ஏலியன்கள் இருக்கிறார்களா? | வானம் நமக்கொரு போதிமரம் 20

ஏலியன்கள் இருக்கிறார்களா? | வானம் நமக்கொரு போதிமரம் 20
Updated on
3 min read

சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி மூலம், 1,150 ஒளியாண்டுத் தொலைவில் உள்ள WASP-96B என்கிற புறக்கோளில் நீராவி இருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்

பட்டுள்ளன. நீராவி இருப்பதால், அங்கு உயிர் வாழும் சூழல் உள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி ஒரு சூழல் இருந்தால், அங்கே வேற்றுயிர் எதுவும் உள்ளதா என்பது பற்றிய மற்றொரு கேள்வியும் தோன்றுகிறது.

‘இருக்கிறார்களா, இல்லையா?’ என்கிற இந்தக் கேள்விக்கு இரு பொருள்கள் உள்ளன. நிலவின் ஒரு பக்கம் மட்டுமே பூமியிலிருந்து நம்மால் காண முடியும். அதன் மறுபக்கத்தை ஒரு விண்கலத்தில் சென்றுதான் பார்க்க முடியும். 1959 அக்டோபர் 7, சோவியத் விண்கலமான லூனா 3 நிலவைச் சுற்றியபோது, நிலவின் மறுபுறத்தைப் படமெடுத்துக் காட்டியது. அதற்கு முன், நிலவின் மறுபுறத்தில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. பல்வேறு கற்பனைகள் மட்டுமே இருந்தன.

அதாவது, லூனா 3 படம் எடுப்பதற்கு முன்பும் நிலவுக்கு மறுபக்கம் உண்டு என்பது நமக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அங்கு என்ன இருக்கிறது என்பது மட்டும் தெரியாது. இது ஓர் ‘அறியப்பட்ட அறியாமை’ (known unknown). எல்லாப் பொருள்களையும் பகுத்துக் கொண்டே போனால், பிளக்க முடியாத ஒரு நுண்ணிய அடிப்படைத் துகள் கிடைக்கும் என்று பண்டைய கால மெய்யியலாளர்கள் கருதினர்.

அதற்கு அணு என்று பெயரிட்டனர். ஆனால், அந்த அணுவுக்குள் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான், நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டான், மின்னூட்டமற்ற நியூட்ரான் போன்ற துணை அணுத் துகள்கள் இருக்கின்றன என்பது பற்றித் தெரியவில்லை. இது ஓர் ‘அறியப்படாத அறியாமை’ (unknown unknown). அதாவது, நமக்கு ஓர் அறியாமை இருக்கிறது என்பதுகூடத் தெரியாத நிலை.

ஏலியன்கள் இருக்கிறார்களா என்கிற கேள்வியை எடுத்துக்கொள்வோம். எங்கே இருக்கிறார்கள், எப்படி இருப்பார்கள் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும் (நிலவின் மறுபக்கம்போல), வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்பதன் சாத்தியம் பற்றியது முதலாவது பொருள். வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்பது சாத்தியம் என்றால், பூமிக்கு வந்தார்கள், பறக்கும் தட்டுகள் மூலம் காணப்பட்டார்கள் என்று கூறுவது உண்மையா என்பது இரண்டாவது பொருள்.

1961இல் பிராங்க் டிரேக், வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களில் அறிவார்ந்த உயிர் தோன்றுவதற்கான வாய்ப்பைக் கணக்கிட ஓர் அடிப்படைச் சூத்திரத்தை உருவாக்கினார். முதலில், எல்லா விண்மீன்களைச் சுற்றியும் கோள்கள் உருவாகின்றன என்று கூற முடியாது. அப்படி உருவான கோள், மைய விண்மீனுக்கு மிக அருகில் இருந்தால், அதிகக் கதிர்வீச்சு உயிருக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே உயிரே தோன்றாது. மிகத் தொலைவில் இருந்தால் போதிய ஆற்றல் கிடைக்காது.

எடுத்துக்காட்டாக, வியாழன் கோள் அளவுக்குத் தொலைவில் உள்ள ஒரு கோளில், ஒரு கி.மீ. நீள இலை இருந்தால் மட்டுமே போதிய அளவு ஒளிச்சேர்க்கை நடத்த முடியும். தொலைவு அதிகரிக்க அதிகரிக்க, மைய விண்மீனின் ஆற்றல் மிகக் குறைவாகவே கோளை வந்தடையும்.

உயிர் தோன்றினாலும், அது சிக்கலான அறிவுள்ள உயிரினமாக உருவாக வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு காலத்தில் இந்த உலகில் டைனசோர்கள்தான் ஆதிக்கம் செலுத்தின. தற்செயலாக பூமியில் மோதிய ஒரு பெரும் விண்கல்லின் தாக்கத்தால் டைனசோர்கள் அழிந்த போது, பாலூட்டிகள் பரிணமிக்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியில்தான் அறிவுள்ள மனித இனம் உருவானது. அந்த விண்கல் மோதியிருக்காவிட்டால், பூமியில் மனிதன் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.

அறிவார்ந்த உயிரி ஒன்று தோன்றிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கோளுக்கு வெளியே அந்த உயிரியின் தடயம் தெரியுமா? மனித இனம் தோன்றிய பிறகு, சமீப காலம்வரை ‘குடத்தில் இட்ட விளக்கு’ போலத்தான் இருந்து வந்தோம். விண்வெளி யுகம் தொடங்கிய பின்னரே நமது விண்கலன்கள் விண்வெளியில் செல்லத் தொடங்கியுள்ளன.

ரேடியோ போன்ற தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் உருவான பின்னரே, நாம் வெளியிடும் ரேடியோ அலைகள் விண்வெளியில் பரவத் தொடங்கியுள்ளன. 1919 முதல்தான் தொடர்ந்த, நீடித்த ரேடியோ ஒலிபரப்பு தொடங்கியது. ஒளியின் வேகத்தில் செல்வதால், முதன்முதலில் ஒலிபரப்பான ரேடியோ அலைகள் தற்போது பூமியிலிருந்து சுமார் நூறு ஒளியாண்டுகள் தொலைவுக்குச் சென்றிருக்கும்.

பிரபஞ்சத்தின் இந்தப் பகுதியில் யாராவது இருந்தால், அவர்களிடம் மிக நுண்ணிய ரேடியோ தொலைநோக்கி இருந்தால் நமது ஒலிபரப்பை இனம் கண்டு, அறிவுள்ள இனம் பூமியில் உள்ளது என அறிய முடியும். அதாவது கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் ‘குன்றில் ஏற்றிய விளக்காக’ ஒளிர்கிறோம். அதேபோல வேற்று கிரகவாசிகளும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து ஒலிபரப்பு தொடங்கிய பின்னரே, நம்மால் அவர்களை இனம் காண முடியும். இதுபோன்ற பல்வேறு தரவுகளைக் கருத்தில் கொண்டு பிராங்க் டிரேக் தனது சூத்திரத்தை வடிவமைத்தார்.

இன்றைய தகவல்களின் அடிப்படையில் நமது பால்வெளியில் சுமார் 500 அறிவார்ந்த உயிரி கொண்ட கோள்கள் இருக்கக்கூடும் எனச் சில அறிவியலாளர்களும் வெறும் 36 தொடர்புகொள்ளும் நாகரிகங்கள் மட்டுமே இருக்கக்கூடும் எனச் சில அறிவியலாளர்களும் மதிப்பிடு கின்றனர். எனினும் இதுவரை நாம் எந்த வேற்று கிரகவாசிகளின் ஒலிபரப்பையும் கண்டறியவில்லை என்பதே உண்மை.

எனவே, 1959க்கு முன் நிலவின் மறுபக்கம் குறித்து இருந்த ‘அறியப்பட்ட அறியாமை’ போலவே, வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என நம்மால் கூறமுடிந்தாலும், அவர்களைப் பற்றி எதுவும் நமக்குத் தெரியாது. ஏலியன்கள் இருக்கிறார்களா என்கிற கேள்வி, இப்போதும் நமக்கு ஓர் ‘அறியப்பட்ட அறியாமை’தான். இருக்கலாம்... ஆனால் இல்லாமலும் இருக்கலாம்.

கடந்த காலத்திலோ அல்லது தற்போதோ ஏலியன்கள் பூமிக்கு வந்தார்களா? இதுவரை நாம் உருவாக்கிய அதிவேக விண்கலம் மணிக்கு 56,000 கி.மீ. வேகத்தில் செல்கிறது. இந்த விண்கலத்தில், 1,150 ஒளியாண்டுத் தொலைவில் உள்ள WASP-96B கோளை நோக்கிப் பயணித்தால், அந்தக் கோளை அடைய சுமார் 22,163,156.76 (சுமார் 2.2 கோடி) ஆண்டுகள் பயணிக்க வேண்டும்.

திரும்ப வர மேலும் 2.2 கோடி ஆண்டுகள் ஆகும். ஒளியின் வேகத்தில் சென்றால்கூட, அந்தக் கோளைச் சென்றடைய 1,150 ஆண்டுகள் ஆகும். எனவே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்து, அமெரிக்காவுக்கோ அல்லது சென்னைக்கோ வேற்று கிரகவாசிகள் வந்தார்கள் என்றும், வந்து ஒரு சில ஆண்டுகள்கூடத் தங்காமல் உடனே திரும்பிச் சென்றார்கள் என்றும் சொல்வது, ஏற்கும் படியாக இல்லை.

(அறிவோம்)

- tvv123@gmail.com

ஏலியன்கள் இருக்கிறார்களா? | வானம் நமக்கொரு போதிமரம் 20
விண்மீன்கள் எவ்வளவு காலம் வாழும்? | வானம் நமக்கொரு போதிமரம் 19

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in