

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தேனம்பாக்கம், காஞ்சிபுரம்.
1954-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 70 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி அளித்து வருகிறது.
கல்வியோடு கலை, விளையாட்டு, குழுச்செயல், கணினி பயன்பாடு, அறிவியல் கருவிகள் செய்தல், பலவகை போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள வைத்தல் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறது.
அறிவியல், தமிழ், கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் மன்றங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அப்துல் கலாம் அறிவியல் மன்றம் மூலம் அவரின் கனவை நிறைவேற்றும் விதமாக ஆண்டுதோரும் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது, முன்னாள் மாணவர்கள் ஒத்துழைப்புடன் இந்நாள் மாணவர்கள் அறிவியல் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் கிராமத்தைப் பசுமையாக்க விதைப்பந்துகள், மரம் நடுதல், பராமரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் இந்தப் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு ஒன்றிய அளவில் பரிசு பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு பிஎஸ்எல்வி சி 46 ராக்கெட் ஏவுவதைப் பார்க்க 15 மாணவர்களும் ஆசிரியர்களும் சென்றனர். 5 மாணவர்களும் ஆசிரியரும் இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கொல்கத்தாவில் நடத்திய சர்வதேச அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
சென்னை விஞ்ஞான ரதம் அமைப்பு மூலம் பருவத்துக்கு ஒருமுறை எளிய அறிவியல் சோதனைகள் செய்து காட்டப்படுகின்றன. மாணவர்கள் செய்து பார்க்கும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மூட்டைக்காரன் சாவடி, சென்னை.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவரும் இந்தக் காலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இந்தப் பள்ளி, இந்த ஆண்டு மட்டும் 162 புதிய மாணவர்களைச் சேர்த்து 529 மாணவர்களுடன் அதிக மாணவர் சேர்க்கைக்கான விருதைப் பெற்றிருக்கிறது! கல்வி, ஒழுக்கம், உள்கட்டமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. கல்வி அமைச்சரிடமிருந்து தூய்மை பள்ளிக்கான மாநில விருதை வாங்கியிருக்கிறது!
இயற்கைச் சூழல், சுகாதாரம், காற்றோட்டம் மிக்க இந்தப் பள்ளி தற்கால முறைப்படி தமிழ், ஆங்கில வழியில் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிவருகிறது.
ஏழை மாணவர்களுக்குக் காலை உணவு, இடைவேளையில் கடலை மிட்டாய், மதியம் விதம்விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பள்ளியின் ஒருபுறம் நெல், கம்பு, கோதுமை, கேழ்வரகு, சோளம் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. விவசாயத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
கணினிக் கூடமும், விளையாட்டு முறையில் கல்வி கற்பதற்கான நவீனக் கருவிகளும் இங்கே இருக்கின்றன. 8-ம் வகுப்பு முடித்து வெளியே செல்லும் மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடத்தி, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் கல்விச் சுற்றுலா, அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆங்கிலப் பேச்சு, ஆளுமைப் பண்பை வளர்க்க ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மூலமாக சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது, மாணவர்களிடையே உதவும் மனப்பான்மையை வளர்க்க ‘சிறார் சேவை இயக்கம்” செயல்படுகிறது. இதன் மூலம் பள்ளியில் உண்டியல் வைக்கப்பட்டு அவர்களால் இயன்ற தொகையைச் சேமித்து, உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. கேரள வெள்ள நிவாரணத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்தப் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.