

வணக்கம் குழந்தைகளே! நான்தான் மருத மலர்.
மரத்தின் கிளைகளில் கொத்துக்கொத்தாய் இளம் சிவப்பு நிறத்தில் மருத மலர்கள் பூத்திருந்தன. இந்த மரத்தையோ அல்லது இதன் பூக்களையோ இதற்கு முன்னர் பசுமைப் பள்ளியின் குழந்தைகள் பார்த்ததே இல்லை.
மாசில் என்கிற சிறுவன் கேட்டான். “மருத மரமே! உன்னில் பலவகை உண்டு என்கிறார்களே, நீ எந்த வகை மருத மரம்?”
“என் பெயர் பூமருது. மருத மரத்தில் பல வகைகள் இருந்தாலும் மருதத் திணைக்குரிய மருத மரம் நான்தான்.”
“நானும் மருத நிலத்துக் குழந்தைதான். ஆனால், நான் இதுவரை உன்னைப் பார்த்ததே இல்லையே” என்றான் மாசில்.
“என்ன செய்வது, மருத மரங்கள் அழிந்து வருகின்றன. மருதத் திணையில் முன்பு நீர்மருது மரங்கள் நிறைய இருந்தன. என்னை அழகு மரமாக வளர்ப்பதால், இப்படி எங்காவது ஒன்றிரண்டு பிழைத்துக் கிடக்கிறேன். இன்றைக்கு வயல்களுக்கே வாழ்வில்லை. இதில் என்னை மட்டும் எப்படி வாழ வைப்பார்கள்? மருத மரங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில், வயல்கள் எல்லாம் எப்படி இருந்தன தெரியுமா?”
“எப்படி இருந்தன? எப்படி இருந்தன?” - குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்டனர்.
“அப்போது வயல்களே ஒரு பல்லுயிர் (Biodiversity) மண்டலமாக இருந்தன. வயல்களில் நிரம்பிய நீரில் நன்னீர் மீன்கள் வாழ்ந்தன. அதிலிருந்த ‘உளுவை’ போன்ற சில மீன் வகைகளை, இப்போது பார்க்கவே முடியவில்லை. நண்டு, நத்தை போன்ற உயிரினங்களும் இருந்தன. இவற்றைத் தின்ன வரும் பறவைகளால், வயல்கள் நிரம்பியிருக்கும். வெளிநாடுகளிலிருந்து வலசைவரும் விருந்தாளிப் பறவைகளும் இவற்றில் உண்டு. சங்க காலத்தில் வயலில் அல்லி மலர்கள்கூடப் பூக்கும் அளவுக்கு, மருதம் செழுமையாக இருந்திருக்கிறது.”
“பின் என்ன ஆயிற்று?”
“பசுமைப் புரட்சி என்கிற திட்டம் வந்தது. வளமான வயலில் வேதி உப்புகளைக் கொட்டிப் பயிர் செய்யத் தொடங்கினார்கள். இதனால் மண்ணில் இருந்த மண்புழுக்களும் நுண்ணுயிர்களும் அழிந்தன. பிறகு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காகப் பூச்சிக்கொல்லியைத் தெளித்தார்கள். இதனால் மருத நிலத்தின் உயிர்ச்சூழலே அழிந்துவிட்டது. மனிதர்கள் செய்த இந்தச் செயல், இன்று மனிதர்களையே திரும்ப பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.”
“எப்படி?” என்று கேட்டான் மாசில்.
“வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் உணவு நஞ்சாகிவிட்டது. நிலத்தடி நீரும் நஞ்சாகிவிட்டது. குடிநீரில் நைட்ரேட்டின் அளவு அதிகமாகி, மனிதர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு நிரந்தர நோயாளிகளாகி வருகின்றனர்.”
மருதப்பூ மேலும் சொன்னது, “பசுமைப் புரட்சியால் வளம் இழந்த வயல்கள் இன்றைக்கு வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. இப்போது சொல்லுங்கள் குழந்தைகளே! இன்று மருதத் திணை என்றால், அது வயலும் வயலைச் சார்ந்த இடமுமா?”
‘இல்லை இல்லை’ என வெறுமையுடன் தலையசைத்தனர் குழந்தைகள். அதுதான் வேதிப்பொருளும் வேதிப்பொருளைக் கொட்டும் இடமும் ஆகிவிட்டதே! உறுதிமொழிக்கான நேரம் வந்துவிட்டது.
‘இயற்கை வேளாண்மை செய்வோம். நமக்கு உணவளிக்கும் விளைநிலங்களைக் காப்போம்.’
(அடுத்த வாரம்: கழிவுக் கடல்)
கட்டுரையாளர்: குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com