

“குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பெரியவர்களையோ கதை கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளையோ வீடுகளில் பார்ப்பதே இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது. புத்தக மூட்டைகளைச் சுமந்து பள்ளி வேனுக்கும் வீட்டுக்கும் ஓடவே குழந்தைகளுக்கு நேரம் போதாதபோது கதை எங்கே கேட்பது?’’ என்று ஆதங்கப்படுகிறார் விஜயராஜா. இவர் குழந்தைகள் நேசிக்கும் ஒரு கதை சொல்லி ஆசிரியர்.
2008-லிருந்து தொடர்ந்து மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணி செய்துவிட்டு அண்மையில், தேனி அருகே அய்யனார்புரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு மாறுதலாகி வந்திருக்கிறார் இந்தக் கதை சொல்லி.
மலை கிராமத்துப் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்குக் கூட்டி வருவதே ரொம்ப சவாலான பணி. அந்தச் சவால்தான் விஜயராஜாவைக் குழந்தைகள் நேசிக்கும் கதை சொல்லி ஆசிரியராக மாற்றியிருக்கிறது.
“மலை கிராமத்துப் பிள்ளைகளை நானே வலியப் போய் பள்ளிக்கு அழைத்து வருவேன். அப்படியே அழைத்து வந்தாலும் அவர்களை ரொம்ப நேரம் உட்கார வைக்க முடியாது.
இவர்களைத் தானாக வரவைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் நான் கற்ற நடிப்புக் கலையும் ஓவியமும் எனக்குக் கைகொடுத்தது” என்கிறார் விஜயராஜா.
ஆரம்பத்தில் பிள்ளைகளுக்குக் கதை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்திய இவர், அதன் பிறகு அவர்களையே சொந்தமாகக் கதை சொல்ல வைத்தார். கதை சொல்லித் தேர்ந்ததும் அந்தக் கதையையே நாடகமாக எழுதச் சொல்லி நடிக்க வைத்தார்.
அதற்கான உடைகள் போன்றவற்றைத் தனது பொறுப்பில் தயாரித்துக் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார். கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தவர்களை மெல்ல பாடப் புத்தகங்களுக்குள் இழுத்து வந்த விஜயராஜா, அதையும்கூடக் கதையாகச் சொல்லி, ஓவியமாக வரைந்து, நாடகமாக நடிக்க வைத்திருக்கிறார்.
படைப்பாற்றல் கல்வியைப் புகுத்தி, குழந்தைகள் பொம்மைகள் செய்தல், விதவிதமான பொம்மலாட்டங்களை இயக்குதல் உள்ளிட்ட திறமைகளில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.
“மாணவர்களை கதை, நாடகம், நாட்டியம் போன்ற வழிகளில் பாடங்களைக் கற்க வைப்பதால் தனியார் பள்ளி மாணவர்களும் இங்கே வர ஆரம்பித்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கற்பித்தல் முறை மூலம் படிப்பறிவை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார்கள். ஆனால், மாணவர்களுக்குப் பிடித்த மொழியில் அவர்களையே நாங்கள் கற்க வைக்கிறோம்’’ என்கிறார் விஜயராஜா.
எழுதப் படிக்க சிரமப்படும் மாணவர்கள் நாடகங்களில் நடிக்க ஆசைப் படுகிறார்கள். நாடகத்தில் நடிக்க வேண்டுமானால் அதற்கான வசனத்தை எழுத வேண்டும்; படிக்க வேண்டும். இதற்காகவே அவர்கள் எழுதப் படிக்கக் கற்றுவிடுகிறார்கள்.
அடிக்கடி கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற நடுக்கம் போய் மொழி ஆளுமை, சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள்.
இதுவரை தமது பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமே கதை சொல்லிக் கற்பித்து வந்த இவர், தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் முப்பது குழந்தைகளைத் தேர்வுசெய்து, அவர்களுக்காகக் கோடை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.