

ஆதி
பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் ‘அறிவை விரிவு செய்' பகுதியில் பல நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் குறித்த விவரம்:
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்,
மயிலை சீனி. வேங்கடசாமி
இயல், இசை, நாடகம் என மொழியையே மூன்றாகப் பகுத்து வளர்த்த பண்டைத் தமிழகத்தில், வளர்ச்சி பெற்றிருந்த கலைகள் ஏராளம். நமது கலை உன்னதங்கள் பலவற்றை இழந்துவிட்டோம், இப்போதும் இழந்துவருகிறோம். புகழ்பெற்ற தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய இந்த நூல் நமது கலைச் செழுமையின் முக்கியத்துவம், பின்னணி பற்றி எடுத்துரைக்கிறது.
இலவச மின்னூல்: http://www.tamilvu.org/library/lA417/html/lA417ind.htm
சினிமா ரசனை,
அம்ஷன்குமார், சொல் ஏர்
தமிழ்நாட்டில் சினிமா ரசனை பெரிதாக வளர்ந்திராத காலத்தில், அயல் சினிமாவையும் நம் சினிமாவையும் புரிந்துகொள்வது எப்படி, அவற்றின் கலைநுட்பங்கள், தன்மை குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவந்தவர் இயக்குநர் அம்ஷன்குமார். மகாகவி பாரதி, சர் சி.வி.ராமன் குறித்த அவருடைய ஆவணப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிய நூல் இது.
உலக சினிமா
3 தொகுதிகள், செழியன், விகடன்
காட்சி ஊடகங்கள் இன்றைக்கு வேறொரு வீச்சுக்குச் சென்றுவிட்டன. ஆனால், தொடங்கிய காலம் முதற்கொண்டு மிகப் பெரிய கதைசொல்லல் வடிவமாக திரைப்படங்கள் புகழ்பெற்றிருக்கின்றன. சினிமா என்ற காட்சி ஊடகம் மொழிகளைத் தாண்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. உலகின் பல்வேறு மூலைகளில் வெளியாகி கவனம் ஈர்த்த திரைப்படங்களைப் பற்றி இயக்குநர்-ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய வரவேற்பைப் பெற்ற சிறந்த தொகுப்பு இது.
சென்னப்பட்டணம், ராமச்சந்திர வைத்தியநாத்,
பாரதி புத்தகாலயம்
ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழகத்தின் வடகிழக்கு முனையில் உள்ள கடலோர நகரமான சென்னை, முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் தொடக்க காலம் தொட்டு சென்னையை வளர்த்தெடுத்தவர்கள், உழைக்கும் ஏழை, எளிய மக்கள். இந்தப் பின்னணியில் சென்னை நகரின் வளர்ச்சியை பின்தொடர்கிறது இந்த நூல்.
கோபல்ல கிராமம்,
கி. ராஜநாராயணன், அன்னம்-அகரம்
'கரிசல் இலக்கிய'த்தின் தந்தையாகக் கருதப்படுபவர் கி. ராஜநாராயணன் என்றழைக்கப்படும் கி.ரா. அவர் எழுதிய பல நாவல்கள் புகழ்பெற்றவை. அவற்றில் தலையாயது வட்டார மொழியில் எழுதப்பட்டு புகழ்பெற்ற 'கோபல்ல கிராமம்'. சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் இது.
முச்சந்தி இலக்கியம்,
ஆ.இரா. வெங்கடாசலபதி, காலச்சுவடு
புலவர்களும் இலக்கிய ஆளுமைகளும் படைப்பவை மட்டுமே இலக்கியம் என்றொரு மூடநம்பிக்கை இருக்கிறது. சாதாரண மக்களும் அதிகம் அறியப்படாத படைப்பாளர்களும் உலகின் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை அவர்களும் எளிய முறையில், மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட எளியோர் இலக்கியம் குறித்த நூல் இது.
தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம்,
செந்தீ நடராசன், என்.சி.பி.எச்.
இந்தியாவிலேயே அதிகக் கல்வெட்டுகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆவணப் படுத்துதலில் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தொன்மையானது. கீழடிச் சான்றுகளும் அதையே நமக்கு உணர்த்துகின்றன. இந்தப் பின்னணியில் தொல்தமிழ் எழுத்துகள், அவை கூற நினைக்கும் செய்திகளை இந்த நூலின் வழியாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மூத்த சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் செந்தீ நடராசன்.
கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்,
குடவாயில் பாலசுப்ரமணியன், சூரியன் பதிப்பகம்
தமிழகத்தில் பல முக்கியமான கல்வெட்டுகள் இருக்கும் இடங்கள் கோயில்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் கோயில்களைக் கட்டியதுடன் தங்களைச் சார்ந்த பல செய்திகளை கல்வெட்டுகளிலேயே பதித்துவைத்தார்கள். கோயில் கல்வெட்டுகள் பகரும் செய்திகள் தொடர்பாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது.
புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன்
தன் சிறுகதைகள் மூலமாக நவீனத் தமிழ் படைப்புலகை பெரும் பாய்ச்சலுக்கு இட்டுச்சென்றவர் புதுமைப்பித்தன். அடியோட்டமான சமூக விமர்சனம், பகடியான மொழிநடை, அதிகம் கவனம் செலுத்தப்படாத கரு என அவருடைய கதைகள் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே தமிழ்ச் சிறுகதைகளை வேறொரு தளத்துக்கு உயர்த்தின.
இலவச மின்னூல்: http://www.chennailibrary.com/ppn/ppn.html
இயற்கைக்குத் திரும்பும் பாதை,
மசானபு புகோகா, இயல் வாகை
மசனாபு புகோகா ஜப்பானில் வாழ்ந்த இயற்கை வேளாண் மேதை. 'எதுவும் செய்யாத வேளாண்மை' என்ற பெயரில், இயற்கையைச் சீர்குலைக்காமல், இயற்கைக்கு இணக்கமான வழிமுறைகள் மூலமாக வேளாண்மை செய்யும் முறையையும் அதற்கான தத்துவத்தையும் வகுத்துக்கொடுத்தவர். அவர் எழுதிய 'ஒற்றை வைக்கோல் புரட்சி' நூல் புகழ்பெற்றது. இந்த நூலும் முக்கியமானது.
| ஆசிரியரைக் கவர்ந்த நூல் |
பன்னிரெண்டாம் வகுப்புத் தமிழ் பாடநூலில் தரப்பட்டிருக்கும் ‘அறிவை விரிவு செய்' நூல்களில், தனக்குப் பிடித்த நூல் குறித்து விருதுநகர் மாவட்டம் ந. சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் இரா. இராஜசேகர் பகிர்ந்துகொள்கிறார்: ‘பிளஸ் 2' தமிழ் பாடப் புத்தகத்தில் விரிவானம் பகுதியில் உள்ள பூமணியின் ‘உரிமைத் தாகம்', உத்தமசோழனின் ‘முதல் கல்', தோப்பில் முகமது மீரானின் ‘தலைக்குளம்', சாந்தா தத்தின் ‘கோடை மழை' ஆகிய சிறுகதைகளையும் அவர்களுடைய நூல்களையும் மாணவர்களிடம் அறிமுகப்படுத்திப் பேசினேன். அப்போது தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்கள், அவர்களுடைய படைப்புகளைப் பற்றி எந்த நூல் வழியாகத் தெரிந்துகொள்ளலாம் என்று மாணவர்கள் கேட்டார்கள். சாரு நிவேதிதா எழுதிய ‘பழுப்பு நிறப் பக்கங்கள்' புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். அதில் கு. அழகிரிசாமி, சார்வாகன், தி.ஜ.ர. முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை பல சிறுகதையாசிரியர்களின் வாழ்க்கையுடன் பயணித்து, அவர்களுடைய சிறந்த படைப்புகளைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘துணையெழுத்து' நூல் 50 தமிழ் எழுத்து ஆளுமைகளின் கதைகளை, வாழ்க்கை சார்ந்த அனுபவத்தோடு பொருத்திக் கூறியுள்ள விதம் சிறப்பானது. |
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in