Published : 01 Jul 2020 08:58 AM
Last Updated : 01 Jul 2020 08:58 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கொரில்லா மார்பில் அடித்துக்கொள்வது ஏன்?

கொரில்லா ஏன் மார்பில் அடித்துக்கொள்கிறது, டிங்கு?

- வி. நிர்மலா தேவி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

கொரில்லாக்கள் அரிதாகவே இரண்டு கைகளாலும் மார்பில் அடித்துக்கொள்கின்றன. மலை கொரில்லா அச்சுறுத்தல் அல்லது ஆபத்து ஏற்படும் சூழல்களில் மார்பில் அடித்து இது தன்னுடைய எல்லை என்று எச்சரிக்கிறது. சண்டையில் ஜெயிக்கும் கொரில்லா, தன் வெற்றியை அறிவிக்கும் விதத்தில் மார்பில் அடித்துக்கொள்வதும் உண்டு.

சில்வர்பேக் கொரில்லா, குழு உறுப்பினர்களுக்குத் தகவல் பரிமாறிக்கொள்வதற்காக மார்பில் அடித்துக்கொள்கிறது. சில நேரம் ஆதிக்கம் செலுத்தும் இளம் கொரில்லாக்களுக்கு எச்சரிக்கை செய்யவும் மார்பில் அடித்துக்கொள்வதும் உண்டு. குட்டி கொரில்லா பெரிய கொரில்லாக்களைப் பார்த்து மார்பில் அடித்துக்கொள்கின்றன. மனிதர்கள்கூடத் தாங்க முடியாத துக்கத்தில் இருக்கும்போது மார்பில் அடித்துக்கொள்வதைப் பார்த்திருப்பீர்கள், நிர்மலா தேவி.

நான்கு மாதங்களாக வீட்டுக்குள்ளேயே இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்துவிட்டேன். யாரிடமும் சிரிக்கவோ பேசவோ தோன்றவில்லை. சாப்பாட்டிலும்கூட விருப்பம் இல்லை. மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் என்ன செய்வது, டிங்கு?

- ஆர். எம். நரேஷ் குமார், மேட்டுப்பாளையம்.

கரோனா போன்ற கொள்ளை நோய் காலகட்டம் நமக்குப் புதிது. தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் வீட்டுக்குள் இருப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை. இந்த இக்கட்டான சூழலைப் புரிந்துகொண்டு, நம்மைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். காலையிலும் மாலையிலும் பாடப் புத்தகங்களைப் படியுங்கள். வீட்டு வேலைகளில் உதவுங்கள். நல்ல பாடல்களைக் கேளுங்கள். பாடம் அல்லாத புத்தகங்களைப் படியுங்கள். வரைவதில் ஆர்வம் இருந்தால் வரைந்து பாருங்கள். நண்பர்களைச் சந்திக்கதான் இயலாதே தவிர, அவர்களுடன் போனில் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனால் நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபடுங்கள்.

தோட்டம் இருந்தால் செடிகளைப் பராமரியுங்கள். தினமும் 5 புதிய தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தத்தைத் தேடித் தெரிந்துகொள்ளுங்கள். செய்தித்தாள்களை வாசித்துப் பாருங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். தூங்குங்கள். இவ்வளவையும் செய்வதற்கு நேரம் போதாது. உங்கள் மனமும் சோர்வடையாது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவதை விட்டுவிட்டு, இந்த இக்கட்டான சூழலைச் சமாளித்து வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மனக் கஷ்டம் வராது. விரைவில் இந்தக் கரோனா பேரிடரை வெற்றிகொள்வோம். பழைய நிலை திரும்பி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் நரேஷ் குமார்.

ஆமைக்கும் கடலாமைக்கும் என்ன வித்தியாசம், டிங்கு?

- எஸ். ஜான்சி ராணி, விழுப்புரம்.

ஆமையின் ஓடு கடினமாக இருக்கும். கடலாமையின் ஓடு சற்று மென்மையாக இருக்கும். ஆமையின் ஓடு வளையங்களுடன் புடைப்பாகக் காணப்படும். கடலாமையின் ஓடு தட்டையாக இருக்கும். ஆமையின் கால்கள் குட்டையாகவும் வளையும் தன்மையுடையவையாகவும் இருக்கும். கடலாமையின் கால்கள் தண்ணீரில் வசிப்பதற்கு ஏற்றவாறு தட்டையான பாதங்களைக் கொண்டிருக்கும். ஆமை பெரும்பாலும் தாவர உணவுகளையே உண்ணும். கடலாமை தாவரம் மற்றும் இறைச்சியை உண்ணும். ஆமை 80 முதல் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. கடலாமை 20 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது, ஜான்சி ராணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x