருக்கும். அப்படி ஏதேனும் இதன் அம்மாவுக்கு இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள்” என்றது.

“குழந்தையே, உன் அம்மாவிடம் நீ பார்த்த நற்பண்பு எதுவும் இருந்தால் சொல்லு?” என்று கேட்டது சிங்கராஜா. “என் அம்மாவுக்குச் சிறிது உணவு கிடைத்தாலும் ‘நம் உறவினர்கள் பசியோடு இருப்பார்களே’ என்று அவர்களையும் கூவி அழைத்து, உணவைப் பங்கிட்டுக் கொடுத்துதான் உண்பார்” என்று சொன்னது குஞ்சு.

“ஆஹா, பிறரையும் அழைத்து உணவைப் பகிர்ந்து உண்ணும் பண்பு காகத்தைத் தவிர வேறு எதற்கு இருக்கிறது? காகத்தை அழைத்து வாருங்கள்” என்று சிங்கராஜா உத்தரவிடும்போதே, தன் குஞ்சைத் தேடி காகம் அங்கே வந்து சேர்ந்தது. “இதோ இவர்தான் என் அம்மா” என்று மகிழ்ச்சியில் குரல் கொடுத்தது குஞ்சு. காகமும் பறந்து வந்து தனது குஞ்சை அணைத்துக் கொண்டது.

உலகிலேயே அழகான அம்மா! | கதை
சனிக்கோளைச் சுற்றி வளையங்கள் ஏன் உள்ளன? | வானம் நமக்கொரு போதிமரம் 16

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in