

அறைக் கதவின் பின்னால் ஒளிந்துகொண்டு தன் தந்தை தட்டச்சு செய்யும்போது எழும் சத்தத்தில் லயித்துக் கொண்டிருந்தாள் நான்கு வயது பார்பரா. அந்தச் சத்தத்தில் எழுத்துகள் பிறப்பெடுத்து, காகிதத்தில் ஒரு கதை உருவாவதை எப்படியோ அறிந்துகொண்டாள். தானும் எழுத்துகளோடு விளையாடி, ஒரு கதையை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் முளைவிட்டது.
ஒருநாள் தந்தையின் தட்டச்சு இயந்திரத்தைத் தன் அறைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினாள் பார்பரா. கதவையும் ஜன்னலையும் தாழிட்டாள். தன் மனம்போன போக்கில் தட்டச்சு செய்தாள். தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள் அறை முழுக்கச் சிதறிக் கிடந்தன. அதைப் பார்த்து பார்பராவின் தந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது. மகளுக்கு மேலும் சில காகிதங்களைக் கொடுத்து, தட்டச்சு செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தினார். பார்பராவின் எழுத்துப் பயணம் அங்கிருந்து தொடங்கியது.
அமெரிக்காவில் 1914, மார்ச் 4 அன்று பிறந்தார் பார்பரா நூஹால் ஃபாலட் (Barbara Newhall Follet). தந்தை வில்லியம் ஃபாலட், பதிப்பகம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். மிகச் சிறிய வயதிலேயே புத்தகங்களை விரும்பிப் படிக்க ஆரம்பித்துவிட்டாள் பார்பரா.
தன் ஒன்பதாவது பிறந்தநாளுக்குத் தானே ஒரு புத்தகத்தைக் கைப்பட எழுதி அம்மாவுக்குப் பரிசளிக்க வேண்டும் என்று பார்பரா திட்டமிட்டாள். ஆனால், என்ன எழுதுவது? தனக்குத் தோன்றியதை எல்லாம் ’ஈபர்ஷிப்’ என்கிற பெண்ணின் கதாபாத்திரமாக உருவாக்கி, நாள் விடாமல் எழுதினாள்.
எழுதிய வற்றைப் பல படிகள் எடுத்து ஒவ்வொருவருக்கும் தரவேண்டும் என்றுஎண்ணினாள். ஒரு வழியாகக் நாவலும் இறுதிப் பகுதிக்கு வந்தது. ஆனால், பார்பரா வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் எல்லாக் காகிதங்களும் கருகிவிட்டன.
வருத்தத்தில் மூழ்கினாள் பார்பரா. தந்தை அவருக்கு ஆறுதல் சொல்லி, மீண்டும் எழுத உற்சாகப்படுத்தினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் தான் எழுதிய நாவலை மேலும் அழகாக்கி, புது நாவலாக உருவாக்கினாள் பார்பரா. இப்போது ஈபர்ஷிப் கதாபாத்திரம் இன்னும் கவரும் விதத்தில் அமைந்துவிட்டது. காடு, மலை, புல்வெளி என்று வெளியுலகம் விரும்பும் ஈபர்ஷிப், தன் வீட்டைவிட்டு வெளியேறுவது போல் கதை அமைந்திருந்தது.
12 வயதில் நாவலை எழுதி முடித்தாள் பார்பரா. தான் பணியாற்றி வந்த பதிப்பகத்திலேயே தன் மகளின் புத்தகத்தை வில்லியம் வெளியிட்டார். சற்றும் எதிர்பாராத வெற்றி. 2,500 புத்தகங்கள் சட்டென்று விற்றுத் தீர்ந்தன. ‘ஜன்னல்கள் அற்ற வீடு’ (The House Without Windows) என்கிற அந்தப் புத்தகத்திற்கு நியூயார்க் டைம்ஸ் மதிப்புரை எழுதியது. நாடறிந்த குழந்தை எழுத்தாளராகப் புகழ்பெற்றாள் பார்பரா.
இலக்கிய ஜாம்பவான்களோடு விருந்து உண்டாள். ரேடியோவில் பேட்டி கொடுத்தாள். அவளைப் பார்க்கக் கூட்டம் அலைமோதியது. ‘கடல்’ சார்ந்த தன் அடுத்த புத்தகத்தை எழுதுவதற்கு வெப்ஸ்டர் அகராதியில் பல கலைச் சொற்களைப் தேடிப் படித்தாள் பார்பரா. வித்தியாசமான படகுகளை நேரில் சென்று பார்த்தாள்.
13 வயதில் கடல் பயண அனுபவங்களுக்காக நோவா ஸ்கோசா செல்லும் கப்பல் ஒன்றில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தாள் பார்பரா. சில வாரங்கள் பெற்றோரைவிட்டுப் பிரிந்து, கடல் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினாள். ‘நார்மன் டியின் கடல்வழிப் பயணம்’ என்கிற தன் இரண்டாவது புத்தகத்தை அடுத்த ஆண்டே வெளியிட்டாள். எதிர்பார்த்தபடியே இந்தப் புத்தகமும் மகத்தான வெற்றி பெற்றது.
18 வயதில் நிக்கர்சன் ரோஜர்ஸோடு சேர்ந்து அப்பலேச்சியன் மலையேற்றம் செய்தார். போர்க் காலத்தில் இருந்த ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்குச் சென்று தகவல்களைத் திரட்டி வந்தார்.
1934இல் பார்பராவுக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு எழுதுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. அதை நினைத்து மிகவும் வருந்தினார். எழுதிய சில கதைகள் தரமானதாக இல்லை என்று பதிப்பாளர்களால் திருப்பி அனுப்பப்பட்டன. பார்பரா மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானார்.
1939, டிசம்பர் 7 அன்று 25 வயது பார்பரா, வீட்டில் இருந்து குறைவான பணத்தையும் குறிப்பெடுத்த தாள்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறினார். தான் உருவாக்கிய ‘ஈபர்ஷிப்’ கதாபாத்திரத்தைப் போலவே பார்பராவும் காணாமல் போய்விட்டார். அதற்குப் பிறகு அவரை யாரும் பார்க்கவே இல்லை.
(மேதைகளை அறிவோம்)
- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com