2025 சிறார் நூல்கள்
100 சிறந்த சிறார் கதைகள், தொகுப்பாசிரியர்: சுகுமாரன்,
டிஸ்கவரி பப்ளிகேஷ்ன்ஸ், தொடர்புக்கு: 99404 46650
அழ.வள்ளியப்பா, பூவண்ணன், பெ.தூரன், வாண்டுமாமா, ரேவதி, தம்பி.சீனிவாசன் என அந்நாள் எழுத்தாளர்கள் முதல் ஆயிஷா நடராசன், யூமா.வாசுகி, உதயசங்கர், சாலை செல்வம், விழியன், யெஸ்.பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன், கொ.மா.கோ. இளங்கோ உள்ளிட்டோர்வரை தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
சிறகு விரிக்கும் சிறார் கதைகள், தொகுப்பு: ஞா.கலையரசி, நிவேதிதா பதிப்பகம், தொடர்புக்கு: 89393 87296
தமிழ் சிறார் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் பெண் எழுத்தாளர்களின் கதைகள் முதல் முறையாக விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மூத்த எழுத்தாளர்கள் தொடங்கிப் பள்ளி மாணவிகள்வரை இயற்கை, சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், மிகைப்புனைவு, மாயா ஜாலம், அறிவியல், யதார்த்தம் எனப் பல வகைமைகளில் எழுதிய கதைகள் இடம்பெற்றுள்ளன. 26 பெண் எழுத்தாளர்கள் பங்களித்து இருக்கிறார்கள்.
வாண்டுமாமா 100, கிங் விஸ்வா, யாவரும் பப்ளிஷர்ஸ், தொடர்புக்கு: 90424 61472
வாண்டுமாமாவின் ‘கனவா நிஜமா?’ சித்திரக்கதை, ‘புலி வளர்த்த பிள்ளை’ நாவல், ஹரீஷ்-அனுஷா இடம்பெறும் ‘துப்பறியும் புலிகள்’, பெரியவர்களுக்கான ‘சி.ஐ.டி. சிங்காரம்’, மர்மக் கதையான ‘சந்திரனே சாட்சி’, தழுவல் கதைகளான ‘தேச தேசக் கதைகள்’, ‘ஒற்று-உளவு-சதி’ புத்தகம் ஆகியவற்றைக் குறித்த அறிமுகக் கட்டுரைகளுடன், வாண்டுமாமாவினுடைய படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் வாசிப்பதற்கான அரிய வாய்ப்பையும் இந்த நூல் தருகிறது.
எலியின் வேட்டை, விஷ்ணுபுரம் சரவணன்,
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924
மிட்டு எனும் தலைவியின் தலைமையில் 10 எலிகள் கொண்ட டுட்டு குழு, கயலான் எனும் தலைவனின் தலைமையில் 10 எலிகள் கொண்ட லான் குழு ஆகியவை இருக்கின்றன. மிட்டு குழு ஆபத்துகளைத் தேடிப் போகாதது. மிட்டு குழுவில் உள்ள சிட்டு எலிக்கு லான் குழு எலிகளைப்போல சாகசம் செய்வதிலும் அதிரடியாகச் செயல்படுவதிலும் ஆர்வம் அதிகம். லான் குழுவினரின் அதிரடிச் செயல்பாடுகள் எல்லாமே நல்லவிதமாக முடிந்தனவா, லான் குழு சந்தித்த ஆபத்துகள் என்ன என்பது விறுவிறுப்பான கதையாகி இருக்கிறது.
பூ பூ பூசணிப் பூ (சிறுவர் பாடல்கள்), குருங்குளம் முத்து ராஜா, மேஜிக் லாம்ப் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302
சிறிய பாடல்கள், சற்றே பெரிய பாடல்களுடன், விடுகதைப் பாடல்கள், கதைப் பாடல்களும் இந்தத் தொகுப்பில் உள்ளன. குழந்தைகளை எளிதில் கவரும் ‘சக்கரம் வச்ச செருப்பு’, ‘சவ்வு மிட்டாய்’ போன்ற பாடல்கள் அவர்களைக் குதூகலப்படுத்தும். வெறுமனே தகவல்கள்-வார்த்தைகளை அடுக்காமல் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டக்கூடிய சில செய்திகளையும் பாடல்களில் பொதிந்தே தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஆகா மரம், விழியன், சுட்டி யானை, தொடர்புக்கு: 95001 25125
ஓர் அதிசய மரத்தைப் பார்க்கிறாள் நிவேதா. அந்த மரம் தன் சிரமங்களை அவளிடம் கூறுகிறது. நிவேதா அதை எப்படி எதிர்கொள்கிறாள்? மரம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? இப்படி ஒரு சிறுமியும் அதிசய மரமும் சேர்ந்த பயணமே ஆகா மரம் கதை. விறுவிறுப்பான இந்தக் கதை யோசிக்க வைக்கும்.
பாப்பி கதைகள் - 6 நூல்கள், உதயசங்கர், இயல் பதிப்பகம், தொடர்புக்கு: 94884 06868
எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவேன், பாப்பி பள்ளிக்கூடம் போகிறது, பாப்பி வாசிக்கிறது, உலகம் சுற்றும் பாப்பி, உழைக்க வேண்டும், கனவு காணுங்கள் ஆகிய தலைப்புகளில் பாப்பி என்கிற எலிக்குஞ்சு இடம்பெறும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான கதைகள்.
ஆண் உடல்: பதின்மப் பயணம், சாலை செல்வம்,
ஹெர் ஸ்டோரீஸ் விங்க்ஸ், தொடர்புக்கு: 96003 98660
பதின்ம வயது என்பது மனிதர்கள் உருப்பெறும் பருவம். குழந்தைகளாக இருப்பவர்கள் பெரியவர்களாக உருமாறும் காலம் இது. இந்தக் காலத்தில் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் ஏற்படுகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் ஹார்மோன்கள் எனப்படும் இயக்குநீர் நிறைய மாற்றங்களை, விளையாட்டுகளை உடலில், மனதில் நிகழ்த்துவதுதான். இதை வெளிப்படையாக, அறிவியல்பூர்வமாகப் பேசுகிறது இந்நூல்.
சிறுகதைக் களஞ்சியம்-2 பாகங்கள், அனில் அவசட், தமிழில்: நாணற்காடன், சாகித்ய அகாடமி வெளியீடு, தொடர்புக்கு: 044-24311741
மராட்டிய மொழி எழுத்தாளரும், சமூக சேவகருமான அனில் அவசட் எழுதி, மராட்டிய மொழிக்கான பால புரஸ்கார் விருதைப் பெற்ற சிறார் சிறுகதைகள் நூல். இந்தக் கதைகள் கோரக் த்தோராத் - ஆல் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. தற்போது இந்தி வழியாக தமிழுக்கு இரண்டு பாகங்களாக அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மாதியும் யானையும் - குருங்குளம் முத்துராஜா; l சந்தனக்கூடு - கார்த்திகா கவின் குமார், l கொடுக்கும் மரம்; அடிக்கும் மரம் - லைலா தேவி; l தியா எங்கே - ஞா.குமுதம், l பண்டித ரமாபாய் - ஞா.கலையரசி; l நத்தையின் ஆசை - ராஜிலா ரிஜ்வான்;
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், தொடர்புக்கு: 044 24332924
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் எளிய மொழி நடையில் குழந்தைகள் வாசிக்கக்கூடிய வகையில் வெளியிட்டு வரும் புத்தக வரிசையில் 2025இல் 19 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
