Published : 01 Jan 2020 10:07 AM
Last Updated : 01 Jan 2020 10:07 AM

கணிதப் புதிர்கள் 16: தாத்தாவின் தோட்டம்

என். சொக்கன்

வரது தாத்தாவுக்குத் தோட்ட வேலை என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய வீட்டுக்கு முன்னால் பசுமையான ஒரு தோட்டத்தைக் காணலாம். காய்கறிகள், பழங்கள், பூக்கள், நடுவில் புல்வெளி என்று மிகச் சிறப்பாக அதை உருவாக்கியிருந்தார்.

வரது தாத்தாவுடைய பேரன் மும்பையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகத் தாத்தாவும் பாட்டியும் புறப்பட்டார்கள். திரும்பிவருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும். அதுவரை அவருடைய தோட்டத்தை யார் கவனித்துக்கொள்வார்கள்?

எதிர் வீட்டிலிருந்த சுப்பிரமணியனை அழைத்தார். “நாங்க திரும்பி வர்றவரைக்கும் எங்க தோட்டத்தைக் கவனிச்சுக்கறீங்களா?” என்று கேட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டார். தாத்தா மனநிறைவோடு மும்பைக்குக் கிளம்பினார். சுப்பிரமணியனும் சொன்னபடி அவருடைய தோட்டத்தைக் கவனித்துக்கொண்டார்.

ஆனால், ஓரிரு நாட்களுக்குப் பிறகு அவருக்கு இந்த வேலை சலிப்பாகிவிட்டது. காரணம், தாத்தாவுடைய தோட்டம் சிறியதாக இருந்தாலும், அதில் பலவிதமான செடிகள் நடப்பட்டிருந்தன. அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கவனித்துப் பராமரிப்பதற்கு நெடுநேரம் செலவானது. எப்படியாவது இந்த வேலையிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று யோசித்தார்.

அதேநேரம், தாத்தாவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் அவர் மீற விரும்பவில்லை. ஆகவே, இந்த வேலையை வேறு யாரிடமாவது ஒப்படைத்தால் என்ன என்று யோசித்தார்.

அதே தெருவில் ராகேஷ், சுரேஷ் என்று இரண்டு சுட்டிப் பையன்களை அழைத்துப் பேசினார். ‘‘தாராளமாச் செய்யறோம்” என்றார்கள்.

‘‘நீங்க தோட்ட வேலை செய்யற ஒவ்வொரு நாளுக்கும் 30 ரூபாய் தர்றேன்” என்று சுப்பிரமணியன் சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

‘‘இன்னிக்கே வேலையைத் தொடங்கிடறோம்.”

‘‘பணம் இப்போ தர மாட்டேன், தாத்தா திரும்பி வந்தப்புறம் மொத்தமாகச் சேர்த்துத் தர்றேன். இன்னொரு விஷயம், என்னிக்காவது நீங்க தோட்ட வேலை செய்யலைன்னா, அதை நானே செஞ்சுடுவேன். ஆனால், வேலை செய்யாததுக்குத் தண்டனையா, உங்களுக்குத் தரவேண்டிய பணத்திலிருந்து 40 ரூபாயைக் கழிச்சுடுவேன். சரியா?”

ராகேஷும் சுரேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பின்னர், ‘‘தாத்தா எப்போ வருவார்?” என்றார்கள்.

‘‘இன்னியிலேருந்து 14 நாள்ல தாத்தா வந்துடுவார். அதுவரைக்கும் நீங்க தோட்டவேலை செஞ்சா போதும்.”

‘சரி’ என்றார்கள் ராகேஷும் சுரேஷும்.

அன்று தொடங்கி, ஒவ்வொரு நாளும் ராகேஷும் சுரேஷும் தாத்தாவுடைய தோட்டத்தைக் கவனித்துக்கொண்டார்கள். அவர்கள் வேலையை முடித்ததும், அவர்களுக்குச் சேர வேண்டிய 30 ரூபாயைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார்
சுப்பிரமணியன்.

சில நாட்கள் அவர்கள் வேலை செய்யவில்லை. அந்த நாட்களில், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையிலிருந்து 40 ரூபாயைக் கழித்துக்கொண்டார் சுப்பிரமணியன்.

14 நாட்களுக்குப் பிறகு தாத்தா திரும்பி வந்துவிட்டார். தோட்டத்தைப் பார்த்து மகிழ்ந்தார். சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவித்தார்.

‘‘நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் தாத்தா. உங்க தோட்டத்துல வேலை செஞ்சதன் மூலமா எனக்கும் தோட்ட வேலையில ஆர்வம் வந்துடுச்சு. தொடக்கத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், இந்த வேலையால எந்த அளவுக்குச் சுறுசுறுப்பும் உடல்நலனும் கிடைக்குதுன்னு நல்லா தெரிஞ்சுகிட்டேன். நானும் எங்க வீட்ல ஒரு தோட்டம் போடப் போறேன்” என்றார் சுப்பிரமணியன்.

அன்று மாலை ராகேஷ், சுரேஷை அழைத்தார் சுப்பிரமணியன். அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையைக் கணக்கிட்டுப் பார்த்தார்.

அந்தத் தொகை பூஜ்ஜியமாக இருந்தது!

ஆம். ராகேஷ், சுரேஷ் செய்த வேலைக்கான சம்பளத் தொகையும், செய்யாத வேலைக்கான தண்டனைத் தொகையும் சமமாகிவிட்டது. ஆகவே, சுப்பிரமணியன் அவர்களுக்கு எந்தத் தொகையும் தர வேண்டியதில்லை.

ஆனால், சுப்பிரமணியன் அந்தச் சிறுவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்க விரும்பவில்லை. ஆகவே, அடையாளத் தொகையாக ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தார். ‘‘இனிமேல் இப்படி அடிக்கடி வேலைக்கு விடுமுறை விடக் கூடாது. சொன்ன வாக்கைக் காப்பாத்தணும்” என்று அறிவுரை சொல்லி, அனுப்பி வைத்தார்.

இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி: ராகேஷும் சுரேஷும் எத்தனை நாள் தாத்தாவுடைய தோட்டத்தைக் கவனித்துக்கொண்டார்கள்? எத்தனை நாள் அவர்கள் தோட்ட வேலைக்கு வரவில்லை?

(அடுத்த வாரம், இன்னொரு புதிர்)

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x