

பூமியில் நீர் மழையாகப் பொழிகிறது. வளிமண்டல மாசு காரணமாக அமில மழைகூடப் பொழிகிறது. வானியலாளர்களின் கருத்துப்படி யுரேனஸ், நெப்டியூன் கோள்களில் வைர மழை பொழிகிறது. ஆனால், இது ஒரு கோட்பாட்டு ஊகம் மட்டுமே.
நேரடியான கணிப்பு, ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. நெப்டியூன், யுரேனஸ் கோள்கள் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள ‘பனி ராட்சதக் கோள்கள்’ (Ice Giants) என அழைக்கப்படுகின்றன.
பனி என்றால் நமக்குக் குளிர்பானங்களில் போடப்படும் ஐஸ்கட்டியோ, இமயமலையில் படிந்திருக்கும் பனியோ நினைவுக்கு வரும். ஆனால், வானியலில் ‘பனி’ என்பது உறைநிலையில் ஹைட்ரஜன் அடங்கிய லேசான தனிமங்களின் சேர்மங்களைக் குறிக்கும்.
இந்தக் கோள்களின் வெளிப்பகுதி ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன், நீர், அமோனியா ஆகியவற்றால் ஆனது. இவற்றில் உள்ள மீத்தேன் மூலக்கூறுதான் இந்தக் கோள்களுக்கு அழகான நீல நிறத்தைத் தருகிறது.
பூமிக்கு அடியே பல அடுக்குகள் உள்ளதுபோல, இந்தக் கோள்களுக்கும் கோள் உள்ளகம், இடைப்பகுதி, மேற்பகுதி என மூன்று முக்கிய அடுக்குகள் உள்ளன. இதில் நடுப்பகுதியின் ஆழத்தில்தான் வைர மழை பொழிகிறது எனக் கருதப்படுகிறது.
ஒரு காய்கறி வியாபாரி தலையில் சுமக்கும் கனமான கூடைபோல, கோளின் மேற்பகுதி பாரமானது நடுப்பகுதியின் மீது மிகுந்த அழுத்தத்தை உருவாக்குகிறது.
இங்கு அமையும் அழுத்தம், பூமியின் வளிமண்டல அழுத்தத்தைவிடப் பத்து லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக இடைப்பகுதியில் வெப்பநிலையும் ஆயிரக்கணக்கான கெல்வின்களாக உயரும்.
இத்தகைய கடுமையான வெப்பம், அழுத்தத்தில் மீத்தேன் போன்ற கார்பன் சேர்மங்களின் வேதியியல் பிணைப்புகள் உடைகின்றன. கார்பன் அணுக்கள் விடுபட்டு, அவை ஒன்றன் மீது மற்றொன்று அழுத்தப்பட்டு, கார்பனின் மிக நிலையான வடிவமான வைரக் கட்டமைப்பைப் பெறுகின்றன.
இவ்வாறு உருவான வைரம், சுற்றியுள்ள பனிச்சேர்மங்களைவிட அடர்த்தி மிகுந்ததாக இருப்பதால், அது கோளின் உள்ளகம் (Core) நோக்கி மெதுவாக மூழ்கத் தொடங்கும்.
இவ்வாறு கீழ்நோக்கி விழும்போது அது, பிற கார்பன் அணுக்களைச் சேர்த்துக்கொண்டு மீட்டர் அளவு வைரப் பாறைகளாக வளரக்கூடும். இதுவே வைர மழை எனக் கருதப்படுகிறது. மேகத்திலிருந்து நீர் கீழே விழுவதுபோல, நடுப்பகுதியில் உருவாகி கோளின் கீழ்நோக்கி வைரம் விழும்.
பனிப்பொழிவு ஏற்பட்டு இமயமலையின் மீது பனி அடுக்கு ஏற்படுவதுபோல, வைர மழைப் பொழிவின் காரணமாக இந்தக் கோள்களின் உள்ளகத்தைச் சுற்றி ஒரு தடிமனான கார்பன் அடுக்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
வெப்பநிலை மிகக் கூடுதலாக இருந்தால், கார்பன் திரவநிலையில் கடல்போல இருக்கும். திட கார்பன், திரவ கார்பனைவிடக் குறைந்த அடர்த்தி உடையதாக இருப்பதால், வைரம் போன்ற திட கார்பன் இந்த கார்பன் கடல்களில் மிதக்கும்.
பூமியின் வட, தென் துருவங்களில் எப்படிப் பனிப்பாளங்கள் மிதக்கின்றனவோ, அதுபோல இந்தக் கோள்களின் உள்ளகப் பகுதியைச் சுற்றியுள்ள கார்பன் கடலில், பெரிய வைரப் பாளங்கள் (Diamond Bergs) மிதக்கும் காட்சியும் சாத்தியமே.
இந்தக் கோட்பாட்டை 1981இல் மார்வின் ராஸ் என்கிற அறிவியலாளர் முன்வைத்தார். ஆனால், இன்றுள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்கூட இதை நேரடியாக உறுதிப்படுத்த முடியாது.
இந்தக் கோள்களை நெருங்கி ஆராய்வது கடினம். இதுவரை வயேஜர் 2 (Voyager 2) என்கிற ஒரே ஒரு விண்கலம் மட்டுமே 1986-1989 காலக்கட்டத்தில் இந்தக் கோள்களைக் கடந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
எனவே, அறிவியலாளர்கள் பூமியிலுள்ள ஆய்வகங்களிலேயே இந்தக் கோள்களின் உள்பகுதி நிலைகளைப் படியெடுக்கும் ‘ஒப்புருவாக்கம்’ (Simulation) எனும் நுட்பத்தின் வழியே ஆய்வு செய்கிறார்கள்.
பாலிஸ்டைரீன் (Polystyrene) போன்ற பொருள்களைப் பயன்படுத்தி, நானோ அளவிலான வைரங்களை ஆய்வகத்திலேயே உருவாக்கும் சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன.
யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் நமது பால்வெளியில் மிகவும் பொதுவானவை என்கிற ஓர் உண்மையும் இந்த ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் சேர்க்கிறது.
இதுவரை கண்டறியப்பட்ட பிற விண்மீன்களைச் சுற்றிவரும் புறக்கோள்களில் (Exoplanets), யுரேனஸ், நெப்டியூன் அளவுள்ளவை, வியாழன், சனி அளவுள்ள கோள்களைவிட ஒன்பது மடங்கு அதிகம் என மதிப்பிடப்படுகிறது.
அதாவது பால்வெளியில் சராசரிக் கோள்கள் யுரேனஸ், நெப்டியூன் போன்ற தன்மை உடையவை. எனவே, இந்தப் பனி ராட்சதக் கோள்களை ஆராய்வது, புறக்கோள்கள் எவ்வாறு உருவாகின்றன, வாழத்தகுந்த சூழல் எங்கு ஏற்படக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
வைர மழை என்பது ஓர் ஆர்வமூட்டும் கோட்பாடுதான். ஆனால், இந்தக் கோள்களைப் பற்றிய அறிவு, பிரபஞ்சத்தில் நமது இடத்தைப் புரிந்துகொள்ள ஒரு திறவுகோலாக அமையும் என்பதே அதைவிட முக்கியமானது.
(அறிவோம்)
- tvv123@gmail.com