Published : 21 Aug 2019 11:02 am

Updated : 21 Aug 2019 11:02 am

 

Published : 21 Aug 2019 11:02 AM
Last Updated : 21 Aug 2019 11:02 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: குட்டி இளவரசனும் குள்ளநரியும்

the-little-prince

மருதன்

ஒரு நாள் குட்டி இளவரசன் ஒரு நரியைச் சந்தித்தான். ‘‘பார்க்க அழகாக இருக்கிறாயே, யார் நீ?”
‘‘நான் ஒரு நரி.’’
‘‘எதற்கு ஒரு நரி என்கிறாய்? நரி என்றால் போதாதா? உன்னைப்போல் வேறு பல நரிகளும் பூமியில் வசிக்கின்றனவா என்ன?’’
‘‘என்னது, பூமியிலா? அப்படியானால் நீ என்ன வேறு கிரகத்தில் இருந்து வந்த சிறுவனா?”
‘‘ஆம், முதல் முறையாக பூமிக்கு வந்திருக்கிறேன்.’’
‘‘ஓ, அதனால்தான் உனக்கு என்னைத் தெரியவில்லையா?’’ என்று சற்று வெட்கத்தோடு புன்னகை செய்தது நரி. ‘‘பூமி மிகப் பெரியது சிறுவனே. அதன் ஒரு துளியை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். இங்கே என்னைப்போல் நூறு, ஆயிரம் நரிகள் இருக்கிறார்கள்.

உன்னைப்போல் நூறு, ஆயிரம் சிறுவர்கள் இருக்கிறார்கள். இன்னும் என்னென்னவோ உயிரினங்கள் இருக்கின்றன. உன்னுடைய கிரகம் எப்படி இருக்கும்?’’
குட்டி இளவரசன் உச்சுக் கொட்டினான். ‘‘அதை ஏன் கேட்கிறாய்? என்னுடைய உலகம் ரொம்ப ரொம்பச் சிறியது. அதில் நானும் ரோஜாப்பூவும் மட்டுமே இருக்கிறோம்.’’

‘ஆ’ என்று வாயைப் பிளந்தது நரி. ‘‘ஒரே ஒரு ரோஜாப்பூவா?’’
‘‘ஆமாம். உனக்குத் தெரியுமா, இந்தப் பிரபஞ்சத்திலேயே நான்தான் ஒரே ரோஜா என்று அந்த ரோஜா என்னிடம் எப்போதும் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டிருக்கும். ஆனால், காலை முதல் இரவுவரை எப்போதும் ரோஜாவோடு இருப்பதற்கு எனக்கு அலுத்துவிட்டது. அங்கிருந்து இங்கே வந்துவிட்டேன்.’’
‘‘ஓ, உனக்கு விருப்பம் இருந்தால் நீ என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்ளலாம்’’ என்றது நரி.
‘‘நண்பன் என்றால் என்ன?’’

‘‘ஓ, ஒரு நரியிடம் இப்படி எல்லாம் கடினமான கேள்வியைக் கேட்கிறாயே? சரி, என்னால் இயன்ற அளவுக்கு விளக்கப் பார்க்கிறேன். நீ ஏதோ ஒரு வேலையாக பூமிக்கு வந்திருக்கிறாய். வழியில் என்னைப் பார்த்தாய், சில வார்த்தைகள் பேசினாய். நான் என் பொந்திலிருந்து வெளியில் வந்தபோது உன்னைக் கண்டேன், நீ கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து என்னாகும்?’’

குட்டி இளவரசன் விழித்தான். நரி தொடர்ந்தது. ‘‘நான் பேசி முடித்ததும் நீ உன் வழியில் நடந்து செல்வாய். நான் இரை தேடிய பிறகு என் பொந்துக்குத் திரும்பிவிடுவேன். அடுத்து நாம் இருவரும் சந்தித்துக்கொள்வோமா என்று தெரியாது. சந்திக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

அப்படியே சந்தித்தாலும் நாம் மீண்டும் உரையாட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நீ ஒரு சிறுவன், நான் ஒரு நரி. ஒருவேளை நீ என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் என்னாகும் தெரியுமா? இங்குள்ள நூறாயிரம் நரிகளில் நான் உனக்கு நெருக்கமான நரியாக மாறிவிடுவேன். அதேபோல் நான் உன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால், இங்குள்ள நூறாயிரம் சிறுவர்களில் நீ எனக்கு நெருக்கமானவனாக மாறிவிடுவாய்.’’
குட்டி இளவசரன் நரியை ஆச்சரியத்தோடு பார்த்தான். ‘‘அதாவது, இனி நீ ஏதோ ஒரு நரியல்ல, என்னுடைய நரி. அதேபோல் நான் உனக்கு ஏதோ ஒரு சிறுவனல்ல, உன்னுடைய சிறுவன். சரிதானே?’’
நரி தலையாட்டியது.

‘‘அப்படியானால் நாம் இந்த விநாடியே நண்பர்கள் ஆகிவிடுவோம். என்ன சொல்கிறாய்?” என்றான் குட்டி இளவரசன்.
நரி மகிழ்ச்சியோடு தலை அசைத்தது. மறுநாள் குட்டி இளவரசன் அதே வழியில் நடந்து வந்தபோது, நரி துள்ளிக்கொண்டு ஓடிவந்தது. குட்டி இளவரசனும் பாய்ந்து நரியை அணைத்துக்கொண்டான். கைகளைக் கோத்தபடி இருவரும் நடை போட்டுக்கொண்டிருந்தபோது குட்டி இளவரசன் திடீரென்று கேட்டான்.

‘‘இரண்டு பேரும் ஒன்றுபோல் இருந்தால்தான் நண்பர்களாக முடியும் என்று கட்டாயமில்லையா நரி?”
நரி தனது பழுப்பு நிற வாலைத் தரையில் தவழவிட்டபடிப் பதிலளித்தது. ‘‘சிறுவன் சிறுவனோடும் நரி நரியோடும்தான் நட்புகொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. எனக்கு ஒரு மான் நண்பன் இருக்கிறான். அந்த மான் ஏற்றுக்கொண்டால் புலி அதன் நண்பன். புலி ஏற்றுக்கொண்டால் காண்டாமிருகம் அதன் நண்பன். காண்டாமிருகத்தோடு நீ நட்புகொள்ளலாம். எந்த உயிரினத்தையும் எவரும் நண்பராக்கிக்கொள்ளலாம்.”
‘‘உயிரில்லாத பொருட்கள்?”

‘‘அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? இரைச்சலிட்டபடி பாய்ந்துகொண்டிருக்கும் இந்த ஓடைக்கு உன்னைப்போல் காலும் என்னைப்போல் வாலும் இல்லை. ஆனால், அதற்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா என்ன? மலைக்கு உயிர் உண்டு, மரத்துக்கு உயிர் உண்டு, பூமிக்கும் நீ வந்த கிரகத்துக்கும்கூட உயிர் உண்டு. உன் இதயம் எத்தனை பெரியது என்பதைப் பொறுத்து அத்தனை நண்பர்களை நீ சேர்த்துக்கொள்ளலாம்.”
‘‘என் இதயம் எத்தனை பெரியது?”

நரி சிரித்தது. ‘‘நான் நரி என்பதை மறந்துவிட்டு, என் கூர்மையான பற்களைக் கண்டு அஞ்சாமல் என் கையை நீ பிடித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா? அப்படியானால் உன் இதயம் ரொம்பவும் பெரியதுதான். அதில் இன்னும் இன்னும் நிறைய இடமிருக்கிறது.”

குட்டி இளவரசன் சட்டென்று எழுந்துகொண்டான். ‘‘நரி, நான் ரோஜாவைத் தனியே விட்டு வந்திருக்கக் கூடாது. நான் இல்லாமல் அது தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கும் அல்லவா? வாலும் காலும் இல்லாவிட்டாலும், முள்ளும் புதரும் போர்த்தியிருந்தாலும் அது என்னுடைய ரோஜா அல்லவா? நரி, உன் பூமியில் தினம் தினம் நூறாயிரம் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்தேன். எல்லாமே ரோஜாதான், எல்லாமே ஒரே நிறம்தான் என்றாலும் எதுவும் என்னுடைய கிரகத்து ரோஜா போலவே இல்லை. ஏனென்று இப்போதுதான் புரிகிறது. இங்கிருப்பது எல்லாம் விதவிதமான ரோஜாக்கள். ஆனால், எனக்கு நெருக்கமானது ஒரே ஒரு ரோஜாதான்.”

குட்டி இளவரசன் எழுந்து கொண்டதும் நரி கை குலுக்கியது. ‘‘இங்கே பல ரோஜாக்களைப் பார்த்ததாக உன் நண்பனிடம் சொல்வாயா?”
‘ ‘மாட்டேன்” என்று உறுதியான குரலில் சொன்னான் குட்டி இளவரசன். ‘‘மேலே சென்று என் ரோஜாவைப் பார்த்து அதன் கையைப் பிடித்துக்கொண்டு, எனக்குத் தெரிந்து இந்தப் பிரபஞ்சத்தில் நீ மட்டும்தான் ஒரே ரோஜா என்று சொல்வேன்.’’(பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய தி லிட்டில் பிரின்ஸ் நாவலைத் தழுவியது).

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com


இடம் பொருள் மனிதர் விலங்குகுட்டி இளவரசன்குள்ளநரிஆயிரம் சிறுவர்கள்ரோஜா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

cartoon

தளை அறுந்தது!

வெற்றிக் கொடி