Last Updated : 25 Nov, 2015 12:12 PM

 

Published : 25 Nov 2015 12:12 PM
Last Updated : 25 Nov 2015 12:12 PM

பசுமைப் பள்ளி -10: கிரானைட் மலை

வணக்கம்

குழந்தைகளே! நான்தான் குறிஞ்சி மலர்.

பசுமைப் பள்ளியின் குழந்தைகள் தொலைவிலிருந்து, இந்த மலையைப் பார்த்தபோது முழுக்க ஊதா நிற சாயம் பூசியது போலிருந்தது. அருகே செல்லச் செல்லதான் அவை சாயம் அல்ல, பூக்கள் எனத் தெரிந்தது. அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக் குறிஞ்சிப் பூக்கள்.

குறிஞ்சியைப் பார்த்ததும் மகிழ் என்கிற சிறுவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “குறிஞ்சியே, திரும்பவும் உன்னை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு 12 ஆண்டுகள் ஆகும் இல்லையா?”

“அடுத்த 12 ஆண்டுகளில் இந்த மலையே இருக்குமா என்று தெரியவில்லை. பிறகு நான் மட்டும் இருப்பேன் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று வாட்டத்துடன் சொன்னது குறிஞ்சிப் பூ.

“ஏன் அப்படி சொல்கிறாய்?” எனக் கேட்டான் மகிழ்.

அப்போது ‘டொம்…’ என்று காதைக் கிழிக்கும் ஒலி தொலைவில் கேட்டது. குழந்தைகள் காதை மூடிக்கொண்டனர்.

“அது அருகே இருந்த மற்றொரு மலையை வெடி வைத்துப் பிளக்கும் ஒலி. மலைகளே சுக்குநூறாக அழியும்போது, மலையில் பூக்கும் நான் மட்டும் எப்படி வாழ முடியும்?”

“ஏன் இப்படி பிளக்கிறார்கள்?” மகிழ் கேட்டான்.

“கட்டிடங்களுக்குப் பளபளப்பான கிரானைட் கற்கள் போட, அதை உடைக்கிறார்கள்.”

“கிரானைட் கற்கள் மலையை உடைத்தா செய்கிறார்கள்?” - குழந்தைக்கு இந்தச் செய்தி புதிதாக இருந்தது.

“ஆமாம். சாலைகள், ரயில் பாதை போடப் பயன்படும் ஜல்லி கற்களுக்காக, அணை கட்ட என வேறு பல காரணங்களுக்காகவும் மலைகளை உடைக்கிறார்கள்.”

“சாலைகள் நமக்கு அவசியம்தானே?”

“சரி, அது உங்களுக்கான அடிப்படை வசதி என்பதால் அப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் கிரானைட் அவசியமா? நிறைய சம்பாதிப்ப தற்காகக் கோடிக்கணக்கான வயதுடைய மலைகளை உடைப்பது நியாயமா?”

“நியாயமே இல்லை” என்றனர் குழந்தைகள்.

“வானிலிருந்து பெய்யும் மழையைத் தாங்கி, அதை தம் காட்டிலும் புல்வெளிகளிலும் தேக்கி வைக்கிறது மலை. அப்படி தேக்கிய நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிட்டு சிறு சிறு ஓடைகளாக மாற்றுகிறது. அந்த ஓடைகள் இணைந்து ஆறாக மாறுகின்றன. எனவே, மலைகள் அழிந்தால் மனிதர்களும் அழிவார்கள். மலைகள் இல்லாவிட்டால் ஆற்று நீர் முழுவதும் ஒரே தடவையில் விரைந்து ஓடி, கடலில் கலந்துவிடும். விவசாயம் செய்யக்கூட, நீர் பத்தாது. நிலத்தடி நீரும் குறைந்து போகும்.”

குழந்தைகளுக்கு மலையின் அவசியம் புரிந்தது. இப்போது குறிஞ்சிப்பூ ஒரு கேள்வி கேட்டது. “குறிஞ்சித் திணை என்றால் என்ன குழந்தைகளே?”

“மலையும், மலையைச் சார்ந்த இடமும்” என்றார்கள் குழந்தைகள்.

‘இல்லை' என்று மறுத்து குறிஞ்சிப்பூ தலையை ஆட்டியது. “குழந்தைகளே! இன்றைக்கு குறிஞ்சி என்றால் அது கிரானைட்டும் கிரானைட் எடுக்கும் இடமும்”

குறிஞ்சிப் பூவின் குரலில் வேதனை வழிந்தோடியது. குழந்தைகளுக்கும் அது தொற்றிக்கொள்ள, அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்.

‘குறிஞ்சி என்பது எப்போதும் மலைதான். இனி அதை உடைக்க விடமாட்டோம்.'

(அடுத்தது: பலகைக் காடு)
கட்டுரையாளர்,
குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x