

நம் வாழும் உலகில் மிகவும் மர்மமான, முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு விஷயம் எதுவென்று தெரியுமா? இயற்கைதான். அதன் அற்புதங்கள் தோண்டத் தோண்ட புதிது புதிதாகக் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
இயற்கையை, அதன் அடிப்படை அம்சங்களைத் தன் எழுத்துகளால் குழந்தைகளுக்கு மிக எளிமையான முறையில், சிறப்பான வகையில் கொண்டு சென்றுவருபவர் பேராசிரியர் எஸ். சிவதாஸ். கேரளத்தைச் சேர்ந்த அவருடைய இயற்கை-சுற்றுச்சூழல் தொடர்பான மூன்று முக்கிய புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்களில் முதன்மையானது, எல்லோரும் அவசியம் படிக்க வேண்டியது ‘வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்’. நம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை, சுற்றுச்சூழலை, அதன் அழகை, புதிர்களைக் கதை போல சுவாரசியமாகச் சொல்லும் நூல் இது. நம்மைச் சுற்றி வாழும் தாவரங்கள், பறவைகள், உயிரினங்கள் பலவற்றை நமக்கு நெருக்கமாக்கி விடுகிறது இந்தப் புத்தகம். தலைப்பே இயற்கையின் எல்லையற்ற தன்மையைச் சொல்லிவிடுகிறது.
இந்தப் புத்தகம் 20 ஆண்டுகளுக்கு முன்பே ப. ஜெயகிருஷ்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அறிவியல் வெளியீட்டால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டுள்ளது.
மண்புழுவின் வழக்கு
சிவதாஸ் எழுதிய மற்றொரு புத்தகம் ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு’. ஒரு மண்புழு வழக்குப் போடுமா, அதுவும் அரசாங்கத்தை எதிர்த்து? இந்தக் கதையில் வரும் மண்புழு அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறது. அதன் கோரிக்கை ஒன்றுதான். இந்த மண்ணைச் செழிப்பாக்கியதற்காக, அதில் விளையும் பயிர்களுக்காக, மக்கள் சாப்பிடும் உணவுக்காகப் பாடுபட்ட தனக்கு, அரசு ஓய்வூதியம் தர வேண்டும் என்பதுதான்.
விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும் ஓய்வூதியத்தை ‘உழவனின் நண்பன்’ என்று போற்றப்படும் தனக்கும் தர வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பிக்கிறது. ஆனால், அரசு அதை ஏற்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது மாத்தன். தன் வாதத்துக்கு ஆதாரங்களாக இயற்கையில் தன்னுடைய வேலையையும் முக்கியத்துவத்தையும் அது விரிவாக விளக்குகிறது.
எழுத்தாளர் யூமா. வாசுகி மொழிபெயர்த்த இந்தப் புத்தகத்தை புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கான கரு, ஒரு சிறுவன் எழுதியனுப்பிய கடிதத்தில் இருந்து கிடைத்தது என்று சிவதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆராயும் குட்டிப்பாப்பா
சமீபத்தில் வெளியான சிவதாஸின் புத்தகம் ‘இயற்கையின் அற்புத உலகில்’. நம்மைச் சுற்றி எறும்புகள், புழுக்கள், வண்ணத்துப் பூச்சிகள், காக்கைகள், குயில்கள் என பல வகை உயிரினங்கள், பல வகை செடிகள், பல வகை கொடிகள், பறவைகள், பூச்சிகள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம், ஒவ்வொரு வடிவத்துடன் தனித்தனி குணங்களைப் பெற்றிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இயற்கையின் மாபெரும் கலைப்படைப்புகள்.
இவற்றையெல்லாம் ஒரு குட்டிப் பாப்பா நேரில் பார்க்கிறாள். உற்று நோக்குகிறாள், ஆராய்கிறாள், உண்மையைத் தெரிந்துகொள்கிறாள். நாமும் அந்த குட்டிப் பாப்பாவுடன் புதிய உலகில் உலாவுகிறோம். இயற்கையை நெருக்கமாகத் தெரிந்துகொள்கிறோம், அனைத்து உயிர்களைகளையும் நேசிக்கத் தொடங்கிவிடுகிறோம். எழுத்தாளர் உதயசங்கர் மொழிபெயர்த்த இந்தப் புத்தகத்தை வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
புத்தகங்கள் விவரம் இயற்கையின் அற்புத உலகில், வானம் வெளியீடு, தொடர்புக்கு: 9176549991 மாத்தன் மண்புழுவின் வழக்கு, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924 வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 044-28113630 |