ஆழ்கடல் அதிசயங்கள் 09: பூமியின் மிகப்பெரிய மீன்!

ஆழ்கடல் அதிசயங்கள் 09: பூமியின் மிகப்பெரிய மீன்!
Updated on
2 min read

பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்பகுதிக்கு வந்து நின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி. தொலைவில் வெள்ளைப் புள்ளிகளுடன் ஒரு மீன் நீந்திக்கொண்டிருப்பதை அனைவரும் பார்த்து ரசித்தார்கள்.

“ரொம்ப அழகா இருக்கே!” என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.

“ஆமாம், மடகாஸ்கரின் மலகாசி மொழியில் இதை ‘நட்சத்திரங்கள் நிரம்பிய மீன்’னு சொல்வாங்க. ஆங்கிலத்தில்...” என்று ஆராய்ச்சியாளர் அருணா சொல்லிக்கொண்டிருந்தபோதே, “நான் சொல்றேன். ஆங்கிலத்தில் இதோட பேரு Whale shark. ஆனா, இது திமிங்கிலம் இல்லை. மீன் இனம்தான். சரியா?” என்று ரோசி கேட்க, “மிகவும் சரி” என்று கைதட்டினார் அருணா.

“தமிழ்ல இதுக்குப் பெட்டிச் சுறா, அம்மணி உளுவை, வளுவம்னு பல பெயர்கள் இருக்கு. மீன் இனங்களிலேயே மிகப்பெரியது இதுதான்” என்றார் அருணா.

“மீன்ல மட்டுமில்ல, கடல்லயே இதுதான் பெரிசு போல” என்று அம்மணி உளுவையை ஆச்சரியமாகப் பார்த்தபடி கேட்டான் செந்தில்.

“பாலூட்டிகளைப் பொறுத்தவரைக்கும் திமிங்கிலம், ஓங்கல் போன்ற இனங்கள்தாம் பெருசு. ஆனா, அவற்றைத் தவிர்த்து ஒரு பட்டியல் போட்டால், அதில் மிகப்பெரியது அம்மணி உளுவைதான். கடல் மட்டுமல்லாமல் மொத்த பூமியிலும் உள்ள முதுகெலும்புள்ள உயிரினங்களில், பாலூட்டிகளைத் தவிர்த்துப் பார்த்தால், அம்மணி உளுவைதான் பெரியது. சராசரியா 45 முதல் 48 அடி நீளம் வரை இருக்கும். எடை 2,240 கிலோ. அம்மணி உளுவைகளின் வாய் பக்கவாட்டு அகலம் மட்டும் ஐந்து அடி” என்று விளக்கினார் அருணா.

“ஐயோ வாயே அஞ்சு அடியா? இப்போ நம்மைப் பார்த்துதான் நீந்திவருது” என்று பயந்தாள் ரக்‌ஷா.

அருணா சிரித்துவிட்டார். “நீர்மூழ்கிக்குள்ள இருந்தாலும் இவ்வளவு பயமா? பயப்பட வேண்டாம், இது சாதுவானது. இதுக்கு முன்னூறு பற்கள் இருக்கும்...” என்று அருணா சொன்னபோதே, “300 பற்கள் இருக்கும் மீன் எப்படி ஆபத்தில்லாததா இருக்க முடியும்?” என்றான் செந்தில்.

“இந்த முந்நூறு பற்களும் நுண் பற்கள். இவை தவிர நீரை வடிகட்ட இருபது வாய்த் தகடுகளும் இந்த மீனுக்கு உண்டு. இதன்மூலம் ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 6,000 லிட்டர் கடல்நீரை வடிகட்டி, சின்ன இறால்கள், நுண் பாசிகள், லார்வாக்கள், மீன் முட்டைகளைச் சாப்பிடும். அதோ பாருங்க” என்று அருணா கைகாட்டினார்.

அங்கே அந்தப் பெரிய அம்மணி உளுவை, வாய் நிறைய கடல்நீரை விழுங்கிக்கொண்டிருந்தது.

“தகடுகள் மூலமா தண்ணிய வடிகட்டி, அந்த இரையை மட்டும் மீன் அழகா விழுங்கும். அம்மணி உளுவையின் இனப்பெருக்கம் பற்றி நிறைய விஷயங்கள் நமக்கு இன்னும் சரியாகத் தெரியல” என்றார் அருணா.

“சின்ன மீன், கண்ணுக்கே தெரியாது என்றால் ஆராய்ச்சி செய்வது கஷ்டமா இருக்கும். இவ்வளவு பெரிய மீன் பற்றியே நமக்கு இன்னும் விவரம் தெரியலையா?” என்று கன்னத்தில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள் ரோசி.

“ஆமாம், தொடர்ந்து இதுங்க வலசை போகும். ஆனா, எந்த இடத்தில் இதுங்க குட்டி போடும்னு தெரியல. இதுவரை யாரும் இந்த அம்மணி உளுவைகள் குட்டி போடுவதை நேரில் பார்த்ததில்ல. சாட்டிலைட் மூலமா இந்த மீன்களைத் தொடர்ந்து கண்காணிப்பதிலும் நிறைய நடைமுறைச் சிக்கல் இருக்கு. இந்த அம்மணி உளுவைகள் கடல் பரப்பில் நெடுந்தூரம் வலசை போகக்கூடியவையாவும், அதிக ஆழத்தில் நீந்துபவையாவும் இருக்கின்றன. அதனால், இந்த மீன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யணும்னா ஒரே நேரத்தில் ஆழத்திலும் தூரத்திலும் இயங்கக்கூடிய கருவிகள் நமக்குத் தேவை. அதனால, இப்போதைக்கு இவ்வளவு தகவல்களைத்தான் மனிதர்களால தெரிஞ்சுக்க முடிஞ்சிருக்கு” என்று அருணா விளக்கினார்.

“நான் வளர்ந்து பெரிய விஞ்ஞானியானதும் இதுக்கான கருவிகளைக் கண்டுபிடிப்பேன்” என்றாள் ரக்‌ஷா.

“நேத்து வக்கீல் ஆகப்போறேன்னு சொன்னியே?” என்றான் செந்தில். “அது நேத்திக்கு” என்று ரக்‌ஷா பதில் அளிக்க, எல்லோரும் சிரித்தார்கள்.

நீர்மூழ்கியைச் சுற்றி வந்துகொண்டிருந்த அம்மணி உளுவை, மெல்ல நீந்தி மறுபக்கம் சென்றது.

(அதிசயங்களைக் காண்போம்!)

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in